கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.
பதவுரை
உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால் யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.
கருத்து – முருகப்பெருமான் சிறப்புகளைக் கூறி அவர் ஆட்கொள்வோம் என்று உரைத்ததை கூறி உய்வதற்கு இதுவன்றி வேறு உபாயம் இல்லை என்பதை கூறும் பாடல்.
பதவுரை
திந்தோதிமி தீதத என்று பெரிய ஒலி எழுப்பும் உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் ஒலி எழுப்பும் செம்மையான பூரிகையும், ஆரவாரித்து ஒலி எழுப்பவும் பேரிகையும் வேத முழக்கங்கள் ஒலிக்கவும், சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களை கொன்று அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, அதில் இருந்து வழியும் ரத்தத்தினால் அந்த இடத்தை சிவந்த காடனெச் செய்து பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என்னுடைய தந்தையும் சதாசிவன் வழியில் வந்தவரும் எம் தலைவருமாகிய சிவபெருமான் பெற்று அருளிய புதல்வனே, மனத்தால் அளவிட முடியாத திருவருளை உடைய மான் போன்ற நோக்குடைய வள்ளியை நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, சிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே! தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்டு, இன்பமும் துன்பமும் நிறைந்த இயந்திரம் போன்ற இந்த உடம்பானது அழியத்துவங்குவதை கண்டப்பின் இந்த உடலானது விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. ஆகவே மனமே, நிலை இல்லாத நம் உடலை நிலைத்திருக்கும் என நம்பி மோசம் போகாதே; கிரெளஞ்ச மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம்; இதுதான் இன்ப நெறி என்பதை உணர்ந்து இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம்; இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்; ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்; இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு; நாம் வந்து விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்; முருகப் பெருமான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்; உய்வதற்கு உபாயமான சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலி எழுப்பி துதிப்பதை மறவாதே. இதைத்தவிர நாம் மேற்கொள்ள வேறு என்ன வழிபாட்டு முறைகள் உள்ளன?
கருத்து – வினை நீக்கம் செய்து முருகப் பெருமானும் ஒன்று சேர்தலை விரும்பி தெரிவிக்கும் பாடல்.
பதவுரை
சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடு ஆகுமாறு ஒலிக்கும்படியாக, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும் மற்றும் பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்தி உள்ள சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருக்காமல் நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகியும் ஜெய ஜெய என்று போற்றியும் ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகத்தினை உடையவராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், திருமகள் போன்றவளுமான வள்ளியுடன் கூடுதலை விரும்பியும் அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் உரித்தான பெருமாளே! பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை ஆகிய மார்க்கங்கள் அடைபடும்படி மூச்சை செலுத்தி, சிவ நெறியில் நின்று, தனித்து மேலிடத்தே நிற்கும் சிவ ஜோதியை திருமணம் செய்து ஒன்று கூடுதல் போலக் கூடி, பிறவி தோறும் தொடர்ந்து விளங்கி நிற்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மும்மலங்களும் உனது புன்னகையால் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபாடு கொண்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அத்தகையக் கலப்பால் இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் புதுமையானவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக.
விளக்கஉரை
இலி – இல்லாதவன், இல்லாதவள், இல்லாதது, இல்லாததைக் குறிக்கும் பின்னொட்டு
திரு ஒளி – ஞான ஒளி வீசுகின்ற மேருவெளியில் ஏறி நிற்றல்
காலின் இருவழி அடைபட்டு ஓடி – (கால்-பிராணவாயு) இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியே செல்லும் பிராணவாயுவினை அடைத்து சுழுமுனை வழி மேலேற்றுதல்
சிவ வழியுடன் உற்று – சிவயோக நெறியை அடைந்து மூச்சைப் பிடித்து கும்பித்து நிறுத்திச் செய்வதாகிய ஹடயோகம்
ஏகபர மீதே – கருவி கரணங்கள் யாவும் கழன்று, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அதற்கு அப்பாலாக இருக்கக் கூடியதான ஏகாந்தமான மேலிடத்தே ஆன்மா நிற்றல்.
தன்னம் தனி நின்றது தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ? மின்னும் கதிர்வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே (கந்தர்அநுபூதி)
எனும் பாடலும் ஒப்பு நோக்கி அறிக.
பாவை மணம் என மருவி – சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வது போல் இறைவனை அடைகின்ற முழுப் பக்குவம் இல்லை எனினும், சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன்.
கருத்து – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் வேண்டுதல்.
பதவுரை
சிலம்பு அணிந்த வீரக் கழல்களின் ஒலிகள் எட்டு திசைகளிலும் இருப்பவர்களின் செவிகளில் படும்படியாக ஒலிக்க, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்திய சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் படமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடிகளை வைத்திருக்காமல், நடனம் செய்து, அடியார்கள் அரகர என்றும் மனம் உருகி ஜெய ஜெய என்றும் போற்ற, பார்வதியுடன் இணைந்து ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பாகராக இருப்பவரான சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவை ஆன லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் நாயகனே, ஆராவாரத்துடன் போர் செய்து வெற்றி கொண்டவனாகிய இராவணின் ஆணவம் அழியுமாறு செய்தவனும் கயிலைமலையில் வீற்றிருப்பவனும் ஆன சிவனுடன் இணைந்து வீற்றிருப்பவனே! தவ நெறிப் பயனாய் பெறப்படுவதும் இருளும் ஒளியும் இல்லாத அழகிய நிலம் எனப்படுவதும் ஒளி வீசும் ஜோதி போன்றதுமான இடமானதும் மூலாதாரம் எனப்படும் ஆகி இடத்தில் இருந்து பிராணன் எனப்படும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி செய்து சுழுமுனை வழியாக மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே புறத்தில் கூடுதலை நிகழ்த்துதல் போல் அகத்தில் சிவ ஜோதியுடம் கூடி, அவ்வாறு விளங்கும் திருக்கோலத்தில் ஆணவம், மாயை,கண்மம் ஆகிய மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அதனால் அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அதனால் இவ்வுடல் நிலைபட்டது எனக் கருதும் படியாகப் பொருந்தி, இவன் முருகனுக்கு இளையவன் என்று என்னை விரிந்து கூறும்படியான பெரும் பேற்றை அருள்வாயாக.
விளக்கஉரை
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப் போரொடு – மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘அமளிப் போரொ டடியவர் கயிலைக் கான‘ எனும் வரிகளே பொருத்தமாக இருக்கும் என்பதாலும், வள்ளி நாச்சியார் இச்சா சக்தி, முருகப் பெருமான் ஞான மூர்த்தி என்பதாலும் பொருள் விலக்கப்பட்டுளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் கொள்ளுதல்
சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி – சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி” என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மூலாதாரம் பற்றி குறிப்பிட்டு இருப்பதாலும், தவ நெறியால் பெறப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதாலும், தவநெறியின் பயன் சிவசக்தி ரூபம் காணல் என்பதாலும் இப்பொருள் விலக்கப்பட்டுள்ளது.
பணாமுடி – பாம்பின் படமுடி; பணாமுடி தாக்க – ‘அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து‘ எனும் கந்தர் அலங்கார பாடலுடன் ஒப்பு நோக்கி அறிந்து உய்க.
தேவ ரிளையவ னெனவித் தார – முன்னர் கூறப்பட்ட மும்முனை நாடிகள் கொண்டும் ,
கருத்து – சரீரம் விடும் நேரத்திலும் முருகனை புகழ்ந்து உரைக்கும் சொற்கள் உதவும் என்பது பற்றியப் பாடல்.
பதவுரை
போரில் தோல்வி என்பதையே அறியாது எப்பொழுதும் வெற்றியைப் பெறும் போர் வீரா, மணம் வீசும்படியான மாலைகள் அணிந்த தோளை உடையவனே, கிரெளஞ்ச மலையை தனது வேலாயுதத்தால் துளைத்தவனே, சூழ்ச்சியினால் எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற வஞ்சனை பொருந்தியவனான சூரன் மாமரமாக நின்ற போது அவன் அஞ்சுமாறு போரிட்ட வேலனே, சிறப்புகள் உடைய கொன்றை மாலை மார்பில் திகழுமாறு ரிஷபத்தில் ஏறும் தந்தை ஆகிய சிவனுக்கு இனியவனே, தேன் போன்றவனே, அன்பர்களுக்கு என்றும் இனிய சொற்கள் வழங்கும் சேயே, மலைபோன்றதும், செம்மையானதும், அழகியதும் ஆன தோளை உடையவனே, திருச்செந்தூரில் உறையும் செந்தில் பெருமாளே! மெய்யானது எது என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், அதில் பொருந்தி இருக்கும் உண்மையைப் பார்க்காமலும், உயிரானது சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, தங்களுக்கு நல்லது என்று எதும் இல்லாதவர்கள் போல நின்று, அளவற்ற காம மயக்கத்தைத் தந்து திரிகின்ற பெண்களின் கூரியதான பொய்யான அன்பில் சோர்வடைந்து, எலும்போடு கூடியதான இந்த சரீரம் ஓய்ந்து உள்ளம் குலைந்து போன போதும், உன்னைப் பற்றி புகழ்ந்து உரைக்கும் சொற்கள் நின்று உதவும் என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க.
வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும் சூரனுக்கு அஞ்சாமல் இருக்கும் படி செய்து, அவர்கள் வாழும்படியாக விண்ணுலகை ஆளும் மேம்பாடு உடையவனே! கடுமையான விஷம் நீங்காத கழுத்தை உடைய திருநீலகண்ட உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக செய்ய, அவர்களோடு சண்டையிட்ட கடவுள் ஆனவரும், ரிஷப வாகனத்தின் மேல் ஏறி வருபவரும் ஆன சிவபெருமானின் புதல்வனே! எல்லாவற்றுக்கும் காரணமான மூல காரணனே! வேதப் பொருளாகி அதன் வடிவானவனே! உயிர்களிடத்தில் கருணை செய்வதில் பெருமலை போன்றவனே! தேவர்களின் பெருமாளே! வேதத்தின் உட் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு இயலாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும்,அவத்தைகளுக்கு உட்பட்டதாகிய விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரியமாகவும், அந்த நிலைகளில் இருந்து வேறுபட்டவனாகவும், மெய் அறிவு வடிவம் கொண்டவனாகவும், அன்பு செய்தல் தவிர்த்து வேறு வகையில் அடைவதற்கு முடியாதவனாய், மாய மலம் கொண்டவர்களால் நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், நிகரில்லாத ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும், அவத்தை நிலைகளில் கூடியதான விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், அதில் இருந்து றுபட்டவனாகவும் பேரறிவு உடையவனாகவும், நீண்ட கால், கை ஆகியவற்றொடு நடமாடும் இந்த உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாக நூல்களால் கூறப்படும் நிலைமையும், அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி யாது என்பதையும், ஒப்பில்லாத யமன் ஏவ, அதை நிறைவேற்ற ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள், மறக்காமல் உயிரைப் பிரிக்க வருகின்ற ஒரு நீதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ?
முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, புவி முதல் ஆகாயம் வரையிலான ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு நிலை இல்லாமல் அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான சைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும்; அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே! அன்புடன் மனம் கசிந்து உருகி முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்.
விளக்கஉரை
ஆவுடையாள் – பசு ஏறும் பிராட்டி – திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர்.
போர் செய்வதற்கு ஏதுவான உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் நிரம்பியதும், அசுரர்களின் பிணங்கள் குப்பை போன்று தோற்றம் உடையதாகி, எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகள் எல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளிலும் உள்ள ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் ஆகிய யானைகள் அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்கவும், தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்கவும், சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோன்ற, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊரானதும், பொன்னால் ஆனதுமான பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, செல்வங்களை அடைந்து, பொன் மலர்களைச் சிந்தும் படியாக வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே! மெய்ப் பொருளை அறிந்த ஞானி வடிவாகிய குறமகள் வள்ளியும், ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட வாகனமான மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை எனும் திருதலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே! வேண்டுவோர்க்கு வேண்டியதைத் அருளும் கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பம் தரத்தக்கதான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், அன்னம், வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், மா, பலா மற்றும் வாழை என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, எழில்மிகு திருவடியை முற்பிறப்பில் வணங்கியதால், உனக்கு வாகனமாக இப்பிறவியில் அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சந்த நாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னை உள்ளக் கசிவோடு மனம் கசிந்து தியானித்து, நன்றாக யான், உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ பதத்தையும் பெற்று, மெய் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அதனால் உண்டாகும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ?
விளக்கஉரை
உற்பனம் – விரைவில் அறிகை, உத்தமம், தோன்றியது, உற்பத்தி செய்தது, பிறப்பு, ஞானம், கல்வி, நிமித்தம்.
சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்று உரைத்து, ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்தியவனே! காணாபத்தியம், கௌமாரம், சௌரம், சைவம், வைணவம், சாக்தம் என வழங்கப்பெறும் ஆறு வகை சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே! சிவனின் புத்திரனாகிய சிவகுமாரனே! உன்னிடத்தில் அன்பு கொண்டு உன்னை நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே! திருமுருகன்பூண்டி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (வினைகளை களைவதன் பொருட்டு) உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து, பலமுறையும் பிரார்த்தித்து, எனது சுய அறிவினால் உன்னை உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும், ஜெபம் மேற்கொண்டு, உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக.
விளக்கஉரை
* நாரதர் ஒரு முறை யாகம் செய்த போது தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகுவை அனுப்பி அவர் மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.