வெண்பொடி மேனியினான் கரு நீல மணிமிடற்றான் பெண்படி செஞ்சடையான் பிர மன்சிரம் பீடழித்தான் பண்புடை நான்மறையோர் பயின் றேத்திப்பல் கால்வணங்கும் நண்புடை நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – ஈசன் திருமேனியின் அழகுகளை உரைத்து அவர் உறையும் தலம் இது என்று உரைக்கும் பாடல்
பதவுரை
நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை ஓதி அதை உணர்ந்தவர்களும், பலவகையான மந்திரங்களையும் உரைத்த முறையில் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கியும் இருப்பவர்களால் தொழப்படுபவனும், வெண்பொடி ஆகிய திருநீற்றை பூசிய மேனியை உடையவனும், நீல மணி போன்ற கரிய கண்டத்தை உடைவனும், பெண்ணாகிய கங்கையினை சிரத்தில் பொருந்தியுள்ள சடையை உடையவனும், பிரமதேவனது தலையை அவர் பெருமை கெட அறுத்தவனும் ஆகிய ஈசன் நல்ல தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் ஆவான்.
நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானைஏறி வழி யேவரு வேனெதிரே அலைகட லால்அரையன் அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண்ணம் நொடித் தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து – உத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும்பாடல்.
பதவுரை
திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும், நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!
இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – சுந்தரர், இறைவனார் தம்மை ‘நம் தோழர்’ என்றும் ‘ ஆரூரன்’ என்றும் அழைத்ததை தம் திருவாக்கால் உரைத்தப் பாடல்.
பதவுரை
திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், ஊக்கத்துடன் பாடுபவர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு செய்து, எனக்கு பெரிய யானையை ஊர்தியாக அளித்து அருளச் செய்தான். அங்கு இருக்கும் மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் `இவன் யார்` என்று கேட்டபோது, `இவன் நம் தோழன்’ என்றும் ‘ஆரூரன்’ என்னும் பெயரினை உடையவன் என்றும் திருவாய் மலர்ந்து அருளினான். என்னே அவன் திருவருள்.
கருத்து – திருவொற்றியூர் திருத்தலத்தையும், திருவாரூர் திருத்தலத்தையும் விடுத்து தனியாக திருக்கோடிக்குழகர் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதன் காரணத்தை சிலேடையாக வினவும் பாடல்.
பதவுரை
வளர்பிறை எனப்படும் முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே! ஒற்றி எனும் ஒற்றியூரையும், ஆருர் எனும் திருவாரூரையும் என்ன காரணத்தால் அறுதியாக நீங்கிவிட்டு எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?
விளக்கஉரை
சிலேடை வகை – எத்துணையோ ஊர்கள் இருந்தும் அவைகளை எல்லாம் விடுத்து, ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும் எனும் பொருள் பற்றியது.
கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்
பதவுரை
கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும், கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும் ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?
விளக்கஉரை
மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள், சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்
கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும், கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில் எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?
தானெனை முன்படைத்தான் அதுஅறிந்து தன் பொன்அடிக்கே நான் எனப் பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வான்எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே
ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்
கருத்து – குற்றம் உடைய தன்னையும் பொருட்டாக மதித்து உடலையும், உயிரையும் மதித்த தன்மையை வியந்து கூறும் பாடல்.
பதவுரை
திருக்கயிலையில் வீற்றிருந்து அளும் முதல்வன் ஆகியவனும் உத்தமன் ஆகியவனும் ஆன ஈசன், தானே முன்பு என்னை இந்த பூமியில் தோன்றச் செய்து அருளினான்; தோற்றுவித்ததன் காரணத்தை உணர்ந்து அவனது பொன்போன்ற திருவடிகளுக்கு என்னளவில் (தோத்திரம்) பாடல்கள் செய்தேன்; படைப்பின் நோக்கம் உணர்ந்தும் அதிகம் பாடல்கள் பாடாமல் நாய் போன்ற குற்றம் உடைய என்னைப் பொருட்படுத்தாமல் என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதான யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!
விளக்கஉரை
அறிந்து – தோற்றுவித்தது என்பது பாடுதல் பொருட்டு என்று பெறப்படும்
நொடித்தல் – அழித்தல். நொடித்தான் மலை – (உயிர்களின் வினைகளை) அழிக்கும் கடவுளது மலை
கருத்து – திருவோணகாந்தன்தளி தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமைகளை உரைத்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
நித்தமும் பல் நீங்கியதும், இறந்தவர்களின் தலை ஆனதுமான மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கத் திரிந்து திருவோணகாந்தன்தளி என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமானே! யாம் வல்லமை மிக்கதாகிய பல கருத்துக்கள் சொல்லி உம்மை வாழ்த்திய போதும், நீர் திருவாய் திறந்து, எமக்கு தரத்தக்கதான யாதேனும் ஒருபொருளை, ‘இல்லை’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; அன்றியும் ‘உண்டு’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; உயிர்ப்பில்லா வாழ்வினை விட்டொழிய மாட்டாதவராக இருப்பவராகிய எம்மை நீர் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு?
விளக்கஉரை
உமக்கு அடியவர்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் என்பது குறிப்பு
கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.
பதவுரை
படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.
விளக்க உரை
படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.
விளக்கஉரை
குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
உறவிலேன், உறவு யார் – தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
ஒரு பிழை – பிறப்பெடுத்தது
ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது
கருத்து – ஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே, காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே, அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே, உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
விளக்கஉரை
‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’ என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது
மூலவர் புஷ்பவனேஸ்வரர் – திரிசூலமும், சடைமுடியும் கொண்ட சுயம்புலிங்கத் திருமேனி
பசுவை வதைத்த பாவம் , பித்ரு சாபம் ஆகியவற்றை நீக்கவல்லத் தலம்
வடக்கு நோக்கி உத்தரவாகினியாக பாயும் சிறப்புடைய வைகைக்கரையில் அமைந்துள்ள தலம்
கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக காட்சி அளித்ததால் ஆற்றைக் கடந்து மிதித்துச் செல்லாமல் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடியத் தலம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவனாரை வழிபட ஏதுவாக நந்தி விலகி வழிவிட்டு சாய்ந்தகோலத்தில் இருக்கும் தலம்
பாண்டியநாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூவராலும் பாடப் பெற்ற தலம்
கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம்
இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் – மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபம், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபம்
குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டதால் நெல்முடிக்கரை
பொன்னையாள் எனும் பெண் பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தும், போதிய நிதி இல்லாததால் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்த இடம்(36 வது திருவிளையாடல்)
சுச்சோதி எனும் மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்து, ஆற்றில் தட்சணை பொருட்களான பிண்டங்களை கரைக்க முற்பட்டபோது, முன்னோர்களே நேரடியாக வந்து கையில் வாங்கி கொண்டதால் காசியை விட வீசம்(முன்காலத்து அளவை) அதிகம் புண்ணியம் தரும் புஷ்பவன காசி எனும் பெருமைப் பெற்றத் தலம்
சிவலிங்கத்தைக் கதிரவன் (சூரியன்) வழிபட்டு, நவக்கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கும் வரம் பெற்றத் தலம்
பிரம்ம தேவன் அறிந்து செய்த பாவத்தை நீக்கிய திருத்தலம்
மகாவிஷ்ணு சலந்திரனைக் கொல்ல சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
காளிதேவி, சிவலிங்கம் வைத்து பூசித்த திருத்தலம்
தருமஞ்ஞன் என்ற அந்தணன் காசியில் இருந்து கொண்டு வந்த அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் பூவாய் மாறிய திருத்தலம்
செங்கமலன் என்பவனின் பாவங்கள் அனைத்தையும் நீக்கிய திருத்தலம்
திருமகளின் சாபம் தீர்ந்த இடம்
பார்வதி தேவி இறைவன் திருவருள் வேண்டித் தவம் செய்த திருத்தலம்
சலந்திரன் என்ற தவளைக்குச் சக்கரவர்த்தியாய் இருக்கும் படியான வரம் அருளப்பட்ட திருத்தலம்
நள மகாராஜாவிற்கு கலிகாலத்தின் கொடுமையை அகற்றி அவனுக்கு மனச்சாந்தி அளித்த திருத்தலம்
மாந்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் சிதம்பர நல் உபதேசம் வழங்கிய இடம்
தாழம்பூ தான் பொய் சொல்லி உரைத்த பாவம் நீங்க வேண்டி, சிவபெருமானை வணங்கி வழிபட்ட திருத்தலம்
உற்பலாங்கி என்ற பெண் நல்ல கணவனை அடையப்பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழும் வரம் பெற்றத் தலம்
திருப்பூவணத் திருத்தலத்தின் பெருமைகள் விரிவாகப் பாடும் நூல்கள் – கடம்பவனபுராணம். திருவிளையாடற் புராணம்
கந்தசாமிப்புலவர் எழுதியது – திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணநாதர் மூர்த்தி வகுப்பு, தலவகுப்பு,திருப்பூவணப் புராணம் என்ற நூல்கள்
மணிகர்ணிகை , வைகை நதி , வசிஷ்ட தீர்த்தம் , இந்திர தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி விசாகத் திருவிழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், ஆடி மாத / நவராத்திரி கோலாட்ட உற்சவங்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி காலங்களில் சிறப்பு வழிபாடுகள், புரட்டாசி நவராத்திரி உற்சவம், ஐப்பசி கோலாட்ட உற்சவம், கார்த்திகை மகாதீப உற்சவம், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், மாசி மகா சிவராத்திரி உற்சவம், பங்குனி நடைபெறும் 1௦ நாட்கள் உற்சவம்
மாவட்டம்
சிவகங்கை
முகவரி / திறந்திருக்கும் நேரம்
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பூவணம் அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623611
தேவாரத்தலங்களில் 202 வதுதலம் பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 11 வது தலம்
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 6 பதிக எண் 18 திருமுறைஎண் 1
பாடல்
வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
பொருள்
சோலைகளுடன் இருக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலத்தில் விரும்பி எழுந்தருளி இருக்கும் புனிதராகிய சிவபெருமான், அடியார்களுடைய மனக்கண்ணின் முன்னர் கூர்மையான மூவிலைச் சூலமும், நீண்டு வளர்ந்ததாகிய சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் வெண்மையான தோடும், இடிபோல பிளிர்தலை செய்து வந்த யானையின் தோலினை உரித்து போர்வையாக போர்த்தியும், அழகு விளங்கும் திருமுடியும், திருநீறணிந்த திருமேனியும் கொன்டவராக காட்சியில் விளங்குகிறார்.
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 11 திருமுறைஎண் 8
தீய எண்ணங் காரணமாக, தனது இடமாகிய கயிலையை பெயர்த்து எடுக்க முற்பட்ட போது நகை செய்து, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றியவனும், தன்னையே உருகி நினைப்பவரது ஒப்பற்ற நெஞ்சிலே உட்புகுந்து, எக்காலத்திலும் நீங்காது உறைபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?
கருத்து – சக்கராயுதத்தை திருமாலுக்கு வழங்கியவன் திருநன்னிலத்துப் பெருங்கோயிலில் உறைக்கின்றான் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
அறத்தினை முன்வைத்து நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் என்று வழங்கப்படுவதும், பாதாளம் போன்று இருக்கப் பெற்றதுமான வாயைக் கொண்டவனும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்னொரு காலத்தில் , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.
விளக்கஉரை
பிலம் – பாதாளம்; கீழறை; குகை; வளை
நலம் – நன்மை, அறம், சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.
நிலந்தரு – மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகளுக்கு உரித்தானவன்.
கருத்து – ஈசன் தனித்து இருந்து கோடிக்கரையில் உறைதல் குறித்து வினா எழுப்பியப் பாடல்.
பதவுரை
மைபொருந்திய பெரிய கண்களை உடைய உமையம்மை ஆகிய இறைவியின் பாகத்தை உடையவனே! கங்கையும் வேறிடம் இல்லை என்பதை உணர்ந்து உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாள்; இவ்வாறு இரு மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க பூக்கள் பொருந்திய சோலைகளைகளில் இருந்து பூக்களைப் பறித்து சூடி கையில் நிறைந்த வளைகளையுடையவளும் காட்டை உரிமையாக உடையவளும் ஆன காளியோடு கூடிதான கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாயே, இஃது எவ்வாறு?
கருத்து – திருஅஞ்சைக்களத்து நாயகனை கேள்விகள் கேட்டு அருளப்பண்ண வேண்டும் எனும் பாடல்.
பதவுரை
உருவத்தில் சிறியதாக இருக்கும் இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவனாக இருக்கும் சிப்பி, முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதும், வலம்புரிச்சங்கை மேலே கொண்டு வலிமையாகவும், பெரியதாகவும் முழங்கம் செய்வதும், ஆர்ப்பரிக்கும் கடலினை கொண்டு அழகிய கரையினை உடையதுமான ‘மகோதை’ என்னும் நகரித்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, தன்னிடம் அடையும் உடல்களை எல்லாம் சமமாக எரிப்பதால் வலிமை உடையது ஆகிய புறங்காட்டில் எரியில் ஒலிக்குமாறு நின்று ஆடியது என்? இறந்தவரது தலை மண்டை ஓட்டினை பாத்திரமாக்கி பிச்சை ஏற்பது என்? உன்னை வாழ்த்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? மேம்பட்டவர்க்கு எல்லாம் மேலானவனே, விருப்பம் கொண்டதை சொல்லி அருளுவாய்.
விளக்கஉரை
திருஅஞ்சைக்களம் – சுந்தரர் முக்தித் தலம் (இன்று ஆடி சுவாதி, சுந்தரர் முக்தி அடைந்த தினம்)
அகழி அமைப்புடன் கூடிய கருவறையில் சதுர ஆவுடையாரில் அழகிய சிவலிங்கத் திருமேனி
துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டி நின்றதால் அவன் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவன் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்த தலம்; சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் ‘சுழி’, ‘திரு’ எனும் அடைமொழி சேர்ந்து ‘திருச்சுழியல்’
ஐந்து விநாயகர் திருவடிவங்கள் உள்ள திருத்தலம் – தாவர விநாயகர், போதி விநாயகர், அரசு விநாயகர், வேலடி விநாயகர், தருமதாவரப் பிள்ளையார்
சித்திரை வேலைப்பாடுகளுடன் கூடிய உட்பிரகாரத்தின் மேற்புறம்
திரிபங்கி லட்சண அமைப்பில் அம்பாள் – இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம். அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம்
தண்டு போல் இருக்கும் மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்கள் காக்கப்படுதல் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களைக் காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி செய்வதற்காக வில்லை வளைத்துத் வலிமை உடைய செய்வதற்காக தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலமாகிய திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள் இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர்
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 82 திருமுறைஎண் 7
கருத்து – இந்திரனுக்கும், அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்த பாடல்.
பதவுரை
சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகள் வாழும் இடமானதும், செல்வத்தை உடையதும் ஆன அழகிய திருநின்றியூரில் வீற்றிருந்து அருளும் இறைவனே, இந்திரன் ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னை வழிபட, அதற்காக மகிழ்ந்து அவனுக்கு ‘நீ விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய அருளிய தன்மையும், காலங்கள் இணைவதான ‘காலை, நண்பகல், மாலை’ என்னும் மூன்று சந்திகளிலும், உருவத்திருமேனி ஆன இலிங்க உருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளாய்ச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதிகை மலையில் வீற்றிருக்க அவருக்கு அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன் உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.
விளக்கஉரை
தாபரம் – மலை, உடம்பு, நிலைத்திணைப் பொருள், மரப்பொது, இடம், ஆதாரம், பற்றுக்கோடு, பூமி, கோயில், இலிங்கம், உறுதி
சேர்வு – அடைதல், வாழிடம், திரட்சி, ஒன்று சேர்கை, ஊர், கூட்டம்
இந்திரன் எண்ணிக்கை எண்ணற்றது என்பதால் ஓர் இந்திரன்
சகளி செய்திறைஞ் சகத்தியன் – இலிங்கத் திருமேனியில் பாவனையால் அமைத்து வழிபாட்டில் கொள்ளப்படும் மந்திரங்களில் ‘பஞ்சப்பிரம மந்திரங்கள்‘ எனப்படும் ஐந்தும் , ‘சடங்க மந்திரங்கள்‘ எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும். சிவ வழிபாட்டினை ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்து சுருக்கமாகவும், வேத மந்திரங்களை முப்பத்தெட்டுக் கூறுகளாகச் செய்து வழிபாடு செய்யும் முறைகள் என சிவ நெறியில் விளக்கப்பட்டுள்ளன. ஆகையால் சிறந்த வழிபாடாக செய்த அகத்தியர் என்பதை முன்வைத்து இவ்வாறு அருளினார்.