
பாடல்
இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை
சிவஞானபோதம்
கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.
விளக்க உரை
- இந்தனம் – விறகு
- அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
- ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.