பாடல்
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி
அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்
கருத்து – உடல் தன்மைகள் குறித்தும், அதில் இறைவன் உறைவதை குறித்தும் கூறும் பாடல்.
பதவுரை
இந்த உடலானது எட்டு சாண் உயரம் கொண்டது; காற்று சென்று வர ஏதுவாக 9 (ஏழு+இரண்டு) வாயில்களைக் கொண்டது; கட்டுப்படுத்த ஐவர் (பஞ்ச பூதங்கள்) உள்ளார்கள்; அதில் சிவசக்தி ரூபமாக இறைவன் இருக்கின்றான். இதை அறியாமல் பேசுகின்றாய் (மனமே!). இறைவனின் கட்டளைக்கு பயந்து அவர் என்ன உரைப்பாரோ என்று பயந்து நெஞ்சமே நிலை கொள்ளாமல் வாடி தவிக்கின்றேன்.
விளக்கஉரை
- பட்டணமுந் தானிரண்டு – கற்றவர்கள் உறையும் இடம் என்பதை முன் காலங்களில் குறிக்க பட்டணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருமை குறித்ததாலும், சித்தர்கள் அம்மை வழிபாடு கொண்டவர்கள் என்பதாலும் சிவசக்தி என்று விளக்கம் உரைக்கப்பட்டுள்ளது.
சித்தர் பாடலுக்கு உண்டான விளக்கத்தினை மானிட சரீரம் கொண்டு எழுதப்பட்டதால் விளக்கங்களில் பிழை இருக்கலாம். பிழை எனில் சரீரம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.
#அந்தக்கரணம் #அமுதமொழி # அழுகணிச்_சித்தர் #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள்