அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 20 (2023)


பாடல்

வெண்பொடி மேனியினான் கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் திருமேனியின் அழகுகளை உரைத்து அவர் உறையும் தலம் இது என்று உரைக்கும் பாடல்

பதவுரை

நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை  ஓதி அதை உணர்ந்தவர்களும், பலவகையான மந்திரங்களையும் உரைத்த முறையில் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கியும் இருப்பவர்களால் தொழப்படுபவனும், வெண்பொடி ஆகிய திருநீற்றை பூசிய மேனியை உடையவனும்,  நீல மணி போன்ற கரிய கண்டத்தை உடைவனும்,  பெண்ணாகிய கங்கையினை சிரத்தில் பொருந்தியுள்ள சடையை உடையவனும்,  பிரமதேவனது தலையை அவர் பெருமை கெட அறுத்தவனும் ஆகிய ஈசன் நல்ல தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் ஆவான்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #ஏழாம்_திருமுறை  #தேவாரம்  #சுந்தரர் #திருநன்னிலத்துப்_பெருங்கோயில் #சோழநாடு #காவிரித்_தென்கரை_தலங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 25 (2021)


பாடல்

ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமீயச்சூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்

பதவுரை

ஒப்பற்ற கங்கையைச் சூடிய சடையினை உடையவராகியும்,  பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டு வேறு வேறு  வேடத்தராகியும் அன்னையை தன்னுடை உடலின் பாகத்தில் கொண்டவனும் ஆனவன் அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலில் பார்வதி தேவியாரொடு விடையேறி அருள்செய்யும் மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 26 (2021)


பாடல்

குறைவி லாநிறை வேகுணக் குன்றே
   கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
   ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
   செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
   ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.

விளக்க உரை

  • குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
  • உறவிலேன், உறவு யார் –  தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி  பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
  • ஒரு பிழை – பிறப்பெடுத்தது
  • ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 7 (2021)


பாடல்

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் சிறப்புகளையும், திருமேனியில் இடம் பெறும் பொருள்களின் சிறப்புகளையும் கூறும் பாடல்.

பதவுரை

நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவனாகவும், சந்திரனை சூடிய வீரனாக இருப்பவனாகவும், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன் ஆவான்.

விளக்கஉரை

  • தொங்கல் – (மாலை) கொன்றை
  • மதி – பிறை
  • மைந்தன் – வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
  • விழுப்பம் – மேன்மை.
  • விழுப்பம் பயக்கும் நெதி – திருவருளே தனக்கு மேலே ஒன்றில்லாச் செல்வம் என்பது பற்றியது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 22 (2020)


பாடல்

கற்றவர்க்குக் கோபம் இல்லை! கடந்தவர்க்குச்
     சாதி இல்லை! கருணை கூர்ந்த
நற்றவர்க்கு விருப்பம் இல்லை! நல்லவருக்கு
     ஒருகாலும் நரகம் இல்லை!
கொற்றவருக்கு அடிமை இல்லை! தண்டலையார்
     மலர்ப் பாதம் கும்பிட்டு ஏத்தப்
பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை! பிச்சைச் சோற்றினுக்கு
     இல்லை பேச்சுத் தானே

தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்

கருத்து – பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை எனும் பழமொழியினை உறுதி செய்ய திருத்தண்டலை இறைவனை முன்வைத்து எழுதப்பட்டப்  பாடல்.

பதவுரை

மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு சாதி வேறுபாடுகள் இல்லை; வீடு பெறுதற்கு தவம் செய்பவர்கள் ஆகிய துறந்தவர்களுக்கு விருப்பம் என்பது இல்லை(வெறுப்பும் இல்லை என்பது மறை பொருள்); நன்மை செய்வதையே திடமாக் கொண்டு வாழும் நல்லவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் தரதக்கதான நரகம் என்பது இல்லை; நெறி முறைகளோடு கூடி சிறந்த முறையில் ஆட்சி செய்யும் கொற்றவன் எனும் அரசனுக்கு அடிமை என்பது இல்லை; யாசித்து உண்பவனுக்கு பேச்சு என்பதே இல்லை; மலர் போன்ற பாதங்களை உடைய தண்டலையார் பதம் பணிபவர்களுக்கு பிறப்பு என்பது இல்லை.

விளக்க உரை

  • தண்டலை என்பது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களுள் ஒன்று. ‘திருத்தண்டலை நீள்நெறி‘ என்பது இதன் முழுப்பெயர். இத்தலத்திலுள்ள சிவபெருமான் மீது பாடிய நூலே தண்டலையார் சதகம் ஆகும்
  • சிறப்புடைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இதற்கு பழமொழி விளக்கம் எனும் பெயரும் உண்டு. (பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்)
  • தில்லையில் பொருள் இல்லாமல் தங்கி இருந்தபோது தில்லை சிவகாமி அம்மையைப் பாடிய போது,   அம்மையின் அருளால் ஐந்து பொற்காசுகள் வீழ்ந்தன; காசுகள் விழும்போது ‘புலவருக்கு அம்மையின் பொற்கொடை’ என்ற ஒலி எழுந்தது அன்றுமுதல் – படிக்காசுப் புலவர்
  • தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றவர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 16 (2020)


பாடல்

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.

விளக்க உரை

  • தலம்- தென்குரங்காடுதுறை
  • விண்டார் – பகைவர்
  • விமலன் – மலமில்லாதவன்.
  • இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
  • கொண்டான் – கொண்ட சிவபிரான்.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – இண்டு

புகைப்படம் : தினகரன்

தோற்றமும் தன்மையும்

  • வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
  • சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
  • செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
  • காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
  • வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.

மருத்துவ குணங்கள்

  • இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 3 (2019)


பாடல்

இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊணுகந்த வருத்தியே

மூன்றாம் திருமுறை –  தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஉலகமாகவும், உலகப் பொருள்கள்கள் அனைத்திலும் உறையும் ஈசன் ப்ரமன் தலை கொய்து மண்டையோட்டில் யாசித்து உண்ணுவதை பழிப்பது போல் சிறப்பித்துக் கூறியது.

பதவுரை

கயல் மீன் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருத்தலம் ஆனதும், பொலிவு உடையதும் ஆன திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதனாகிய இறைவன் உலகினுக்கும், உயிருக்கும்  விரும்பியவற்றை அளிக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும், அனைத்து உயிர்களிடத்தும் அவைகளோடு கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை கொண்ட போதிலும் வானில் இருந்து உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய பொய்யானதான ஐந்தாவது சிரத்தை அயலார்கள் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அந்த மண்டை ஓட்டில் பிச்சையேற்று உண்ணும் விருப்பம் கொண்டது என்ன காரணத்தால் என்று மெய்யடியார்களே எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக.

விளக்க உரை

  • இறைவனுமாய் நிறைசெய்கையை – உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் நின்று, அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை பற்றியது.
  • புயல் – மேகம்.
  • பொழிந்து – மழைபோல் பெய்து
  • வானவர்களுக்காக அயன்தலையைக் கொய்தது – படைத்தலுக்கு உரித்தான கர்த்தாவின் தலையைப் கிள்ளி அதன் வலிமையின்மையையும், படைப்பவனான ப்ரமனை படைப்பவனாகிய பழையவன் இவனே என வானவர் தெளிவதற்காகவும் தலையை கொய்தது

சமூக ஊடகங்கள்