
பாடல்
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – ஊன் எடுத்து அது விலக்க வழி தேடாமல் மாயும் வீணர்களுக்கு அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
எம்பெருமான் சிவனின் திருவடிகளை தொழுதல் செய்து தங்களது கைகளால் பூக்கள் தூவி அவர் தம் பெருமையை போற்றி வழிபாடு செய்யாதவர்களும், எல்லா வகையிலும் பெருமை உடைய அவரது திரு நாமத்தை தங்களது நாவினால் சொல்லாதவர்களும், உடல் வளர்ப்பதற்காக வருந்தி உணவினைத் தேடி வீணே அலைபவர்களுமான வீணர்கள் தங்களது உடலை காக்கைக்கு உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்யாமல் கழிக்கின்றனர். (அந்தோ பரிதாபம் மறை பொருள்)
விளக்கஉரை
- பொன்னடி – பொன்னைப் போலப் போற்றுதலுக்கு உரிய திருவடி
- நாக்கைக்கொண்டு – நாவைக் கொண்டு
- நாமம் – இறைவன் திருப்பெயர்
- நவில்கிலார் – கூறாதவர்கள்
- அலமந்து – வருந்தி
- கழிவர் – அழிந்தொழிவர்
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #தேவாரம் #ஐந்தாம்_திருமுறை #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்