பாடல்
திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ
எட்டாம் திருமுறை – திருவாசகம் – திருக்கோவையார் – திருத்தெள்ளேணம் – மாணிக்க வாசகர்
கருத்து – சிவன் தனக்கு அருளிய முறையினை உரைக்கும் பாடல்.
பதவுரை
திருப்பெருந்துறையில் எழுந்து அருளும் சிவ பெருமான் என் பிறவியையும், அதற்கு காரணமான பாசத்தினையும் வேரறுத்தபின் யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை. அருவ வடிவமாகவும் உருவ வடிவமாகவும் நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி நாம் கை தட்டி பாடும் விளையாட்டாகிய தெள்ளேணம் கொட்டுவோம்.
விளக்க உரை
- ஓர் இடத்திருந்து பாடும்போது, முன்பு தாம் கண்டு வணங்கிய இடத்திலும், வணங்க நினைக்கும் இடத்திலும் உள்ள பெருமானது கோலத்தை நினைந்து பாடுதல் அடியவர்க்கு உண்டான இயல்பு. ‘திருவாரூர் பாடி’ ‘திருக்கோவையுள்ளும்’ என்பது அவ்வாறே குறிக்கப்படுகின்றன.