பாடல்
எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே,
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா,
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – பல ஜென்மங்கள் எடுத்து அன்னைத் தொழுது வந்ததால் முக்தி அருளவேண்டும் என விளிக்கும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே! இந்தப் புவிதனில் அண்டஜம் எனப்படும் முட்டையில் தோன்றியும், சுவேதஜம் எனும் வியர்வையில் தோன்றியும், உற்பீஜம் எனும் விதை, வேர், கிழங்கு இவற்றில் தோன்றியும், சராயுஜம் எனும் கருப்பையில் தோன்றியும் எத்தனை லட்சக்கணக்காண பிறவிகள் எடுத்து இருப்பேனோ தெரியாது; இத்தனை பிறவியிலும் உன் அருளை நினைந்து உருகி வந்தபோதிலும் உன் அருளை பெற இயலவில்லை; உன்னை முக்காலத்திலும் தொழுது நீயே முக்தி அளிக்கத் தக்கவள் என்பதால் இனி எந்தவிதமான ஜெனமும் கொள்ளாதிருக்கும்படி கிருபை செய்து என்னை ரட்சித்து முக்தி தரவேண்டும்; அவ்வாறு இல்லாமல் வாழ்வினில் நாம் முதல் முறையாக சந்திக்கும் மனிதர்கள் போல் நீ என்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா? ; பாகம் பிரியாமல் இருப்பதால் வாழ்வினில் வெற்றி பெறுவதற்காக நான் பக்தியுடன் உரைத்துச் சொன்னதான விருத்தங்கள் பதினொன்றையும் கேட்டு அதுபற்றி நீ அளிக்கும் செல்வம் கண்டு விமலர் உன்னிடத்தில் கோபம் கொள்ளப் போகிறார், ஆகவே மூத்தோர், முனி எனப்பல்வாறு அழைக்கப்படும் அத்தனின் பாகத்தினை விட்டு வந்து என்னுடைய குறைகளை தீர்த்து வைப்பாயாக.
விளக்க உரை
- அத்தன் – தகப்பன், மூத்தவன், மூத்தோன், குரு, முனிவன், உயர்ந்தோன், சிவன், விஷ்ணு, அருகன், கடவுள்