
பாடல்
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – மயக்கம் உடையவர் எவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
பல்வேறு வழியில் பொருள் ஈட்டி அதனால் செல்வ செறுக்கு கொண்டு ஆழ்ந்த கீழ் நிலையில் இருபவர்களும், அறியாமையானது இருள் போல் மறைக்கும் காலத்தில் மின்னல் போல் தான் பெற்ற சிறு அறிவை பெற்றவர்களும், மருட்சி உடைய அழகிய பெண்ணைக் கண்டு அவர்களின் மோகத்தில் மயங்கி இருப்பவர்களும் தாம் செய்வது இன்னது என்று அறியாமல் இருப்பார்கள். இவர்களின் மயக்கம் கொண்ட சிந்தனையை மாற்ற இயலாது.
விளக்கஉரை
- மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி, வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #பத்தாம்_திருமுறை #திருமந்திரம் #திருமூலர் #முதல்_தந்திரம் #பிறன்மனை_நயவாமை