
பாடல்
சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே
தேவாரம் - ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவனின் திருமேனி வடிவங்களை உரைத்து அவரை அன்றி எவரிடத்தும் அடிமை தொழில் செய்ய மாட்டோம் என உறுதிபடக் கூறும் பாடல்.
பதவுரை
நீண்ட சடையினை உடையவனும், ஒருகாதில் விளங்கும் சங்கினை காதணியாக அணிந்து இருப்பவனும், திரு நீற்றுச்சாம்பல் பூசிய மேனியில் பாம்பை அணிந்தவனும், விடை எனும் காளையினை வாகனமாக உடையவனும், புலித்தோலினை மேலாடையாக அணிந்தவனும், வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த ஆடையினை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான். அதனால் பாசத்தை முழுதும் உதறி எறியும் நிலையினை கொண்டவர்கள் ஆனோம். ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களை உடைய அரசனின் ஆணையினை கேட்கும் தொழில் உடையவர்களாக ஆகமாட்டோம்.
விளக்கஉரை
- விடை – இடபம்
- வேங்கை அதள் – புலித்தோல்
- உழை – மான்களுக்குள் ஓர் இனம்
- படை – படைவீரர் முதலிய ஏவலாளர் அனைவரையும்
- படியோம் – நிலையினை உடையோம்
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #06.98
![]()