பாடல்
திருவார் பெருந்துறை
மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின்
யா வரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்
ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – ஈசன் தன் பிறவியை வேறறுத்தப்பின் அவனையே முழுமையாக கண்டதை உரைக்கும் பாடல்.
பதவுரை
நீர் நிலைகள் நிறைந்துள்ள இடங்களை உடையதான திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவனும், சிறப்புகள் உடையவனுமான சிவ பெருமான் என் பிறவியை வேரறுத்தபின், யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை; அருவ வடிவமாகவும், உருவ வடிவமாகவும் நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகையான தெள்ளேணத்தினை நாம் கொட்டுவோம்.
விளக்க உரை
- வார் – நீர், ஒழுகு, வரிசை, கடைகயிறு
- தெள்ளேணம் – கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு வகை
- பிறவிக்கு காரணமான பாசத்தினை வேரோடு அறுத்தான் என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிறவிக்கு காரணமான வினைகளை(சஞ்சீதம், பிரார்த்தம், ஆகாமியம் ஆகிய வினைகளை) அறுத்தான் என்பது பொருத்தமாக இருக்கும்; யாவரையுங் கண்டதில்லை என்பதை முன்வைத்து வினைகளை நீக்க வல்ல முதல்வன் என்பதை உணர்ந்து கண்டு கொண்டேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
- திருப்பெருந்துறை, திருவாரூர் ஆகியவற்றை யோக முறையில் உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளாக உருவகம் செய்வது யோகம் தொடர்வோரும் உண்டு.