திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில் குட்டிக் கொண்டு, அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத் தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும் ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல் ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே
பதவுரை
குமரப் பெருமானே! அடர்ந்ததும், செம்மை நிறம் உடையதுமான சடையின்மீது கங்கை நதியையும்,நாகத்தையும், கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவராகிய திருமுருகப்பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குபவரே! முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேனை, பிரபஞ்சம் என்னும் மாயச் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்!
விளக்கஉரை
பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை ஆகிய சஞ்சீதம் கர்மாவின் தொடர்ச்சியாகிய நற்பேறு. தவம் என்பது இந்தப் பிறவியில் செய்வது.
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில் தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே
பதவுரை
திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில் குட்டிக் கொண்டும், அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும் ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.
கருத்து – முருகப் பெருமானிடத்தில் ஐம்பொறிகள் வழி செல்லும் அவாவினை அறுத்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
அமரர்கள் ஆகிய தேவர்களின் துன்பம் நீங்குதல் பொருட்டு, வஞ்சனையும் கொடூரமும் பொருந்திய சூரனை,அவனுடைய கார் மேகம் போன்ற கரிய நிறமுடைய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறு கூர்மையான கூலாயுததை செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயே அவனை அழித்தவரே! ஐம்புலன்களாகிய ஐவரும், தேவரீரின் திருவடிப் பெருமைகளை ஆராய விடமாட்டாதவர்களாகவும், உலகின் ஒரே பரம் பொருளாகிய தேவரீரை நினைக்க விடமாட்டாமலும், பூசிக்க தக்க மலர்களால் தங்களை அர்ச்சித்து, தேவரீரின் மலர் போன்ற திருவடிகளைச் சென்று அடைய விடமாட்டாமலும் செய்கின்றனர்; அடியேன் என்ன செய்வது?
கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.
பதவுரை
உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால் யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.
கருத்து – முருகப்பெருமான் சிறப்புகளைக் கூறி அவர் ஆட்கொள்வோம் என்று உரைத்ததை கூறி உய்வதற்கு இதுவன்றி வேறு உபாயம் இல்லை என்பதை கூறும் பாடல்.
பதவுரை
திந்தோதிமி தீதத என்று பெரிய ஒலி எழுப்பும் உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் ஒலி எழுப்பும் செம்மையான பூரிகையும், ஆரவாரித்து ஒலி எழுப்பவும் பேரிகையும் வேத முழக்கங்கள் ஒலிக்கவும், சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களை கொன்று அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, அதில் இருந்து வழியும் ரத்தத்தினால் அந்த இடத்தை சிவந்த காடனெச் செய்து பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என்னுடைய தந்தையும் சதாசிவன் வழியில் வந்தவரும் எம் தலைவருமாகிய சிவபெருமான் பெற்று அருளிய புதல்வனே, மனத்தால் அளவிட முடியாத திருவருளை உடைய மான் போன்ற நோக்குடைய வள்ளியை நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, சிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே! தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்டு, இன்பமும் துன்பமும் நிறைந்த இயந்திரம் போன்ற இந்த உடம்பானது அழியத்துவங்குவதை கண்டப்பின் இந்த உடலானது விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. ஆகவே மனமே, நிலை இல்லாத நம் உடலை நிலைத்திருக்கும் என நம்பி மோசம் போகாதே; கிரெளஞ்ச மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம்; இதுதான் இன்ப நெறி என்பதை உணர்ந்து இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம்; இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்; ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்; இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு; நாம் வந்து விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்; முருகப் பெருமான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்; உய்வதற்கு உபாயமான சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலி எழுப்பி துதிப்பதை மறவாதே. இதைத்தவிர நாம் மேற்கொள்ள வேறு என்ன வழிபாட்டு முறைகள் உள்ளன?
உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர் உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள் உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில் உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்து – அசுரர்களை அழித்து தேவர்களை காத்தது பற்றியும், பார்வதியின் புத்திரன் என்பது பற்றியும் விளித்து அடைக்கலம் புகுந்தேன் என்று குறிப்பிடும் பாடல்.
பதவுரை
கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்றதும், பசு இனங்கள் வாழ்கின்ற இடமானதும், முல்லை நிலத்திற்கு தலைவனாகிய திருமாலின் நிறம் போல் கறுத்தும், வலிமையும் உவர்ப்புமுடைய கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கி அழித்த தெய்வமே, ஆட்டு வாகனத்தில் ஏறும் உஷ்ணத்தை உடைய அக்கினியின் சொரூபமாகவும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் அழகியதும் அஞ்சனம் தீட்டி செவிகளை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு ஆன விழிகளின் கிருபைக்கும் ஒப்புவமை இல்லாத உண்ணாமுலை என்கிற பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.
வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப் பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் திருவடிபற்றி சும்மா இருத்தல் எனும் அநுபூதி நிலையினை வேண்டி நிற்கும் பாடல்.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக் கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல் விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் அருள் தானாகவே வெளிப்பட்டு அருளும் திறத்தைக் கூறும் பாடல்.
பதவுரை
தன்னிச்சையாக செல்லும் மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடை செய்யுங்கள்; கோபத்தையும், வெறுப்பையும் அறவே விட்டு விடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்; புறத்தில் அசைவற்று இருப்பது போலே அகத்தில் அசைவற்று இருங்கள்; இவ்வாறு செய்தால் மிகக் கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடைய தம்பியாகிய தாருகன் கிரௌஞ்ச மலையையும் பிளந்து அது துகளாகி பட்டு அழியும் படி கூர்மையான வேலினை விடுத்து ஏழு உலகங்களும் பிழைக்குமாறு அருளிய தனிப் பெருந்தலைவனாகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும்.
வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன் வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – தனது சாயல் தனக்கு உதவாது போல் செல்வம் உதவாது என்பதை உரைத்து முருகப்பெருமானை துதிக்கச் சொல்லும் பாடல்.
பதவுரை
இந்த உலகில் வெய்யில் காலத்தில் ஒதுங்கி நிற்கக் கூட உதவாத இந்த உடலின் பயனற்ற நிழலைப் போல தனது இறுதி வழிக்கு உங்கள் கையிலுள்ள பொருள் எனப்படுவதாகிய செல்வமும் துணை செய்ய மாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆகவே செல்வத்தின் நிலையாமைக் கண்டு கொண்டும் உணர்ந்து கொண்டும் கூர்மையானதும் ஒளி வீசும் படியாகவும் அழகானதுமான வேலையுடைய திருமுருகப் பெருமானைத் துதித்து வினையின் காரணமாக தரித்திரனாக இருப்பவனுக்கு எப்போதும் நொய்யில் பாதி அளவாவாயினும் பங்கிட்டுக் கொடுங்கள்.
விளக்கஉரை
வை – வைக்கோல், வைக்கவும், கூர்மை
வறிஞன் – தரித்திரன்
வடி – அழகு
வெறு நிழல் – பயன்படாத நிழல்
அரிசில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டதான நொய்யுணவாக உண்பவராக இருந்தாலும் பகிர்ந்து உண்ணுங்கள். வறுமை இருப்பினும் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்துகிறது.
‘தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்‘ எனும் திருமந்திரப் பாடல் வரிகளுடனும் (செல்வம் நிலையாமை), ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே‘ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடனும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண் சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக் கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் வடிவ அழகினையும், அவனின் ஆயுதங்களையும் பற்றி பேசாமல் பெண்ணாசையில் வீழ்ந்து இருப்பின் முக்தி அடைய இயலாது என்பதை கூறும் பாடல்.
பதவுரை
ஏ மனமே! திருச்செந்தூர் திருமுருகப் பெருமானின் திருக்கையில் விளங்குவதும் எப்பொழுதும் வெற்றியைத் தருவதுமான வேலாயும் என்று சொல்லாமலும்; வெற்றியைத் தருவதாகிய மயில் என்று சொல்லாமலும்; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்று சொல்லாமலும் அவைகளைப் பற்றி புகழாமலும் பெண்களில் சொற்கள் பால் போன்று இருக்கிறது என்றும், அவர்கள் பாதங்கள் பஞ்சைப் போன்று மென்மையாக இருக்கிறது என்றும், அவர்களின் கண்கள் மீனைப் போன்று இருக்கின்றன எனவும் சொல்லித் திரிகின்றாய்; ஆதலால் நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனம்?
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே
பதப்பிரிப்பு
முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
எல்லா காலங்களிலும் வெற்றியை தரும் வேலாயுதத்தைத் தாங்கியவரும், தம்முடைய திருவடிகளை வணங்குகின்ற அடியவர்களுக்கு எப்பொழுதும் நன்மையைத் தருகின்ற பெருமாளும், அசுரர் கூட்டம் அழியும்படி அக்கூட்டத்தை தூளாகச் செய்த பெருமாளுமாக விளங்கும் திருமுருகப்பெருமானின் திருநாமத்தை ஓதுபவர்கள், தாண்டமுடியாத பிறவிப் பெருங்கடலில் மூழ்கமாட்டார்கள்; எல்லா நலன்களையும் கெடுக்க கூடியதான வறுமைப் பிணியால் வேதனைப்பட மாட்டார்கள்.
விளக்கஉரை
சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகப் பெருமான். அந்த சச்சிதானந்தப் பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் என்று போற்றி வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே பிரகிருதி மாயை ஆனதால் மாயைக்கு குக மாயை என்னும் பெயரும் உண்டு. பிரம்மா முதலான காரணம் மாயையே என்பதாலும் படைப்புத் தொழிலை செய்தவன் என்பதாலும் முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள்.
கருத்து – வினை நீக்கம் செய்து முருகப் பெருமானும் ஒன்று சேர்தலை விரும்பி தெரிவிக்கும் பாடல்.
பதவுரை
சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடு ஆகுமாறு ஒலிக்கும்படியாக, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும் மற்றும் பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்தி உள்ள சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருக்காமல் நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகியும் ஜெய ஜெய என்று போற்றியும் ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகத்தினை உடையவராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், திருமகள் போன்றவளுமான வள்ளியுடன் கூடுதலை விரும்பியும் அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் உரித்தான பெருமாளே! பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை ஆகிய மார்க்கங்கள் அடைபடும்படி மூச்சை செலுத்தி, சிவ நெறியில் நின்று, தனித்து மேலிடத்தே நிற்கும் சிவ ஜோதியை திருமணம் செய்து ஒன்று கூடுதல் போலக் கூடி, பிறவி தோறும் தொடர்ந்து விளங்கி நிற்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மும்மலங்களும் உனது புன்னகையால் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபாடு கொண்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அத்தகையக் கலப்பால் இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் புதுமையானவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக.
விளக்கஉரை
இலி – இல்லாதவன், இல்லாதவள், இல்லாதது, இல்லாததைக் குறிக்கும் பின்னொட்டு
திரு ஒளி – ஞான ஒளி வீசுகின்ற மேருவெளியில் ஏறி நிற்றல்
காலின் இருவழி அடைபட்டு ஓடி – (கால்-பிராணவாயு) இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியே செல்லும் பிராணவாயுவினை அடைத்து சுழுமுனை வழி மேலேற்றுதல்
சிவ வழியுடன் உற்று – சிவயோக நெறியை அடைந்து மூச்சைப் பிடித்து கும்பித்து நிறுத்திச் செய்வதாகிய ஹடயோகம்
ஏகபர மீதே – கருவி கரணங்கள் யாவும் கழன்று, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அதற்கு அப்பாலாக இருக்கக் கூடியதான ஏகாந்தமான மேலிடத்தே ஆன்மா நிற்றல்.
தன்னம் தனி நின்றது தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ? மின்னும் கதிர்வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே (கந்தர்அநுபூதி)
எனும் பாடலும் ஒப்பு நோக்கி அறிக.
பாவை மணம் என மருவி – சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வது போல் இறைவனை அடைகின்ற முழுப் பக்குவம் இல்லை எனினும், சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன்.
கருத்து – முருகப் பெருமானின் பெருமைகளைக் கூறி அவரின் வேலும் மயிலும் இருப்பதால் அடியார்களான தங்களுக்கு மரணம் இல்லை என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
கிண் கிணிகள் ஒலிக்கும் படியான திருவடிகளை உடையவரும், இந்திரனின் துணைவியான சசி தேவி எனும் இந்திராணிக்கு மங்கல நாணினைக் காப்பாற்றி அருளியவரும் கருணைக்கு உறைவிடமானவரும், அறிவு வடிவமானவரும் ஆன தேவ சூரியனே! எந்நாளும் எங்களுக்கு துணையாக ஒளி படைத்த மயிலும் வேலும் இருப்பதால் துயரம் தரதக்கதான இறப்பு என்னும் அபாயம் தேவரீரின் அடியார்களாகிய எங்களுக்கு என்றும் இல்லை.
சூலம் பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும் காலன் தனக்கு ஒருகாலும் அஞ்சேன்; கடல்மீது எழுந்த ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன் வேலும் திருக்கையும் உண்டே நமக்கு ஒரு மெய்த்துணையே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் வேலாயுதம், திருக்கரமும் துணையாக இருப்பதால் சூலாயுதத்தையும், பாசக் கயிற்றை கொண்டு வரும் காலனுக்கு அஞ்சமாட்டேன் எனும் பாடல்.
பதவுரை
பாற்கடலை கடையும் போது தோன்றிய ஆலகால விடத்தை உண்டு உயிர்களை காத்து அருளிய சிவபெருமானின் திருக்குமாரனாகிய ஆறுமுகப் பெருமானுடைய வேலாயுதமும், அபயம் அளிப்பதான திருக்கரமும் நமக்கு ஒப்பற்ற உண்மைத் துணையாக உளதால் சூலாயுதத்தைக் கையில் பிடித்துக் கொண்டும், பாசக் கயிற்றைச் சுழற்றிக் கொண்டும் உயிர்களைப் பின்தொடர்ந்து வந்து அவர்களின் உயிர்களை எடுக்க வருகின்ற காலனுக்கு அடியேன் ஒருபோதும் அஞ்சமாட்டேன்.
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே
பதப்பிரிப்பு
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான் ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு கை வைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் பெருமைகளைச் சொல்லி உடல் அழிவதற்கும் முன்னமே தன்னைக் காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.
பதவுரை
தெய்வீகம் பொருத்தியதும் அழகானதும் ஆன மலையாகிய திருச்செங்கோட்டில் வாழக்கூடியவரான செழுமையான சுடர் போன்றவரே, கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்டு வானில் வாழ்பவர்களுக்கு தலைவனாகவும் தெய்வமாகவும் இருப்பவனே! உன்னை மறவாமல் இருக்கும் பொருட்டு ஐவர் எனப்படுபவர்களாகிய பஞ்ச இந்திரியங்கள் கொண்டும் அதனுடன் இரண்டு காலகளையும், இரண்டு கைகளையும் ஒட்டியதான இந்த உடம்பு எனும் வீடு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்கு முன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக.
சேய் உரு அமைந்த கள்வன் செருவினை இழக்கல் ஆற்றான் மாயையின் ஒன்று காட்டி எனை இவண் மையல் செய்தான் ஆயது துடைத்தேன் என்றால் ஆர் எனக்கு ஒப்பு உண்டு என்றும் காயம் அது அழிவு இலாதேன் கருத்து அழிகின்றது உண்டோ
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – மாயை நீக்கம் பெற்ற சூரபன்மன் ஈசனும் முருகப்பெருமானும் வேறு வேறு அல்ல ஒன்றே என்பதை உணர்ந்தியும் தன்னிடத்தில் பற்றுக் கொள்ள வைத்ததையும் கூறும் பாடல்.
பதவுரை
சேய் ஆகிய முருகப் பெருமான் எனும் வடிவாக இருக்கக் கூடிய கள்வன் இவன்; சினத்தையும் வருத்தத்தையும் தருவதான வினைகளை நீக்க வல்லவன்; இவன் காயம் ஆகிய உடலால் அழிவில்லாதவன் எனும் கருந்து அழிக்கப்படும் போது யார் எனக்கு சரி நிகர் சமானமாக இயலும் எனும் காயம் பற்றி மாயக் கருத்து ஒருங்கே தோன்றுகின்றது; தானே மாயையின் வடிவமாக* இருக்கும் அவன் வெளிப்படுத்த கூடியதான மாயையினால் ஒரு மாய வடிவம் காட்டி அவனிடத்தில் மையல் கொள்ள வைத்தான்.
விளக்கஉரை
யுத்த காண்டம், சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
* மறைத்தல் (திரோபவம்) – கன்மம் கொண்டு பற்றுக் கொண்ட உயிர்கள் உலக அனுபவங்களில் உழன்று பக்குவம் பெறுவதற்காக சிவன் தன்னை மறைத்து தானே உலகம் என்று தோன்றும்படி காட்டுவதான தொழில் மறைத்தல் எனப்படும். சேய் ஆனதால் இது முருகப் பெருமானுக்கும் பொருந்தும்
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால் எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் பெருமைகளை எல்லாக் காலங்களிலும் ஓத வேண்டியது குறித்து அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளையும் அழித்து, இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருந்து பேரின்ப வீடாகிய முக்தியை தர வல்லதுமான கூர்மையான வேலினை ஏந்திய திருமுருகப் பெருமானின் புகழினைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமலும், ஓதாமலும் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப் போல தன்னுடைய கண்களை உருட்டி, புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் நம்மை நோக்கி வீசும் வீசுகின்ற பாசக் கயிறு கொண்டு நம் கழுத்தில் சுருக்கு விழும்படி செய்து நம் உயிரைப் பறிக்கும் நாளிலா முருகனின் புகழைக் கூறும் பாடல்களைக் கற்க(ஓத) இயலும்?
விளக்கஉரை
எழுத்துப் பிழையறக் கற்கின்றி – பேசா எழுத்து – ‘ஓம்’ என்பதே பிரணவம். இதுவே அசபை என்னும் பேசா எழுத்தும், ஊமை எழுத்தும் ஆகும். இதுவே வாசி. முருகன் பிரணவ வடிவில் இருப்பதை குற்றம் இல்லாமல் உணரவேண்டும்.இதற்கு வேறு விளக்கங்களும் அருளப்பட்டு இருக்கின்றன. ஆன்றோர் அறிந்து உய்க
காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும் பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச் சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழ்ச்சியோ அரிய தன்றே
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – சிவனின் எண் குணங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி அவனின் குமாரரான நீ மயக்கம் செய்தல் ஆகாது என பழிப்பது போல் புகழும் பாடல்.
பதவுரை
இந்த உலகம், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பவனும், பிறர் தூண்டுதல் இன்றி தன்னுடைய கருணையால் அனைத்தையும் கொடுத்து, மிகவும் நேசத்துக்கு உரிய அனைத்து உயிர்கள் இடத்திலும் பொருந்தி நின்று அனைத்தையும் சிருட்டித்தலை செய்பவன் ஆனவனும், முழுமையானதாகிய பூரணத்துவத்துடன் இருப்பவனுமான சிவபெருமானின் குமாரன் ஆகிய முருகப் பெருமான அறிவுரை கூறி அசுர குணங்களை மாற்றி, சூரனை மயக்கம் செய்யும் சூழ்ச்சி மிகவும் அரிதானது.
கருத்து – புவனங்களும், அண்டங்களும், புவனியில் இருக்கும் தீர்த்தங்களும், ஏழுகோடி மகா மந்திரங்களும், ஒன்பது கோடி சித்தர்களும், அனைத்து தேவாலயங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகன் உள்ளே அடக்கம் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
பக்தர்களை பாதுகாக்கவும் அவர்களை ஆதிக்கம் செய்யவும் வள்ளி தெய்வானையுடன் வருபவனே, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் நான்முகன் ஆகிய பிரம்மாவிற்கு அருளுபவனும், இனிய குணம் கொண்டவனும், உண்மையைப் பேசுபவனுமான கோபாலனின் மருமகனே, சரவண முருகனே! இந்த தரணியில் இருப்பதாக கூறிப்படும் அறுபத்து அறுகோடி தீர்த்தங்களும் சரவணத்துள் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மெய்யறிவினைத் தரத்தக்கதும், பிறவா நிலையை ஏற்படுத்தும் ஆனதும், எண்ணிக்கையில் கூறும்போது ஏழுகோடி மகா மந்திரங்கள் ஆனவைகள் சடாசர மந்திரத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மிகுந்த விரத்தினை உடையவர்கள் ஆன ஒன்பது கோடி சித்தர்களும் உன்னுடைய சுபப் பார்வை தனில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; மேலானவைகள் என்று எந்த எந்த கோயில்கள் குறிப்பிடப்படுகின்றனவோ அவைகள் எல்லாம் உன்னுடைய படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய வீடுகளில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; ஆதித்தியனை முதலாவதாக கொண்ட படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்* உன்னுடைய இருதய கமலத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; பூமியை முன்வைத்து மேல் ஏழும், கீழ் ஏழும் இருக்கும் புவனம் முதல் அண்டங்கள் பலவும் உன்னிடத்தில் நிலைபெற்று இருக்கின்றன.
விளக்கஉரை
சித்தர்களுக்கு தலைவனாகவும், ஆதி அந்தம் அற்றவனாகவும் இருப்பதால் உடலினை முன்வைத்து ஆறு ஆதாரங்களும் தலைவன் என்று யோக மரபின் உரைப்பது உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.