அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 20 (2022)


பாடல்

அறிவெனில் வாயில் வேண்டா அன்றெனில் அவைதாம் என்னை
அறிவதை உதவு மென்னில் அசேதனம் அவைதா மெல்லாம்
அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னி லான்மா
அறிவில தாகும் ஈசன் அசேதனத் தளித்தி டானே

சிவப்பிரகாசம் – மூன்றாம் சூத்திரம் – ஆன்ம இலக்கணம் – உமாபதி சிவம்

கருத்துஆன்மா அறிவுடைப் பொருள் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

ஆன்மாவானது தானாக அனைத்தையும் அறிய இயலும் எனில் அதற்கு இந்திரியங்கள் தேவை இல்லை; அதுபோலவே ஆன்மாவிற்கு அறியும் தன்மை இல்லை எனில் இந்திரியங்கள் எதன் பொருட்டு அதனுடன் இணைத்து படைக்கப்பட்டு இருக்கின்றன; இந்திரியங்கள் சடமாவதால் ஆன்மாவுக்கு அறிவை கொடுக்காது;  அனைத்தையும் அறிகின்ற ஈசன் ஆன்மாவுக்கு அறியும் தன்மையைக் கொடுப்பார் எனில்  ஆன்மா இயற்கையில் அறிவில்லாத சடப் பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஈசன் அறிவில்லா சடப்பொருளாக இருக்க வேண்டும்; ஏனெனில் சிவன் இயல்புக்கு மாறாக  உயிறற்ற பொருள்களுக்கு  உயிர் தன்மையை அருள மாட்டார். எனவே ஆன்மாவானது இயற்கையில் அறிவுடைய பொருள் ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 7 (2020)


பாடல்

தூநிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தான்அதுவாய் நிற்குந் தரம்

திருநெறி 8 – திருவருட்பயன் – உமாபதி சிவாச்சாரியார்

கருத்துஉயிர் பாசத்தோடு இருந்து வந்துப் பின் விலகி அசுத்தம் நீங்கப் பெற்றப்பின் தெளிவு பெறுதல் குறித்து விளக்கும்  பாடல்.

பதவுரை

சூரியன் வந்த காலத்தில் அதன் கடுமையால் துயர் உற்றவனுக்கு தூயதும், குளிர்ந்ததும் ஆன நிழல் எதிர்ப்பட்டால் அதில் சென்று தங்கி வெம்மையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று எவரும் சொல்வதில்லை; இந்த முறைமையைப் போல இருவினை ஒப்புக்குப்பின் ஆன்மாவிடத்தில் திருவருள் வந்து சேர்ந்தப்பின் உலகினை நோக்காது உயர்ந்ததான் திருவருளில் அடங்கி ஒற்றுமை கொண்டு நிற்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 28 (2020)


பாடல்

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் – சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு

திருநெறி 1 – சிவஞான போதம் – மெய்கண்ட தேவர்

கருத்து சார்ந்தாரைக் காத்தலையும், சாராதவர்களை வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை காத்தல் என்பது தலைவன் ஆகிய ஈசனின் கடமை; ஆனால தன்னைக் சாராமல் அடைக்கலம் புகாதவர்களை காக்காமல் வஞ்சம் செய்பவன் அல்ல; தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை பிராப்த வினைகளை நீக்கி அவர்களைக் காப்பான்; தன்னைச் சாராதவர்களை  பிராப்த வினைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வினைகளைக் கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்து அவர்களைக் காப்பான்.

விளக்க உரை

  • இயல்பாகவே பாசங்களின் நீங்கி இருப்பவன் என்பதை முன்வைத்து பேரருள் உடைமை ஆகியவன் என்பதால் சார்ந்தாரைக் காத்தலையும், முடிவில் ஆற்றல் உடைமை என்பதை முன்வைத்து வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணரலாம். இவைகள் ஈசனின் எண்குணங்களின் தன்மைகள் ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 28 (2019)


பாடல்

பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்

திருநெறி 2 – சிவஞானசித்தியார் சுபக்கம் – அருணந்தி சிவாச்சாரியார்

கருத்து –  வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை கூறும் பாடல்

பதவுரை

முன்பு செய்த நன்வினைகளால் தவம் பொருந்தி பரமனை பக்தி செய்யும் தொண்டராகவும் அவனை அன்பு கொண்டு வழிபடுபவராகவும் இருப்பவர்களான் சாமுசித்தர்களை தானே தூய நெறியில் இருந்து காத்து சிவகதி அளிப்பான்; ஞானிகளை பிரமாணம் என்று அறிந்து அவர்கள் காட்டிய முறையில் அவர்கள் உரைத்த நூல்களைக் கற்று முக்தி பெறவேண்டும் என்பவர்களான வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை இங்கே வகுத்துக் கூறுகின்றோம்.

விளக்க உரை

  • தானே தூய கதியினில் தொகுப்பன் – விஞ்ஞானகலருக்கு அறிவு வடிவமாகவும், பிரளயகலருக்கு மான் மழு சதுர்புஜம் காலகண்டம் திருநேந்திரம் தாங்கி உருவ வடிவம் கொண்டும் வெளிப்பட்டு அருள் செய்வது போல் சாமுசித்தருக்கு அருள்புரிவன்.
  • ஸம்+சித்தம் – நன்றாக முடிவுபெற்றது
  • வைநயிகர் – விநயம் உடையவர்
  • மார்க்கர் – சன்மார்கர், ஞானிகள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 22 (2019)


பாடல்

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் – அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

கருத்துஅசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குணம் என்பதாகிய எண் குணம் உடையவனும், அழுக்கு எனும் குற்றங்கள் அற்றவன் ஆனவனும், எக்காலத்திலும் துன்பமற்றவனும், மேம்பட்டதான பரம் பொருள் ஆனவனும் படைப்பில் முதல் முதலில் தோன்றிய ஆகாயமே அசத்து என்று சுட்டறிவினைக் கொண்டு அறியும் பொருளாய்  கொண்ட அறிவினைக் கடந்து சூன்யப் பொருள் போல் தோன்றி, (குருவருளால்) சுட்டறிவதால் உண்டாகும் தன்னறிவினால் நீங்காமல் நிலை பெறுவதாகிய சோதி வடிவாய் (அகத்தில்) விளங்கிக் தோன்றுவான்.

விளக்க உரை

  • தற்பரம் தனக்குப் பரமென விரியும்.
  • சூனியமாய்த் தோன்றினாலும் அது அற்புதம் போல் வந்தது
  • தனி முதல்வன் – உலகியல் விடுத்து அதைக் கடந்து அதற்கும் காரணாய் இருக்கும் ஞானத் தன்மைப் பற்றியது.
  • பிரபஞ்சம் நிலைப்பு தன்மை உடையது அல்ல எனும் பேருண்மையினையும், அசத்தாய் உள்ள உலகினைக் அறிய ஞான வடிவமாகியவனே அருளிச் செய்ய இயலும் என்றும், அசத்து நிலையுடைய பொருள்கள் தன் சொருபத்தை காட்டாது மறைத்து நிற்கும் இயல்பு உடையது; இது நிலைப்பு தன்மை உடையது என்று அறிய உணர்த்துவது ஞான சொருபமாகிய பதி ஞானம் என்று சுப்பிரமணிய தேசிகர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 10 (2018)

பாடல்

மூலம்

கனவு கனவென்று காண்பரிதாங் காணில்
நனவி லவைசிறிதும் நண்ணா – முனைவனரு
டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

பதப் பிரிப்பு

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9  – உமாபதி சிவம்

பதவுரை

மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே! உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் என விரியும். அவ்வாறு உயிரானது கண்டத்தில் இருந்தில் செயல்படும் நிலை ஆகிய கனவினை காணும் போது கனவில் நின்று  ‘இது கனவு’ என்று அறிய இயலாது. அகம் விழிப்புற்ற நிலையாகிய நனவில் அந்த கனவில் கண்ட காட்சிகள் காண இயலாது. முனைவன் அருள் பெறும் போது  காரிய அவத்தைகள் நீங்கப் பெற்று, காரண அவத்தையின்  கேவல அவத்தை, சகல அவத்தை ஆகியவைகளும் நீங்கப் பெற்று,  பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை ஆகிய சுத்த அவத்தையை காணுமாறு செய்வாயாக.

விளக்க உரை

  • ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ எனும் சிவப்பிரகாசரின் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • உயிரானது ‘அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருள்’ எனபதும்,  உயிர் தனித்து இயங்கினாலும், இறைவன் தனிக் கருணையினால் அன்றி அவத்தைகள் விலகி அது நிலை பேறு கிட்டாது என்பதும் விளங்கும்.

சமூக ஊடகங்கள்

மேன்மை கொள் சைவ நீதி – விளங்க வைத்த சந்தானக் குரவர்கள்

‘சைவத்தின் மேற் சமயம் வேறில்லை’ என்ற மொழித் தொடரை வைத்து சைவத்தின் பெருமையையும் அதற்கு காரணமாக இருக்கும் அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமான் ஈசனின் பெருமைகளையும் அறியலாம்.

அறியவொண்ணா பெருமைகள் உடையது சிவனின் பெயர்கள். அப்படிப்பட்ட சிவனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் சந்தானக் குரவர்கள். சிவனின் பெருமைகளை பாடல்களாக அருளியவர்கள்.சைவ சித்தாந்த சாத்திரங்கள் இவர்களால் அருளப் பெற்றதே.

குருவைக் குறிக்கும் சொல்லே குரவர். இவர்கள் நால்வர் ஆவார்.

மெய்கண்டார்,
மறைஞான சம்பந்தர்,
அருணந்தி சிவாசாரியார்,
உமாபதி சிவம்
இவர்கள் குரு சீடர் மரபு கொண்டவர்கள். திரு மடங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மூலம் சைவ நெறி தழைக்க பங்களித்தவர்கள்.
இவர்களது காலம் 12, 13ம் நூற்றாண்டு.
இவர்களது பெயர்களும் இவர் இயற்றிய நூல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
·   மெய்கண்டார்சிவஞான போதம்
·   அருள்நந்தி சிவாசாரியார்சிவஞான சித்தியார், இருபா இருபது
·   கடந்தை மறைஞான சம்பந்தர்சதமணிக் கோவைசதமணிக்கோவை
·   உமாபதி சிவாச்சாரியார்சிவப்பிரகாசம், திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம்

இவர்களைப்பற்றி விரிவாக எழுத உள்ளேன். திருவருள் துணை புரியட்டும்.

சமூக ஊடகங்கள்