
பாடல்
பத்தியால் யானுனைப் …… பலகாலும்
பற்றியே மாதிருப் …… புகழ்பாடி
முத்தனா மாறெனைப் …… பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் …… கருள்வாயே
உத்தமா தானசற் …… குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் …… கிரிவாசா
வித்தகா ஞானசத் …… திநிபாதா
வெற்றிவே லாயுதப் …… பெருமாளே
திருப்புகழ் – அருணகிரிநாதர்
கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.
பதவுரை
உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால் யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.
விளக்க உரை
- முத்தன் – முத்திபெற்றவன், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்[சிவபிரான்], திருமால், வைரவன், அருகன், புத்தன்
- ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன ரத்தினகிரியின் பிற பெயர்கள்.