
பாடல்
வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – இந்திரனுக்கும், அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்த பாடல்.
பதவுரை
சிறந்த தாமரை மலரில் இருக்கும் திருமகள் வாழும் இடமானதும், செல்வத்தை உடையதும் ஆன அழகிய திருநின்றியூரில் வீற்றிருந்து அருளும் இறைவனே, இந்திரன் ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னை வழிபட, அதற்காக மகிழ்ந்து அவனுக்கு ‘நீ விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய அருளிய தன்மையும், காலங்கள் இணைவதான ‘காலை, நண்பகல், மாலை’ என்னும் மூன்று சந்திகளிலும், உருவத்திருமேனி ஆன இலிங்க உருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, அருவிகள் மணிகளாய்ச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதிகை மலையில் வீற்றிருக்க அவருக்கு அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன் உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.
விளக்க உரை
- தாபரம் – மலை, உடம்பு, நிலைத்திணைப் பொருள், மரப்பொது, இடம், ஆதாரம், பற்றுக்கோடு, பூமி, கோயில், இலிங்கம், உறுதி
- சேர்வு – அடைதல், வாழிடம், திரட்சி, ஒன்று சேர்கை, ஊர், கூட்டம்
- இந்திரன் எண்ணிக்கை எண்ணற்றது என்பதால் ஓர் இந்திரன்
- சகளி செய்திறைஞ் சகத்தியன் – இலிங்கத் திருமேனியில் பாவனையால் அமைத்து வழிபாட்டில் கொள்ளப்படும் மந்திரங்களில் ‘பஞ்சப்பிரம மந்திரங்கள்‘ எனப்படும் ஐந்தும் , ‘சடங்க மந்திரங்கள்‘ எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும். சிவ வழிபாட்டினை ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்து சுருக்கமாகவும், வேத மந்திரங்களை முப்பத்தெட்டுக் கூறுகளாகச் செய்து வழிபாடு செய்யும் முறைகள் என சிவ நெறியில் விளக்கப்பட்டுள்ளன. ஆகையால் சிறந்த வழிபாடாக செய்த அகத்தியர் என்பதை முன்வைத்து இவ்வாறு அருளினார்.