பாடல் 10
மூலம்
காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்
பதப்பிரிப்பு
காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலே இதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றி இன்ப வெள்ளமாய் துன்னி என்னுள் சம்பந்தன்
வீற்றிருப்பது ஒன்றுமே மெய்
சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
கருத்து – குரு தன்னுள் வீற்றிருப்பது மட்டுமே மெய்யானது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
புறக்கண்களால் காணப்படும் காட்சிகள் எல்லாம் உண்மையானவை அல்ல; பஞ்ச இந்திரியங்களில் ஒன்றான காதுகளால் கேட்கப்படும் ஒலிகள் எல்லாம் உண்மையானவை அல்ல; முடிவுறும் செயல்கள் இதமாக தோன்றுவதும் உண்மையானவை அல்ல; இவைகள் எவ்விடத்தில் ஒன்றுகூடினாலும் அது உண்மையானது அல்ல; சிறப்பும், பெருமையும், அழகும் உடையதாக தோன்றி இன்பவெள்ளமாக பாய்ந்து என் உள்ளே சம்பந்தன் எனும் ஞானசம்பந்தன் வீற்றிருப்பது ஒன்றே மெய்யானது.
விளக்கஉரை
- பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
- மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
- புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #குரு #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்