அமுதமொழி – சார்வரி – வைகாசி – 15 (2020)


பாடல்

பிரமனும் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப்
   பேதையர் கண்(டு)அசங் கதிக்கப்
பிணிகளும் பகைக்க மூப்புவந்(து) அலைக்கப்
   பிந்தொடர்ந்(து) ஆசைசென்(று) இழுக்கத்
தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத்
   தாரணி சுமந்துநொந்(து) இளைக்கச்
சக(டு)எனச் சுழலும் கறங்(கு)எனக் கொடிய
   சடலமே எடுக்கநான் இலக்கோ?
+குருமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில்
   கோட்டிள(ம்) ++மோட்டுமோ மேதிக்
குலங்கள்போய்ப் படிந்து நலம்கிளர் செழும்தேன்
   குவளைமென்(று) உழக்கிய தோற்றம்
கரியமா கடலில் புகுந்துநீர் அருந்தும்
   காளமே கங்களோ எனலாய்க்
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
  காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்துதிருக்கடவூர் தலத்தின் பெருமைகளைக் கூறி, அதில் உறையும் இறைவனைப்பற்றி பெருமையாக உரைத்தும் அவனிடத்தில் பிறவி நீக்கம் செய்யுமாறு வேண்டும் பாடல்.

பதவுரை

முத்துக்கள் போன்று ஒளிர்விடுவதும், புதிய மலர்களைக் கொண்டுள்ளதும், வானம் வரை நீண்ட நெற்கதிர்கள் கொண்ட  இடமானதும், கற்றவர்கள் நிறைந்த இடமானதும், குவளை மலர்களில் செழுமையான தேனை கொண்டதும், கரிய நிறம் உடையதும் ஆன கடலில் நீர் புகுந்து செல்லும்படியாகவும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! கூத்துக்கள் நிகழ்த்துபவனே! என்னுடைய வினைகளை முன்வைத்து படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனும் சலிப்புறவும், ஒவ்வொரு பிறவியிலும் என்னை படைத்ததால் எனது தாயாரும் சலிப்புறவும், மகளிர் கண்டு விலகும்படியாகவும் பகைகொள்ளுமாறும் பிணிகளும், மூப்பும் அலைகழிக்க, அதனைப் பின் தொடர்ந்து ஆசை சென்று இழுக்க தருமத்தின் வழியில் நிற்பவனாகிய எமனும் பல முறை உயிரினை எடுத்து அதன் காரணமாக வெறுக்கவும், அதன் காரணமாக நரகத்தில் துன்புறுமாறு அழித்தியும், சுழற்சியினைத் தரும் உடல் எனும் கொடிய சடலம் எடுத்தல் தான் எனக்கு விதிக்கப்பட்டதுவோ?

விளக்க உரை

  • குறு – நிறம்
  • மணி – முத்து
  • இமைக்கும் – ஒளிவிடும்
  • மோடு – வயிறு
  • சகடு – உடல்
  • கறங்கு – காற்றாடி, கறங்கோலை, சுழற்சி, சத்தம்
  • மாதா உடல் சலித்தாள் எனும் பட்டினத்தாரின் பாடல் இங்கு ஒப்புமை கொண்டு சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *