
பாடல்
வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்
பன்னிரெண்டாம் திருமுறை – பெரியபுராணம் – சேக்கிழார்
கருத்து – ஈசன், காரைக்கால் அம்மையாரை நோக்கி இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள் என்று உரைத்து அம்மையே என்று அழைப்பதை விளிக்கும் பாடல்.
பதவுரை
வரும் இவர் யார் என்று கேட்ட உமையம்மைக்கு, “எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள்; அதுமட்டும் அல்லாது பெருமை பொருந்திய வடிவமாகிய இப்பேய் வடிவத்தினை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறினார்; காரைக்கால் அம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.
விளக்க உரை
- பரவெளி
- பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்
- செம்மையொரு மொழி – செம்பொருளை அடைதற்குரிய ஒப்பற்றதொரு மொழி
- ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும் என்று
பரமர்தாள் பரவி நின்றார்
என்று எவராலும் விரும்பத் தக்காத பேய் வடிவினை விரும்பிக் கேட்டதால் இப் பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள்` என்று சேக்கிழார் உரைக்கின்றார்.