உருவை அருவை ஒளியை வெளியை இருளைச் சிவமென் றிராதே – மருளைப் பிறிந்தறிவிற் கண்டதனைப் பின்னமற எங்குஞ் செறிந்தபொருள் தானே சிவம்
ஸ்ரீ ல ஸ்ரீ தருமை ஆதீன குரு முதல்வர்
கருத்து – சகளம், நிகளத்திரிமேனிகளாக்சிவன்இருப்பதைக்கூறும்பாடல்.
பதவுரை
சகளத் திருமேனி எனப்படும் உருவமாகவும், நிட்களத் திருமேனி எனப்படும் அருவமாகவும் ஒளியாகவும், ஆகாசமாகவும் இருள் எனும் மாயையாகவும் இருப்பது மட்டுமே சிவம் என்று இருக்காதே; மயக்கத்தினை விலக்கி மெய்யறிவில் கண்டால் உயிர்ப் பொருள்கள், உயிர் இல்லா பொருள்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளே சிவம் என்பதை அறியலாம்.
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும் கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும் தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும் அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவனுக்கு வரும் பயன்களை விவரித்துக் கூறும் பாடல்.
பதவுரை
சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் தான் பெற்ற தவத்தின் காரணமாக உலக முழுவதாலும் போற்றப்படும் பெருமையுடையவானகவும், மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுபவனாகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவருக்கும் பக்கத்தில் இருக்கும் நெருங்கிய உறவினன் போல் உரியவனாய் விளங்குவான்.
விளக்கஉரை
அமர்தல் – அமைதல். அமர்ந்திருத்தல்
அண்ணியன் – பக்கத்தில் இருப்பவன், நெருங்கிய உறவினன்
பெருமை, தவத்தினாலும், இனிமை அருளால் தோன்றும் பெறப்படும்
கருத்து – இந்திரனுக்கும், அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்த பாடல்.
பதவுரை
சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகள் வாழும் இடமானதும், செல்வத்தை உடையதும் ஆன அழகிய திருநின்றியூரில் வீற்றிருந்து அருளும் இறைவனே, இந்திரன் ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னை வழிபட, அதற்காக மகிழ்ந்து அவனுக்கு ‘நீ விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய அருளிய தன்மையும், காலங்கள் இணைவதான ‘காலை, நண்பகல், மாலை’ என்னும் மூன்று சந்திகளிலும், உருவத்திருமேனி ஆன இலிங்க உருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளாய்ச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதிகை மலையில் வீற்றிருக்க அவருக்கு அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன் உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.
விளக்கஉரை
தாபரம் – மலை, உடம்பு, நிலைத்திணைப் பொருள், மரப்பொது, இடம், ஆதாரம், பற்றுக்கோடு, பூமி, கோயில், இலிங்கம், உறுதி
சேர்வு – அடைதல், வாழிடம், திரட்சி, ஒன்று சேர்கை, ஊர், கூட்டம்
இந்திரன் எண்ணிக்கை எண்ணற்றது என்பதால் ஓர் இந்திரன்
சகளி செய்திறைஞ் சகத்தியன் – இலிங்கத் திருமேனியில் பாவனையால் அமைத்து வழிபாட்டில் கொள்ளப்படும் மந்திரங்களில் ‘பஞ்சப்பிரம மந்திரங்கள்‘ எனப்படும் ஐந்தும் , ‘சடங்க மந்திரங்கள்‘ எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும். சிவ வழிபாட்டினை ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்து சுருக்கமாகவும், வேத மந்திரங்களை முப்பத்தெட்டுக் கூறுகளாகச் செய்து வழிபாடு செய்யும் முறைகள் என சிவ நெறியில் விளக்கப்பட்டுள்ளன. ஆகையால் சிறந்த வழிபாடாக செய்த அகத்தியர் என்பதை முன்வைத்து இவ்வாறு அருளினார்.
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகந் தண்டை கொலுசும் பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பி னொலியும் முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலை யழகும் முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால் முடிந்திட்ட தாலி யழகும் சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ் செங்கையில் பொன்கங்கணம் ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற சிறுகாது கொப்பி னழகும் அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனாற் சொல்லத் திறமோ அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – அன்னையின் வடிவழகையும், திருமேனியில் அணிந்திருக்கும் பல்வேறு ஆபரணங்களையும், அதில் பதிக்கபெற்று இருக்கும் நவரத்தினங்களையும் குறிப்பிட்டு தன் இயல்பு நிலையினால் விளக்க முடியாமையை கூறும் பாடல் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! உன்னுடைய பத்துவிரல்களில் அணிந்திருக்கும் மோதிரங்கள் எத்தனை பிரகாசமானது? கால்விரல்களில் அணிந்திருக்கும் பாடகமும், தண்டையும், கொலுசும், பாதங்களில் இருக்கும் பச்சை நிற வைடூரியங்களால் இழைத்திட்ட சிலம்பின் ஓசையும், முத்துகளால் பதிக்கப்பெற்ற மூக்குத்தியும், ரத்தினங்களால் பதிக்கப்பெற்ற பதக்கமும், மனதினை மயக்கும்படியாக அணிந்திருக்கும் மாலை அழகும், முழுவதும் வைடூரியம் மற்றும் புஷ்பரா கத்தினால் செய்து முடிதிருக்கும் தாலி அழகும், , செம்மை உடைய கையில் பொன்னால் ஆன கங்கணமும், இந்த புவனத்தால் விலை மதிக்க முடிக்கமுடியா ஒளி பொருந்திய முகமும், அதில் தொடர்ச்சியாக இருக்கும் சிறு காதுகளில் வேறு நகைகள் அணியாத போதும் கும்மியாட்டம் போன்று ஒலி எழுப்பி கொண்டிருக்கும் கம்மலின் அழகும், அத்திவரதன் தங்கையும் ஆகிய சக்தியின் சிவரூபத்தை அடியேனால் சொல்ல இயலுமோ?
கருத்து – திருக்கடவூர் தலத்தின் பெருமைகளைக் கூறி, அதில் உறையும் இறைவனைப்பற்றி பெருமையாக உரைத்தும் அவனிடத்தில் பிறவி நீக்கம் செய்யுமாறு வேண்டும் பாடல்.
பதவுரை
முத்துக்கள் போன்று ஒளிர்விடுவதும், புதிய மலர்களைக் கொண்டுள்ளதும், வானம் வரை நீண்ட நெற்கதிர்கள் கொண்ட இடமானதும், கற்றவர்கள் நிறைந்த இடமானதும், குவளை மலர்களில் செழுமையான தேனை கொண்டதும், கரிய நிறம் உடையதும் ஆன கடலில் நீர் புகுந்து செல்லும்படியாகவும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! கூத்துக்கள் நிகழ்த்துபவனே! என்னுடைய வினைகளை முன்வைத்து படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனும் சலிப்புறவும், ஒவ்வொரு பிறவியிலும் என்னை படைத்ததால் எனது தாயாரும் சலிப்புறவும், மகளிர் கண்டு விலகும்படியாகவும் பகைகொள்ளுமாறும் பிணிகளும், மூப்பும் அலைகழிக்க, அதனைப் பின் தொடர்ந்து ஆசை சென்று இழுக்க தருமத்தின் வழியில் நிற்பவனாகிய எமனும் பல முறை உயிரினை எடுத்து அதன் காரணமாக வெறுக்கவும், அதன் காரணமாக நரகத்தில் துன்புறுமாறு அழித்தியும், சுழற்சியினைத் தரும் உடல் எனும் கொடிய சடலம் எடுத்தல் தான் எனக்கு விதிக்கப்பட்டதுவோ?
விளக்கஉரை
குறு – நிறம்
மணி – முத்து
இமைக்கும் – ஒளிவிடும்
மோடு – வயிறு
சகடு – உடல்
கறங்கு – காற்றாடி, கறங்கோலை, சுழற்சி, சத்தம்
மாதா உடல் சலித்தாள் எனும் பட்டினத்தாரின் பாடல் இங்கு ஒப்புமை கொண்டு சிந்திக்கத் தக்கது.
கருத்து – ஈசன் தன் பிறவியை வேறறுத்தப்பின் அவனையே முழுமையாக கண்டதை உரைக்கும் பாடல்.
பதவுரை
நீர் நிலைகள் நிறைந்துள்ள இடங்களை உடையதான திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவனும், சிறப்புகள் உடையவனுமான சிவ பெருமான் என் பிறவியை வேரறுத்தபின், யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை; அருவ வடிவமாகவும், உருவ வடிவமாகவும் நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகையான தெள்ளேணத்தினை நாம் கொட்டுவோம்.
விளக்கஉரை
வார் – நீர், ஒழுகு, வரிசை, கடைகயிறு
தெள்ளேணம் – கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு வகை
பிறவிக்கு காரணமான பாசத்தினை வேரோடு அறுத்தான் என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிறவிக்கு காரணமான வினைகளை(சஞ்சீதம், பிரார்த்தம், ஆகாமியம் ஆகிய வினைகளை) அறுத்தான் என்பது பொருத்தமாக இருக்கும்; யாவரையுங் கண்டதில்லை என்பதை முன்வைத்து வினைகளை நீக்க வல்ல முதல்வன் என்பதை உணர்ந்து கண்டு கொண்டேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருப்பெருந்துறை, திருவாரூர் ஆகியவற்றை யோக முறையில் உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளாக உருவகம் செய்வது யோகம் தொடர்வோரும் உண்டு.
போற்றப்படுவதாகிய உயிரை இடமாகக் கொண்டு நிலைபெற்று இருக்கும் புனிதத்துவம் மிக்கவனை, நான்கு திசைகளுக்கும், உமா தேவிக்கும் தலைவனாக் இருப்பவனை, மேலான திசை இரண்டிற்குள் ஒன்றான தெற்கு திசைக்குத் மன்னனாகிய கூற்றுவனை உதைத்தவனை அடியேன் புகழ்கின்றேன்.
விளக்கஉரை
இதயத் தாமரையில் உறைபவன்; உலகங்களுக்குத் தலைவன்; கால காலன்; உமையுடம் சேர்ந்து சிவசக்தி ரூபமாக இருப்பவன் எனும் இறை இயல்புகளை உணர்த்தும்
போற்றுதல் – துதித்தல்
புனிதன் – இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்
நல்ல மாதுக்கு நாதன் – ஆன்மாக்களுக்கு அருள் ஞானம் ஊட்டும் தாய் போன்றவன்
கூற்றுதைத்தான் – காலத்தை வென்றவன்
என் மனதிள் உள்ள தியானப் பொருளாகிய பரம் பொருளை நான் போற்றுவது போல் நீங்களும் போற்றுங்கள் எனும் கருணைக் குறிப்பு.
தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை காத்தல் என்பது தலைவன் ஆகிய ஈசனின் கடமை; ஆனால தன்னைக் சாராமல் அடைக்கலம் புகாதவர்களை காக்காமல் வஞ்சம் செய்பவன் அல்ல; தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை பிராப்த வினைகளை நீக்கி அவர்களைக் காப்பான்; தன்னைச் சாராதவர்களை பிராப்த வினைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வினைகளைக் கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்து அவர்களைக் காப்பான்.
விளக்கஉரை
இயல்பாகவே பாசங்களின் நீங்கி இருப்பவன் என்பதை முன்வைத்து பேரருள் உடைமை ஆகியவன் என்பதால் சார்ந்தாரைக் காத்தலையும், முடிவில் ஆற்றல் உடைமை என்பதை முன்வைத்து வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணரலாம். இவைகள் ஈசனின் எண்குணங்களின் தன்மைகள் ஆகும்.
வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப் பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை அருகுவந் தணைய நோக்கி அம்மையே என்னுஞ் செம்மை ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்
கருத்து – ஈசன், காரைக்கால் அம்மையாரை நோக்கி இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள் என்று உரைத்து அம்மையே என்று அழைப்பதை விளிக்கும் பாடல்.
பதவுரை
வரும் இவர் யார் என்று கேட்ட உமையம்மைக்கு, “எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள்; அதுமட்டும் அல்லாது பெருமை பொருந்திய வடிவமாகிய இப்பேய் வடிவத்தினை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறினார்; காரைக்கால் அம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.
கருத்து – முருகப் பெருமான் அகத்தியருக்கு ஆதாரங்களை தொட்டுக் காட்டி அது பற்றி உபதேசம் செய்த பாடல்.
பதவுரை
ஆறு இதழ்களாக பிறக்கின்றதும் நான்கு கலைகளை உடையதும் ஆன மணிபூரகம் எனும் இந்தத் தலமானது தவம் செய்ய முடியாதவர்களால் அடையப்பட முடியாததால் கொடியதாக இருக்கும் ஆகாசம் எனும் பரவெளியில் ஓர் இதழ் கொண்டும் சதாசிவ ரூபமாய் தோன்றும் போது இரு இதழ்களாக கொண்டும் முன்னேற்றம் அடைந்து ஐம்பத்தி ஓர் இதழுமாக ஆனது; வேறு எது பற்றியும் இனி நினையாமல் இந்த ஆதாரதத்திற்கு உரித்தான வித்தையினைத் தருவதாகிய ஐம்பத்தி ஓரு எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வாயாக.
விளக்கஉரை
பரவெளி – பரமன் உறையும் ஞானாகாசம், கடவுள்
விஞ்சை – கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல், தெரு
அம்மா! என்னுடைய மணிபூரக சக்ரத்தில் சதாசிவ தத்துவத்தை மேகமாகவும், மூன்று உலகங்களையும் குளிரச் செய்பவளாகவும் உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன் எனும் பாடல் கொண்டு ஒப்பு நோக்கி இதன் பெருமையினை அறியலாம்.
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் முற்றும்நன் கறிவாய் அறிந்தும் என்றனைநீ முனிவதென் முனிவு தீர்ந்தருளே
ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்
கருத்து – வள்ளல் என்று உரைத்திருப்பதாலும், என்னை ஈன்றவன் என்பதாலும் என் குற்றங்களைப் பொறுத்து அருள வேண்டும் என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
என்னை பெற்ற வள்ளலே, உலகினுக்கு வாயிலாக விளங்கும் தில்லை திருச்சபையில் நடனமிட்டு நடிப்பவனே, உலகிற்கு அரசனே, எண் குணங்கள் உடையவனே, தாம் பெற்ற குழந்தையின் நல்ல குணங்களையும், தீய குணங்களையும் பெற்றவர்கள் மட்டுமே அறிவார்கள் ; அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் கொண்டுள்ள குணங்களால் கொடியவனாக இருக்கிறேன்; என்னுடைய இந்த குணங்கள் அனைத்தையும் நீ முற்றும் நன்கறிவாய்; அவ்வாறு அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பினை நீக்கி ஆண்டருள்க.
விளக்கஉரை
மன்றில் – வாயில்முற்றம்
கொற்றவன் – அரசன், வெற்றியாளன்
முனிவு – கோபம், வெறுப்பு
எண் குணங்கள் – தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை (வட மொழி மூலம் – சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,நிரன்மயான்மா,சர்வஞ்த்வம்,அநாதிபேதம், அநுபத சக்தி,அநந்த சக்தி,திருப்தி)
கருத்து – உமையம்மை சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் ஏற்பட்டவைகளே போக, வேக, யோக வடிவங்கள் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
புவனங்களுக்கு நாயகனின் திருக்கண்களை நாயகி மூடியபோது சகலம், கேவலம், சுத்தம் ஆகிய தத்துவங்கள் ஒன்றான தன்மையான சங்காரம் ஒத்து எங்கும் இருள் சூழ்ந்த போது, தனது நெற்றிக் கண்ணை திறந்தார். அந்த முதல்வன் கொண்ட திருமேனிகள் போகம் கொள்வதன் பொருட்டு சில திருமேனி போகவடிவமும், வினையினை விடுதலை முன்வைத்து சில திருமேனி கோரவடிவமும், யோகமுத்தி தருவதன் பொருட்டு யோக வடிவமும் வெளிப்பட்டன; இவைகள் ஆன்மாக்கள் உய்வுறுவதன் பொருட்டு அருள்புரிக்கூடிவை என்பதால் இந்த அருளுதல் தொழில் செய்வதற்காக திருக்கண் புதைத்த திருவிளையாட்டின் வழி நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதற்கு இது சான்று.
புகைப்படம் : திரைப்பட இயக்குனர் - திரு. ஐயப்ப மாதவன்
கண்ணுக்குத் தெரியா இறைவன் இருக்கிறான் இல்லை எனும் வாதங்கள் தாண்டி கண்ணால் காண இயலா வைரஸ் என்பது நிஜமாக இருக்கிறது. மனித குலத்தில் இந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் சிக்கல் மிக அதிகம்.
ஒவ்வொரு முறையும் இயற்கை தன்னை தானே புதிப்பிக்கும் போது நிறைய இழப்புகளை சந்திக்கும்; இம்முறை தலைமுறை தாண்டிய இழப்புகள் அதிகம்.
எத்தனையோ துறை இருக்கையில் இந்த IT துறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனும் கேள்வி எழும். மிகப் பெரிய அளவில் பொருளை / செல்வத்தினை இந்தியாவிற்கு தரும் துறை பொருளாதாரத்தை துறை என்பதாலும், இந்த துறை முன்வைத்தே பல துறை துறைகள் இயங்குகின்றன என்பதாலும் இத்துறை எடுத்துக் கொள்ளப்படுகிறது
நேரடியான பாதிப்புகள், மறைமுக பாதிப்புகள் இங்கு அதிகம் என்பதும் காரணம்.
ஒவ்வொரு முறையும் இத்துறைக்கு பாதிப்பு வரும்போது இத்துறை தன்னைத் தானே வெவ்வேறு வழிகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இத்துறை இந்த முறை எடுக்கும் முடிவுகள் எண்ணிப்பார்க்க இயலாததாகவே இருக்கும்
பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரக்ஷிக்கவும் பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த பாலருக்கு அருள் புரியவும் சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும் சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும் பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னை ஏகாம்பரி நீயே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – தனது விருப்பங்களை அன்னை காமாட்சியிடம் விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
இந்த உலகத்தில் இருக்கும் காலத்தில் நல்வினை பற்றி நல்ல முறையில் பொருள் ஈட்டி செல்வம் பெற்றிடவும், அதை சிறந்த முறையில் பாதுகாத்திடவும், உன்னிடத்தில் மெய்யான பக்தி கொண்டு உன்னுடைய திருவடிகளை நித்தமும் காணும் பாக்கியன் உடைய பாலகனாகிய எனக்கு அருள் புரியவும், பெருமை பொருந்திய இந்த தேகத்தில் சிறு நோய்கள் வராமலும், செம்மை உடையவனாகிய கலிபுருஷன் வந்து அணுகா வண்ணமும், உன்னுடைய சேய் ஆகிய எனக்கு பாக்கியங்களைத் தந்து, விதிக்கப்பட்ட நெறி முறைகளில் வாழ்ந்து வெற்றி பெற்று வாழ்ந்து வரவும், உயிர்களிடத்தில் அன்பு,தயவு போன்றவை இல்லாமல் காலம் முடிந்த உடன் அதை நிறைவேற்ற வரும் காலன் என்னைத் தொடர்ந்து வர ஒட்டாமல் என்னை அன்புடன் காத்திடுவாய்; அதுமட்டுமின்றி உன்னிடத்தில் அன்பு மிக பூண்டு உன்னைப் பற்ரி சிறியவன் ஆகிய நான் சொன்ன கவியில் இருக்கும் பிழைகளைப் பொறுத்து காக்க வேண்டும்.
கருத்து – ஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும்பாடல்.
பதவுரை
தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.
விளக்கஉரை
தலம்- தென்குரங்காடுதுறை
விண்டார் – பகைவர்
விமலன் – மலமில்லாதவன்.
இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
கொண்டான் – கொண்ட சிவபிரான்.
திருமுறையில்குறிப்பிடப்பட்டுள்ளமலர்கள் – இண்டு
புகைப்படம் : தினகரன்
தோற்றமும் தன்மையும்
வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.
மருத்துவ குணங்கள்
இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்
அதிகை வீரட்டத்தை தலத்தில் எழுந்து அருளும் தூயோனும், சகல உயிர்கள் இடத்திலும் அவைகள் காத்து ரட்சிக்கப்படுவதன் பொருட்டு பந்தம் கொண்டு அருளுதலை செய்ய மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன் ஆனவனும், பெரியதான பவள மலை போன்றவனும், சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்ந்து இருப்பவனாகிய எம் பெருமானுடைய திருவடிகள் அன்றைய தினத்தில் மலர்ந்த தாமரைப் மலர்கள் போன்றவை; தன் வலிமையை ஆணவமாகக் கொண்டு இமயமலையை பெயர்த்து எடுத்த இராவணனுடைய ஆற்றலையும் போக்கியவை; ஏனைய பொருள்களும், உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே இருப்பவை; ஒலியினை எழுப்பி எரியக்கூடிய கழலை உடைய எம்முடைய மூர்த்தி நீண்ட வளர்ந்த வடிவினை கொண்டவை.
விளக்கஉரை
போது அலர்ந்த, அரக்கனையும் (உம்மை உயர்வு சிறப்பு) – முறையே மென்மையும் வன்மையும் அருளிய திறம் கூறல்
முந்தாகி – முதற்காலமாய் நின்று(சிவதத்துவ நிலை)
நான்காவது தொடர் (முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தி) – அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற சதாசிவ தத்துவ நிலை
ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் ஈசுவரத் தத்துவ நிலை
வெந்தாரது நீறு – இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும், அனைத்தும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் உணர்த்தியது
முந்தாகி – உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல்
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி – பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகன் என்ற விளக்கம் சில இடங்களில் காணப்படுகிறது; இது பொருந்தாமையால் இந்த விளக்கம் விலக்கப்படுகிறது.
கருத்து – சிவபூஜை முறைகளைக் கூறி, அதை செய்வதால் அவர்கள் முன்னோர்கள் நரக ஜன்மத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
இவ்வாறு உரைத்த படி திறமையாக சிவ பூஜை செய்வதன் பலன்களைக் கேட்பாயாக; கோடி ஜன்மங்களாக நரக ஜன்மத்தில் அழுந்தி இருக்கும் அவனுடைய முன்னோர்கள் இந்த சிவ பூஜை செய்வதால் விலக்கப்படுவார்கள்; இதை பொய்யாக உரைக்கவில்லை; இதை பயிற்சி செய்து பார்ப்பாயாக; புலத்தியனை உந்தனுக்கு இவ்வாறான சிவபூஜை செய்வதன் கருவைச் சொன்னேன்; இந்த பூஜை முறையில் என்னை வைத்து சிவனைவைத்து மௌனமாக அந்த சிவத்தை நோக்குவாயாக.
கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.
பதவுரை
உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால் யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.
இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங் கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும் அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய் முத்தியிலே நிற்கும் முறை
சிவஞானபோதம்
கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.
விளக்கஉரை
இந்தனம் – விறகு
அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.