அமுதமொழி – விசுவாவசு – புரட்டாசி – 8 (2025)


பாடல்

கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றே என் உள்ளமும் நானும் கிடந்து அலந்தெய்த்து ஒழிந்தேன்
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா, திரு ஆரூரா
ஒரு பற்றிலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

திருவொற்றியூரிலும், திருஆலவாயிலும், திருவாரூரிலும், திருக்கச்சியேகம்பத்திலும் ஒரே நேரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே! கர்ப்பத்திலே சென்று பொருந்திய நாள் முதலாக உன்னுடைய திருவடிகளையே காண என்னுடைய மனம் உருகுகின்றது. நானும் பல்வேறு பிறவிக்கடலில் கிடந்து உழன்று சலித்து விட்டேன். அவ்வாறு நான் துன்புற்றதையும், எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக.

 விளக்கஉரை

  • ‘தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக’ எனும் விளக்கங்கள் சில இடங்களில் காணப்படுகின்றது. முதன் முதலில் கருவினை அடைந்த காலம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
  • கிடந்து அலைந்து அலந்தெய்த்து ஒழிந்தேன் ‍- உன்னை நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்பது வெளிப்படை.

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் #திருவொற்றியூர் #திருஆலவாய் #திருவாரூர் #திருக்கச்சியேகம்பம் #திருவடி #சைவத்திருத்தலங்கள் #திருமுறை #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *