அமுதமொழி – சார்வரி – மார்கழி- 12 (2020)


பாடல்

தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத்
     தாயைமென் குதலைவாய்ச் சேயைத்
  தனத்தையௌ வநத்தை இன்பமோ கனத்தைத்
    தையல்நல் லார்பெருந் தனத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி
     ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி
   அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி
      ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ?
சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச்
      சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச்
   செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத்
      திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக்
கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக்
      கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே!
   கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
      காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்துசம்சார துக்கம் அறுபடச் செய்யும்  பாடல்.

பதவுரை

சிந்தை நிலைகெடுமாறு உருகி இன்னிசை பாடி, சிலம்புகள் ஒலிக்குமாறு கூத்துக்கள் நிகழ்த்தி, செழுமையான கங்கையினை சடையின்மேல் மறைத்து வைத்து வெண்ணீற்றினை திருமேனி முழுவதும்  பூசி, கந்தை ஆடையினை கோவணமாக அணிந்து, தோலினால் ஆன சிறுபையினையும், கபாலத்தினையும் யாசகத்திற்காக ஏந்தி திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடைய உயர்ந்தவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! பிறப்பிற்கு காரணமான தந்தையையும், நிரந்தரம் என்று மாயைக்கு உட்பட்டு கருதக்கூடிய மனையையும், இடுப்பில் சுமந்தவளாகிய தாயையும், மழலை மொழி பேசும் குழந்தையும், வினைபற்றி வரும் செல்வத்தையும், இளமையையும், அழகிய வடிவம் கொண்ட பெண்ணையும் அந்தியிலும், பகலிலும் விருப்பமுடன் உடல் வருந்துமாறு சோம்பல் வரும் அளவில் சிந்தையில் கொண்டு ஆழ்கடலில் அலையும் துரும்பு போலாகி அலைக்கழிக்கபடுபவன் ஆகிய என்னை மெய்யறிவு விளங்குமாறு திருத்தி ஆட்கொள்ள நினைக்கவில்லையோ?

விளக்கஉரை

 • நைதல் – இரங்குதல்; நிலைகெடுதல்; கெடுதல்; தளர்தல்; நசுங்குதல்; சுருங்குதல்; மாத்திரையிற்குறைதல்; வாடுதல்; மனம்வருந்தல்; தன்வயப்படாமை
 • பொக்கணம் – சோழியப்பை; கஞ்சுளி; பரதேசிகள் பிச்சை ஏற்கும் பை
 • கரத்தல் – மறைத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 16 (2020)


பாடல்

செயல்பணி விடையாய்ச் செப்பல்ஐந் தெழுத்தாய்த்
   திரிதலே வலம்புரி தலுமாய்ச்
சிந்தையின் நினைவே தியானமாய், உண்டு
   தெவிட்டல்நி வேதனச் சிறப்பாய்த்
துயிறல்வந் தனையாய்த் திருவுளத்(து) உவந்து
   துள்ளுவெள் விடையின்மேல் ஏறித்
தொண்டரும் விசும்பில் அண்டரும் காணத்
   தோகையோ(டு) எனக்குவந்(து) அருள்வாய்!
வயல்வரம்(பு) உறைந்த கடைசியர் முகத்தை
   மதியம்என்(று) அதிசய(ம்) மிகுந்து
வரும்பகல் இடத்தும் இரவினும் குவளை
   வாய்ஒடுங் காமலே விளங்கும்
கயல்நெடுந் தடமும் கமுகமும் கமுகைக்
   காட்டிய கன்னலும் பொதிந்த
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
   காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்து – எம தூதர்கள் வரும் நேரத்தில் வந்து அருள்புரிய வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

வயல் வரப்புகளை உடைய உழவின் மேல் மாறாத எண்ணம் உடையவர்களும், சூரியன் போல் பிரகாசிக்கும் மாறுபாடு அற்ற முகத்தினை  ஆன உழவர்களால் நிரம்பப் பெற்றதும், அதிசயம் மிகும்படியாக பகலிலும், இரவிலும் குவளை மலர்களின் இதழ்கள் மூடாமல் விளங்கக்கூடியதும், கெண்டை மீன்கள் விளையாடும் நீண்ட நீர்ப்பரப்புகளை உடையதும், திரட்சியான கமுகம் எனப்படும் நெல்களையும், அதனை விட அதிகமாக பெரியதாக விளங்கும் கன்னல் எனப்படும் கரும்பினை  உடைய வயல்களை உடையதும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! என்னுடைய செயல்கள் எல்லாம் உனக்கு பணிசெய்வதாகவும், உன்னுடைய திருநாமத்தினைக் குறிக்கும் ஐந்தெழுத்தினை எப்பொழுதும் உரைத்து வலப்பக்கமாக சுழன்று திரிவதாகவும், சிந்தனையின் உன்னுடைய நினைவு நீக்காமல் இருத்தலால் அதுவே தியானம் போலக் கருதும் நிலைகொண்டு, புறத்தே பேசும் பேச்சுகள் எல்லாம் ஐந்தெழுத்தின் தன்மை கொண்டு உமிழப்பட்டு படைத்தலுக்கு உரிய நிவேதனப் பொருளாக கொண்டு, பேருரறக்கம் வரும் காலத்தில், மகிழ்வுடம் திருவுள்ளம் பற்றி துள்ளிக் குதித்து ஓடும் வெண்மை நிறம் கொண்ட விடையில் மேல் ஏறி யம தூதர்கள் தொண்டர்களுடன் வந்து கயிற்றினை சுண்டி இழுக்கும் போது தேவர்களும் காணும்படியாக  திசைகளே ஆடையாக  அணிந்து எனக்கு வந்து அருளுவாய்.

விளக்க உரை

 • கடைசியர் – உழவர், உழத்தியர், கடையர், ஊரன், மகிழன், களமர்
 • கமுகம் – கூட்டம், திரட்சி
 • தெவிட்டல் – உமிழப்பட்டது
 • வலம்புரிதல் – இயற்கையோடு ஒத்து நடத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 15 (2020)


பாடல்

பிரமனும் சலிக்கத் தாயர்சஞ் சலிக்கப்
   பேதையர் கண்(டு)அசங் கதிக்கப்
பிணிகளும் பகைக்க மூப்புவந்(து) அலைக்கப்
   பிந்தொடர்ந்(து) ஆசைசென்(று) இழுக்கத்
தருமனும் வெறுக்க நரகமும் ஒறுக்கத்
   தாரணி சுமந்துநொந்(து) இளைக்கச்
சக(டு)எனச் சுழலும் கறங்(கு)எனக் கொடிய
   சடலமே எடுக்கநான் இலக்கோ?
+குருமணி இமைக்கும் புதுமலர்த் தடத்தில்
   கோட்டிள(ம்) ++மோட்டுமோ மேதிக்
குலங்கள்போய்ப் படிந்து நலம்கிளர் செழும்தேன்
   குவளைமென்(று) உழக்கிய தோற்றம்
கரியமா கடலில் புகுந்துநீர் அருந்தும்
   காளமே கங்களோ எனலாய்க்
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
  காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்துதிருக்கடவூர் தலத்தின் பெருமைகளைக் கூறி, அதில் உறையும் இறைவனைப்பற்றி பெருமையாக உரைத்தும் அவனிடத்தில் பிறவி நீக்கம் செய்யுமாறு வேண்டும் பாடல்.

பதவுரை

முத்துக்கள் போன்று ஒளிர்விடுவதும், புதிய மலர்களைக் கொண்டுள்ளதும், வானம் வரை நீண்ட நெற்கதிர்கள் கொண்ட  இடமானதும், கற்றவர்கள் நிறைந்த இடமானதும், குவளை மலர்களில் செழுமையான தேனை கொண்டதும், கரிய நிறம் உடையதும் ஆன கடலில் நீர் புகுந்து செல்லும்படியாகவும், கருமை நிறம் உடைய மேகங்களால் சூழப்பெற்று அதனால் நீர்வளம் நிரம்பப் பெற்று பெரியதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! கூத்துக்கள் நிகழ்த்துபவனே! என்னுடைய வினைகளை முன்வைத்து படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனும் சலிப்புறவும், ஒவ்வொரு பிறவியிலும் என்னை படைத்ததால் எனது தாயாரும் சலிப்புறவும், மகளிர் கண்டு விலகும்படியாகவும் பகைகொள்ளுமாறும் பிணிகளும், மூப்பும் அலைகழிக்க, அதனைப் பின் தொடர்ந்து ஆசை சென்று இழுக்க தருமத்தின் வழியில் நிற்பவனாகிய எமனும் பல முறை உயிரினை எடுத்து அதன் காரணமாக வெறுக்கவும், அதன் காரணமாக நரகத்தில் துன்புறுமாறு அழித்தியும், சுழற்சியினைத் தரும் உடல் எனும் கொடிய சடலம் எடுத்தல் தான் எனக்கு விதிக்கப்பட்டதுவோ?

விளக்க உரை

 • குறு – நிறம்
 • மணி – முத்து
 • இமைக்கும் – ஒளிவிடும்
 • மோடு – வயிறு
 • சகடு – உடல்
 • கறங்கு – காற்றாடி, கறங்கோலை, சுழற்சி, சத்தம்
 • மாதா உடல் சலித்தாள் எனும் பட்டினத்தாரின் பாடல் இங்கு ஒப்புமை கொண்டு சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 8 (2019)


பாடல்

சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும்
   தும்பிகள் இடைஇடை நுழையும்
தும்பைமா லிகையும் வம்புவார் சடையும்
   துண்டவெண் பிறையு(ம்)முந் நூலும்
நடநபங் கயமும் கிரணகங் கணமும்
   நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும்
நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர்
   நமனையும் காணவல் லவரோ?
கொடிபல தொடுத்த நெடியமா மணிப்பொற்
   கோபுரம் பாரிடம் தொடுத்துக்
கொழுந்துவிட்(டு) எழுந்து வான்நில(வு) எறிப்பக்
   கொண்டல்வந்(து) உலவியே நிலவும்
கடிமலர்த் தடமும் சுருதிஓ திடமும்
   கன்னிமா மாடமும் சூழ்ந்து
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
   காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹார மூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்துதிருக்கடையூரின் பெருமைகளையும், சிவபிரான் உருவ வர்ணனையும் கூறும் பாடல்.

பதவுரை

நெடியதும் கொடிகள் உடையதும் ஆன மணி ஒத்த பொன் போன்ற கோபுரங்களை உடையதும், பூத கணங்களால் கொழுந்து விட்டு எரிவதைப் செய்யப்பட்டதான வான் நிலவும், அந்த வான் நிலவை தைப்பதான மேகங்கள் வந்து உலவக் கூடியதும், சிறப்புகள் உடைய தடமானதும், வேத சுருதிகள் ஒலிக்கக் கூடியதானதும், கன்னிமாடங்கள் நிறைந்ததும் சிறந்த வளங்கள் நிரம்பப்பெற்றதும்  ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! சுடரைப் போன்று ஒளிர்தலை உடைய குழையை அணிந்தவனும், மலர் போன்ற கரத்தினில் மானை உடையவனும், வண்டினங்கள் இடை இடையில் நுழைந்து செல்லக்கூடிய வெண்மை நிறம் கொண்ட தும்பை மாலையை உடையவனும், வளைந்து சரியான முறையில் அமையப்பெற்ற சடையை உடையவனும், துண்டம் எனப்படுவதான சிறிய அளவு உடைய வெண்மையான பிறையை அணிந்தவனும், முப்புரி நூலை அணிந்தவனும், அசைந்து ஆடக்கூடிய தாமரை மலரைக் கொண்டவனும், கிரணங்களை உடைய கைவளையைக் கொண்டவனும், உமா தேவியை தன்னின் இடப்பாகத்தில்  கொண்டு அழகிய தோற்றம் உடையவனும், மூன்று கண்கள் உடைய கோலமும் கண்டவர்கள் நமனைக் காண வலிமை உடையவர்கள்  ஆவாரோ?

விளக்க உரை

 • உழை – இடம், பக்கம், அண்மை, மான், கலைமான் (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ், உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி
 • (தன் உடலால்) வருத்தி ஒன்றைச் செய்
 • தும்பை – ஒரு வகை மூலிகைச்செடி, தும்பை வெண்மையின் அடையாளம்
 • மாலிகை – மாலை, வரிசை, சீமைச் சணல்
 • காய்தல் – உணங்குதல், உலர்தல், சுடுதல், மெலிதல், வருந்தல், விடாய்த்தல், வெயில்நிலாக்கள் எறித்தல், எரித்தல், அழித்தல், விலக்குதல், வெறுத்தல், வெகுளுதல், கடிந்துகூறுதல், வெட்டுதல்
 • பாரிடம் – பூதகணம்
 • கடவை = திருக்கடவூர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 1 (2019)


பாடல்

தண்டமும் கயிறும் சூலமும் புகைந்த
      தழல்உமிழ் கண்களும் வளைந்த
   தந்தமும் சிவந்த குஞ்சியும் கரிய
      சயிலமே அனையமே நியுமாய்

அண்டிய சமனைக் கண்டுள(ம்) மயங்கி
      அறி(வு)அழிந்(து) இருவிழி களும்பஞ்(சு)
   அடைந்துவாய் புலர்ந்து மெய்மந்து திடும்போ(து)
      அம்பிகை தன்னுடன் வருவாய்!

வண்டுகள் முரன்று முகைகுறுக்(கு) உடைந்து
      மதுமழை பொழிந்துதா(து) அளைந்து
   மடல்விரிந்(து) அலர்ந்து பொன்நிறம் பொதிந்த
      மன்றல்அம் கொன்றைவார் சடையாய்!

கண்டவர் உளமும் கண்ணுமே கவரும்
      கநதந வநிதையர் நெருங்கும்
   கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
      காலனைக் காய்ந்ததற் பரனே!

திருக்கடவூர் காலசம்ஹார மூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்

கருத்து – இது எம பயம் அறுக்கச் செய்யும் பதிகம்.

பதவுரை

வண்டுகள் ஆலாபனஞ் செய்யக்கூடியதும், அரும்புகள் மொட்டவிழ்ந்து தேன் மழை போன்று  பொழியக்கூடியதும், மடல் விரிந்து பெரியதாக இருப்பதும், பொன் நிறம் கொண்டதும், மணம் வீசுவதுமான கொன்றைப் பூவினை சடையில் உடையவனே,  பழைய போர் கருவி ஆனதும் தண்டம் எனப்படுவதும் ஆன தண்டாயுதம், கயிறு, சூலம், கோபத்தினால் புகை உமிழ்வதைப் போன்ற நெருப்பினை உமிழும் கண்கள், வெளியே தெரியுமாறு இருக்கும் வளைந்த தந்தம் எனப்படுவதான பல், சிவந்ததான திருவடி, பாறை ஒத்த கரிய நிறம் ஆகிய வடிவங்களோடு இருப்பவனே, காண்பவர் உளமும், கண்ணும் கவரும் படியாகவும், மிகுந்த செல்வங்களை கொண்ட பெண்கள் நெருங்கும் படியாக இருப்பதும், மிகுந்த அலைகள் உடையதும் ஆன கடவை எனும் அந்த பதியாய் இருப்பவனே, காலனை வருந்தச் செய்தவனும் ஆனவனே, இறப்பு காலத்தில் வரக்கூடிய காலனாகிய எமனைக் கண்டு உள்ளம் மயங்கி, தான் கற்றறிந்த அறிவு அழிந்து, இரு விழிகளும் பார்க்க இயலாமல் பஞ்சு அடைத்தது போன்ற நிலை கண்டு, நீர் இல்லாம வாய் உலர்ந்து, அதனால் தளர்ந்து மனமானது குற்றம் கொண்டு திடுக்கிடும் போது உடனாகிய அம்பிகையுடன் வருவாய்.

விளக்க உரை

 • மந்து – அரசன், மனிதன், குற்றம்,காய்வேளை, கொழிஞ்சி, மந்துகால், யானைக்கால்
 • அலர்தல் – மலர்தல், பரத்தல், பெருத்தல், விளங்குதல், சுரத்தல்
 • கடவை = திருக்கடவூர்

சமூக ஊடகங்கள்