அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 2 (2022)


பாடல்

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவனின் அடியவர்கள் தாம் பெற்ற அனுபவத்தினை அனைவருக்கும் சென்று வழங்குவார்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எனும் ஐந்து கோசங்களால் ஆனது இந்த உடல். தமிழ் உச்சரிப்பே மந்திரம் ஒலிப்பதை ஒத்ததாக இருக்கும். இவ்வாறு தமிழ் வேதாகமங்களில் கூறப்பட்ட ஞானத்தினை (பஞ்சாட்சரம், தூல பஞ்சாட்சரம், அதிசூக்கும பஞ்சாட்சரம் ) பெற்று தமிழ் மொழியை அறிந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக உலகம் முழுவதும் செல்லுவர். அத்தகைய நல்லோர் சிற்றறிவை நீக்கி பேரறிவை தரும் மலர்ந்த மனமும், எம்முடைய ஆதியாக இருப்பவனைப் பற்றிய திருவடியுணர்வும் மேலே உரைத்த தமிழ் மண்டலம் ஐந்தும் செம்மையுறுதலின் பொருட்டே அவ்வாறு செய்கின்றனர்.

விளக்க உரை

சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்று சில இடங்களிலும், ஐந்து கண்டங்கள் என்று சில இடங்களிலும், பொருள் உரைக்கப்பட்டுள்ளது. தன்னை அறிந்தவர்களே மற்றவர்களை தலைப்படுத்த முடியும் என்பதால் இவைகள் விலக்கப்படுகின்றன.

ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

4 thoughts on “அமுதமொழி – சுபகிருது – ஐப்பசி – 2 (2022)”

  1. இன்றும் சித்தர்கள் உலாவருகின்றன ரா! உங்கள் அனுபவம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.,

    1. கருத்துக்கு நன்றி.

      மனித உயிர்களுக்கு அருளுவதன் பொருட்டு கோடிக்கணக்கான சித்தர்கள் இன்றும் (இக்கணத்திலும்) இப்புவியில் உலகில் உலவிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் ஆற்றலும், அருளும், கருணையும் அளவிட முடியாதவை.

      இதற்கு மேல் உரைக்க தற்போது எதுவும் இல்லை.

      குருவருள் உத்தரவின் பேரில் காலம் வரும்போது உரைக்க வாய்ப்பு வரலாம்.

    1. மிக்க நன்றி. குருவருள் நம் அனைவரையும் காக்கட்டும்.

Comments are closed.

error: Content is protected !!