
பாடல்
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்
பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – திருஇரட்டைமணிமாலை
கருத்து – பஞ்சாக்கர மந்திரத்தினை அதன் பொருள் பற்றி உரைப்போர் அதன் பொருளைக் காண்பார் என உரைக்கும் பாடல்
பதவுரை
தலையாகிய அண்டமாகிய சிவலோகத்திற்கு உரியவனும், ஆதிரை நட்சத்திற்கு உரியவனும், ஆலகால விஷத்தை உண்டதால் கரிய கண்டத்தை உடையவனும், செம்மை உடைய பொன் போன்ற திருவடிகளை உடையவனும் ஆன சிவபெருமானுக்கு உரித்தானதான தலையான மந்திரமாகிய பஞ்சாக்கர மந்திரத்தினை பற்றிக் கொண்டு அதன் பொருள் பற்றி தியானித்து தலை தாழ்த்தி வணங்குபவர் அந்த மந்திரத்தின் பொருளைக் காண்பர்.
விளக்க உரை
- தலையாயின – மேலான நூல்கள்
- ஆதிரையான் – இறைவன்
- தலையாய ஐந்தெழுத்து – மந்திரங்களுக்குள்ளே தலையான மந்திரம் பஞ்சாக்கர மந்திரம்
- சாதித்தல் – பற்றிக் கொண்டு தியானித்தல்
தாழ்தல் – தலை தாழ்த்தி வணங்குதல்