
பாடல்
பாறு தாங்கிய காட ரோபடு
தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
கடிக ளாகிய அடிகளே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – சிவன் சிறப்புகளை சொல்லும் பாடல்.
பதவுரை
நமக்குத் தலைவராய் உள்ளவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் அழிந்த தலையை ஏந்தியவரோ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ? குழைய அணிந்த திருச்செவியினை உடையவரோ? சிறிய இடைவெளி கொண்ட கொம்பினை உடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ? சுடப்பட்ட திருநீற்றை அணிந்தவரோ? விளங்குகின்ற பிறையோடு கூடிய ஆற்றைச்(கங்கை) சுமந்த சடையை உடையவரோ? சொல்லுமின்.
விளக்க உரை
- பாறு – விலங்குகளின் பிணங்களைத் தின்று வாழும் பறவையினம், பிணந்திண்ணி கழுகு, எலும்புண்ணிப் பாறு
- ஆணவம் கொண்ட தலையை உடையவரது அழிவு தலையின் மேல் ஏற்றி உரைக்கப்பட்டது
- குறுங்கோடு – இளைய ஏறாகல் / இளைய காளை
- தலைவர் – நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்