மீண்டும் அதே பிறப்பு மீண்டும் இளமைத் துள்ளல் மீண்டும் அதே கல்வி மீண்டும் அதே கர்வம் மீண்டும் அதே மயக்கம் மீண்டும் அதே முயக்கம் மீண்டும் அதே சிநேகம் மீண்டும் அதே வான் பார்த்தல் மீண்டும் அதே மது வாசனை மீண்டும் அதே தனிமை மீண்டும் அதே பேரொலி மீண்டும் அதே ஓங்காரம் மீண்டும் அதே ஒடுக்கம் மீளாத நாண்
நிராகரிக்கப்படவனை நீங்கள் அத்தனை எளிதில் காண இயலாது
ஒருவேளை வானம் பார்த்து பீடியை புகைப்பவனாக இருக்கலாம்; மனைவி, இரு குழந்தைகளோடு நீண்ட நேரம் இறையை வணங்க வரிசையில் காத்திருப்பவனாக இருக்கலாம்;
எவர் எவரோ வீசிச் சென்ற உணவு பொட்டலங்களை எடுத்து சரிநிகர் சமானமாக நாயோடு உண்ணுபவனாக இருக்கலாம்; அங்காடியில் விலைகளைப் பார்த்து பொருள்களை அதனதன் இடத்தில் வைப்பவனாக இருக்கலாம்;
கருமை நிற மேனி கொண்டு,அழுகிய உடலோடு காலம் கடத்துபவனாக இருக்கலாம்; மனைவியின் கண்களைப் பார்த்து பேசியபடி கடற்கரையில் பட்டாணி உண்பவனாக இருக்கலாம்;
மதுபானக் கடைகளில் தனித்து இசையைத் தவிர்த்து மதுகோப்பைகளை நீண்ட நேரம் உற்றுப் பார்பவனாக இருக்கலாம்; இருளினை உள்வாங்கி பேரொலியையும் பேரொளியையும் சிந்திப்பவனாக இருக்கலாம்;
நிராகரிக்கப்படவனை நீங்கள் காண இயலும் கணத்தில் அவனிடம் இருந்து நீங்கள் பெறுவதற்கு பேரன்பு அன்றி வேறொன்றுமிராது.
புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குநர் : திரு. ஐயப்ப மாதவன்
நிசப்தமும் பேரொலியும் ஆன
இரவொன்றை கடக்க முற்படுகிறேன்
தன்னை வெளிக்காட்டாது
வெளிப்படுகின்றன உருவங்கள்.
ஒன்று பலவாகி, நூறாகி
கோடி ஆகின்றன.
ஒவ்வொரு சிறு பிரபஞ்சமும்
அசைவு கொள்கிறது
அசையும் பிரபஞ்சங்களில்
பிம்பங்கள் தோன்றுகின்றன.
காற்றோடு கலக்கிறது ஒலிகள்
‘கொஞ்சம் இருங்க, இன்னும் கொஞ்ச
நேரத்தில அது வெளில வந்துடும்,
காப்பி சாப்பிடுறீங்களா?’
புகைப்படம் : திரு.ஐயப்ப மாதவன் - திரைப்பட இயக்குனர்
கொடுத்து சிவந்தவனுக்கு
யாசிக்கும் எண்ணம் தோன்றியது
தன் விருப்பம் அறிவித்தான்
தேவர்களும், ரிஷிகளும்
சித்தர்களும்
தெய்வங்களும் தயக்கம் காட்டினர்.
‘மாற்ற இயலா மாயை புகுதல் என்ன நியாயம்’ என்றனர் தேவர்கள்
‘இருமை இல்லாதவன் யான்’ என்றான்
‘தங்களே இப்படி நாடகம் நடத்தவேண்டுமா’
என்றனர் ரிஷிகள்.
‘யானும் கூத்தன் தானே’ என்று
விடை பகர்ந்து புன்னகை பூத்தான் மாயன்
தங்களை எப்படிப் பிரிவோம்’ என்றனர் சித்தர்கள்
‘வடக்கு நோக்கி வந்து வாழ்த்துவோம் யாம்’
என்றான் விமலன்
கணப் பொழுதினில்
எல்லோராலும் விலக்கத் தக்கவனாகி
விரும்பி யாசகம் துவங்கினான்.
‘என்னம்மா ஆயிற்று அவருக்கு’ என்று கேள்வியுடம்
மறைந்தனர் தாயும் ஒரு குழந்தையும்;
‘யேய், பிச்சைக்காரா, வழிவிடு’
வார்த்தையில் கனல் எழுப்பி புறம்
புகுந்தான் ஒருவன்;
‘கவலை அற்று இரு, கையில் பொருள் விழும்’
என்றான் முடவனொருவன்;
‘நல்லா தான இருக்க,
உழைக்க என்ன கேடு’என்று
உரை பகன்று பிரம்பு வீசினான் ஒருவன்
பின்னொரு பொழுதுகளில்
பிரபஞ்ச உயிர்களில் உறை காலங்களில்
வடு மாறாமல் இருந்தது.
புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்
எவரும் அறியாமல்
என் கைகள் நீண்டும் குறுகியும் ஆகின.
யாரும் அற்ற ஒரு பொழுதினில்
யாசகம் வேண்டி நின்றேன் ஒருவனிடம்.
‘உனக்கு மட்டும் ஏன் கைகள் இப்படி ஆகின்றன?’
என்றான் அவன்.
யாசித்தல் இயல்பு ஆன பொழுதுகளில்
இடம் சென்று பெறுதல் அரிதானதால்
இவ்வாறானது என்று உரைத்தேன்.
எப்பொழுது இது மறையும் என்றான்?
இயல்பாய் ஒருவன்
இடும்போது மறையும் என்றேன்.
எவரும் அறியா விஷ்யங்களை
இனம் கண்டு கொண்டது எங்கனம் என்றேன்?
இயல் புன்னகை பூத்து
கைகளில் இடுகிறான்.
புவனம் கனகம் ஆகிறது
காலம் உறைகிறது.
ஆதி நாளில் நீ தனித்திருந்தாய்;
கூடி வந்த காலமதில்
நாம் தனித்து இருந்தோம்;
அகிலின் வாசம்
அறையை நிரப்புகிறது.
பெரும் தீயாகி என்னை
உன்மடியினில் கிடத்துகிறாய்.
மோனத்தீயாகி
முத்தமொன்றை இடுகிறாய்
கண்களில் இருந்து விழிநீர் அருவியாகி
வழிந்தோடுகிறது.
புறவெளியில்
மாய உலகில் காற்றினை உரசி
வார்தைகள் தோன்றி மறைகின்றன.
‘இரத்தம் இருந்தப்ப ஆடின,
சுண்டினப்பின் கண்ணீர் விட்டு
என்ன புண்ணியம்’
புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்
அன்றொரு நாளின்
பெருமழையினில்
நீ என்னோடு பயணித்தாய்.
பெருமழையில் நனைந்தபடி
நம் இருவருக்குமான
மழை நினைவுகளை
வரிசைபடுத்தச் சொன்னாய்.
பெருமழையில் தேனீர்;
மழையை உன் துப்பட்டாவால்
துடைத்த நிகழ்வு;
இலக்கியம் பேசியபடி நகர்ந்த நிகழ்வு;
இசையின் பரிமாணங்களில் உன் வியப்பு
வார்த்தைகளின் கோர்வையில்
பெருமிதம் கொண்டு
இன்னும் கூறவாக என்று புன்னகைக்கிறேன்.
மௌன மழையில் உன் கண்ணீரை
கரைத்துவிடு என்று கூறி
விலகலுக்கான காரணம் விளக்குகிறாய்.
தனித்த நகர்தலுடன்
இப்பொழுதும்
பெருமழை பெய்து கொண்டிருக்கிறது.
புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்
நாளொன்றின் இறுதியில்
வானம் பார்த்திருக்கையில்
தனித்தனி பறவை இனங்கள்
தனித்தனி மரங்கள் அடைந்தன.
அடைந்தப்பின் பறவைகள் மறைந்து
மரங்கள் தனித்து இருந்தன.
கரைந்த காலங்களில்
மாறாது இருந்தது இந்நிகழ்வு.
சந்தி இரவொன்றில்
அறிந்திரா புதிய மரமொன்று எதிர்ப்பட்டது
‘மௌன மரம்’ என்று தன்னிலை விளக்கம் சொன்னது.
தேகம் இளைத்தவர்கள், யாசிப்பவர்கள்
பெரும் பயண வழி அற்றவர்கள்,
மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள் எங்களில் இலக்கு;
அவர்களை யாம் சென்றடைவோம் என்றது.
இன்னும் பல பகுப்புகள் உண்டு.
இருந்தாலும் இதை மட்டும் உரைத்தோம்
என்றும் உரைத்தது.
பிறிதொரு நாளில் என்னில்
சுடர் எனக்கரைந்திருந்தது
மௌன மரமும்.
நிழலும் நிஜமும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்
யாரும் அறியா கணமொன்றில்
உடல் பிரிந்து உயிர் தனியானது.
காணப்படுபவைகளை காட்சியாக்கி கண்டது.
தன்னிலை அறிந்து தான் மீண்டும் கூடு அடைந்தது.
பெறத் துடிக்கும் ஒன்றை
பெற்றதாய் கொண்டது மனம் ஒன்று.
அடைய முடியா புவனங்கள்
அண்டத்தில் இல்லை
என்று கூறி பெரு நடை ஒன்றை பயின்றான்
பித்தனொருவன்.
கருமை நிறம் கொண்டவனுடன் வந்த
கருமை நிற நாய் ஒன்று
வேகமாக தாவியது அவன் மேல்.
உடலுக்குள் உயிர் ஒடுங்கியது.
‘கூத்தனின் நாடகத்தில் குறை உண்டோ’
எனக் கூறி அவ்விடம் அகன்றான்
கருமை மனிதன்
பிறிதொரு நாளில்
உடலும் உயிரும் தனித்த பொழுதுகளில்
மௌனம் பொருந்தி
காலம் இயல்பு இழந்திருந்தது.
புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்.
வினாடிகள்
வினாடியாகத் தான் சேர்ந்து மறைகின்றன.
ஒன்றின் தொடர்ச்சி போல் இல்லாமல்
ஒவ்வொன்றும்.
ஆனாலும்
கடந்த யுகமுடிவில் பட்ட அதே பிம்பத்தில்
இந்த உடலும் அதே நினைவுகளும்.
பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – நெருப்பு
மனிதர்களால் விலக்கப்பட்டு
தனித்த பாதையொன்றில் தென் திசை
நோக்கிப் பயணிக்கிறேன்.
தடம் பதிக்கும் அடிமுன்னே
அனைத்து திசைகளும் பற்றி எரிகின்றன.
விழிநீரும் வெப்பத்தில் உலர்கின்றது..
எதிர்கொண்டு அழைக்கிறது அஞ்சன சுடரொன்று.
‘யார் நீ ‘ என்கிறேன்.
அறு நெருப்பை தோற்றுவித்தவள்,
நெருப்பாகி, நெருப்பால் அறுப்பவளும் நானே
என்கிறது அச்சுடர்
பயணச் சுமைகளால் கீழே விழ
எத்தனிக்கிறேன்.
நிலமென தாங்கிப் பிடித்து
மடியினில் இருத்துகின்றது அச்சுடர்.
பின்னொரு பொழுதுகளில்
பொன் நிறமாய் மாறுகின்றது அச்சுடர்
அப்போது
புற உலகங்கள் மட்டும்
எரிந்து கொண்டு இருக்கின்றன.
பிரபஞ்சத்தின் நீட்சியில்
காலபரிமாணம் அற்று
வான்முட்டி கூட்டமாக பறந்தன
சில பறவைகள்.
அறியாத பொழுதொன்றில்
மரித்து தரை சேர்ந்தது
பறவை உடல் ஒன்று.
கத்தின, கூக்குரலிட்டன, கரைந்தன.
உருவம் அழிவதாய் ஒலித்தன
உயிர் கொண்ட பறவைகளின் குரல்கள்.
பின்னொரு பொழுதுகளில்
விரும்பி வானம் கொண்டன.
சலனப்பட்டு இருந்தது காற்று
சலனம் அற்று இருந்தது வானம்.
மரணம் கரைந்திருக்கும் வினாடி தேடி
பயணிக்கிறது வாழ்வு;
மரணித்தல் இயல்பாகும் வரை
வாழ்வு தொடரும்;
பின்னொரு பொழுதுகளில்
ஞானத்தின் வாழ்வு தன்னை ஞானம் கவ்வும்
மறுபடியும் ஞானமே வெல்லும்.
*பாடி காவல் – குற்றம் செய்தவருக்கு அரசன் தரும் தண்டனை
கோடிக் காவனைக் கூறாத நாள் எலாம் பாடி காவலில் பட்டுக் கழியுமே
இறையால் இறைக்கப்பட்ட
வறுமைகள் பாதை வழி எங்கும்.
இருள் சூழ்ந்திருக்கும்
வாழ்வை விலக்க முற்படுகிறேன்.
யாருமற்ற தருணமொன்றில்
தலை கோதி பின்னலிடுகிறாய்.
தன்முனைப்பு அற்று முத்தமிட்டு
புன்னகை பூக்கிறாய்.
பெரு வாழ்வு கண்டபின்னும்
மீண்டும் ஒரு தலைப் பின்னலுக்காக
காத்திருக்கின்றன பல ஜன்மங்களும்.
*வழக்கு – ஈகை
புகைப்பட உதவி : நந்தன் ஸ்ரீதரன் மற்றும் தேனி ஈஸ்வர்
விதியின் வழி அடைந்து
செல்வம் கூடி பெற்று வருகிறது பெரு உடல்.
என் எதிர்ப்பட்டு
காலத்தால் முதுமையாக்கப்பட்ட ஒருவன்
வயிற்றின் பெருந்தீக்காக
பொருள் ஒன்றை யாசிக்கிறான்
மின்னலென வருகிறது கோபச் சொற்கள் என்னில்.
புன்னகைத்து விலகுகிறான்.
வினாடிக்குள் மாறுகிறது எனது
இளமையின் புறத் தோற்றமும்