
பாடல்
விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே
இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – ஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும் பாடல்.
பதவுரை
தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.
விளக்க உரை
- தலம்- தென்குரங்காடுதுறை
- விண்டார் – பகைவர்
- விமலன் – மலமில்லாதவன்.
- இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
- கொண்டான் – கொண்ட சிவபிரான்.
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – இண்டு
புகைப்படம் : தினகரன்
தோற்றமும் தன்மையும்
- வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
- சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
- செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
- காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
- வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.
மருத்துவ குணங்கள்
- இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்