
பாடல்
முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
ஆறாம்_திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – எம்பெருமானின் வடிவங்களையும் குணத்தையும் உரைத்து அவனைப் பற்றி பேசதா நாள் எல்லாம் வீண் என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
பால் போன்ற வெள்ளை நிறமுடைய பிறைமதியைச் சூடியவனாகவும், மூன்று உலகினுக்கும் எவர் தூண்டுதலும் இல்லாமல் தானே தலைவனாகவும் இருக்கும் முதல்வனாகவும், செருக்கு கொண்ட பகைவருடைய மும்மதிலையும் அழித்தவனாகவும், விளங்கக்கூடிய ஒளி வடிவமாக இருப்பவனாகவும், அன்னையினை இடப்பாகம் கொண்டதால் மரகத மணி போன்ற நிறமுடையவனாகவும், தேனும் பாலும் துய்க்கப் பெறும் போது தரும் இன்பம் போன்றவனாகவும், குற்றாலம் என்ற திருத்தலத்தில் விரும்பி அருளும் இளையவனாகவும், கூத்தாடுதலில் வல்லவனாகவும், யாவருக்கும் தலைவனாகவும், சிவஞானியர் ஞானத்தால் அறியப்படுபவனாகவும் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
விளக்கஉரை
- பிரகிருதி மாயா உலகம்: மண் முதல் மூலப்பிரகிருதிவரை உள்ள 24 தத்துவங்கள்; 2 அசுத்த மாயா உலகம்: காலம் முதல் மாயை வரை உள்ள 7 தத்துவங்கள்; 3 சுத்த மாயா உலகம்: சுத்தவித்தை, மாகேசுரம், சாதாக்கியம், பிந்து, நாதம் எனும் 5 தத்துவங்கள் – 36 தத்துவங்களை கடந்து தலைவனாகவும் இருப்பவன் (சைவ சித்தாந்த கருத்துப்படி)
- செற்றார்கள் – பகைத்தவர்கள்
- செற்றான் – அழித்தான்
- மரகதம் – மரகதம்போல்பவன்
- குற்றாலம் – பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று
- கூத்தாட வல்லானை – எல்லா வகை ஆடலும் அறிந்தவன் (காளியொடு ஆடியதை கருத்தில் கொள்க)
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருஆலவாய் #மதுரை #பாண்டியநாடு