
பாடல்
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான்
குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும் என்றனைநீ
முனிவதென் முனிவு தீர்ந்தருளே
ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்
கருத்து – வள்ளல் என்று உரைத்திருப்பதாலும், என்னை ஈன்றவன் என்பதாலும் என் குற்றங்களைப் பொறுத்து அருள வேண்டும் என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
என்னை பெற்ற வள்ளலே, உலகினுக்கு வாயிலாக விளங்கும் தில்லை திருச்சபையில் நடனமிட்டு நடிப்பவனே, உலகிற்கு அரசனே, எண் குணங்கள் உடையவனே, தாம் பெற்ற குழந்தையின் நல்ல குணங்களையும், தீய குணங்களையும் பெற்றவர்கள் மட்டுமே அறிவார்கள் ; அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் கொண்டுள்ள குணங்களால் கொடியவனாக இருக்கிறேன்; என்னுடைய இந்த குணங்கள் அனைத்தையும் நீ முற்றும் நன்கறிவாய்; அவ்வாறு அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பினை நீக்கி ஆண்டருள்க.
விளக்க உரை
- மன்றில் – வாயில்முற்றம்
- கொற்றவன் – அரசன், வெற்றியாளன்
- முனிவு – கோபம், வெறுப்பு
- எண் குணங்கள் – தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை (வட மொழி மூலம் – சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,நிரன்மயான்மா,சர்வஞ்த்வம்,அநாதிபேதம், அநுபத சக்தி,அநந்த சக்தி,திருப்தி)