அமுதமொழி – விசுவாவசு – ஆவணி– 31 (2025)


பாடல்

தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
சாமர்த்தியம் உளபுரு டன் ஆம்
சந்ததம் பதின் மரைக் காப்பாற்று வோன்மிக்க
தரணிபுகழ் தருதே வன்ஆம்.
பொன்மட்டி லாமலீந்(து) ஒருநூறு பேரைப்
புரப்பவன் பொருவி லிந்த்ரன்
புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
புண்யவா னேபிர மன்ஆம்
நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து
ரட்சிப்ப வன்செங் கண்மால்
நாளுமிவன் மேலதிகம் ஆகவெகு பேர்க்குதவு
நரனே மகாதே வன்ஆம்.
அன்மட்டு வார்குழலி பாகனே! ஏகனே!
அண்ணல்எம(து) அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அறப்பளீசுர சதகம் – அம்பலவாணக் கவிராயர்

கருத்து – பொருட்களை அளிப்பவர்களின் உயர்ச்சியினை உரைக்கும் பாடல்.

பதவுரை

இருள் போன்ற கருமையா நிறம் உடையதும், மணமிக்கதும், நீண்ட கூந்தலைம் உடைய உமையம்மையாரை இடப்பாகத்தில் உடையவனே, தனி முதல்வனே, தலைமையிற் சிறந்தவனே, எமது தேவனே! பிறரிடம் இருந்து எதையும் பெறாமல் தன்மடடில் சீவனம் செய்பவன் சாமர்த்தியம் உடைய‌ புருடன் ஆவான்; பிறரை நாடாமல் தன்வரையில் வாழ்க்கை நடத்துவோன் திறமை உடைய ஆடவன் ஆவான்; எப்பொழுதும் பதின்மர் எனப்படும் பத்து பேரை காப்பாற்றுவோன் பெருமை உடைய தரணியில் தேவன் என்றும் அமரன் என்றும் அழைக்கபடுவான்;  அளவின்றிப் பொருளைக் கொடுத்து நூறுபேரைக் காப்பாற்றுவோன் ஒப்பற்ற இந்திரன் ஆவான்; உலகில் ஆயிரம் பேர் வரை ஆதரிக்கும் அறத்தின் வழியில் நிற்கும் தலைவனே நான்முகன் ஆவான்; நன்னெறி வழியில் செல்லும் பதினாயிரம் பேரைக் காப்பாற்றி அருளுவோன் செந்தாமரைக் கண்ணானான திருமால் ஆவான். எல்லா நாட்களிலும் அவனைவிட மிகுதியாக அளவற்றவற்கு கொடுக்கும் மனிதனே மகாதேவன் ஆவான்.

விளக்கஉரை

  • சீவன் ‍ உயிர்
  • சீவனம்-வாழ்க்கை
  • சந்ததம்-எப்போதும். புரப்பவன்- காப்பவன்
  • தரணி-பூமி
  • இந்திரன், மூவுலகுக்குந் தலைவன்.

 

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #அறப்பளீசுர_சதகம் #அம்பலவாணக்_கவிராயர் #கொல்லிமலை

 



Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *