குடித்துவிட்டு வருகையில்
அம்மா திட்டி தீர்ப்பாள்
மெதுவாக புன்னகை செய்வார்;
கைகளில் அடிபட்டு வரும்போது
எப்படி என்றால்
மெதுவாக புன்னகை செய்வார்;
முன்பொழுதுகளில் வீடு வந்து சேர்கையில்
நாங்கள் விளையாட்டாக
என்ன வாங்கி வந்திருக்கிறாய் என்போம்
மெதுவாக புன்னகை செய்வார்;
பின்வரும் நாட்களில் மிகத் தாமதாக வருவார்
தாமாகவே முன்வந்து
வாங்கி வந்ததை கூறுவார்
பின் மெதுவாக புன்னகை செய்வார்;
கண்கள் நிலைகுத்தி
தொலைக்காட்சியில் தொடர்கள் பார்ப்பார்
என்ன பார்க்கிறாய் என்றால்
மெதுவாக புன்னகை செய்வார்;
பெரு மழை வெள்ள நாட்களிலும்
பேருந்து தவிர்த்து
நடந்தே வருவார்
காரணம் கேட்டால்
மெதுவாக புன்னகை செய்வார்;
உணவு உண்கையில்
என்ன தின்கிறாய் தெரியுமா என்பாள் அம்மா
மெதுவாக புன்னகை செய்வார்;
எல்லாவற்றுக்கும் புன்னகை பதில் இல்லை
என்று கூறுவோம்
அதற்கும் மெதுவாக புன்னகை செய்வார்;
முக்கியமான பண்டிகை தினங்களில்
தனது மோதிரத்தையும் பிரேஸ்லெட்டையும்
தொலைத்துவிடுவார்
காரணம் கேட்டால்
மெதுவாக புன்னகை செய்வார்;
அடுத்து வரும் இரண்டொரு மாதங்களில்
மீண்டும் கிடைத்திருப்பது பற்றி பேச எத்தனித்தால்
மெதுவாக புன்னகை செய்வார்;
கடந்து சென்ற
ஆடி மாத நாளொன்றில்
நான் தகப்பன் ஆனேன்.
![]()








