அமுதமொழி – குரோதி – தை – 10 (2025)

பாடல்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினைசிந்தியாமல்நூல்பலகற்றுஅடைந்தஅறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – மார்கழி – 18 (2025)

பாடல்

ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – இறைவன் பரிபாகம் உடைய உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தி ஆசான் மூர்த்தியாக வந்து அருளுதலும், ஏனையோருக்கு அவ்வாறு அருளாமையும் கூறும்பாடல்.

பதவுரை

வினைகள் நீங்கப்பெற்ற பிறகு அந்த மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து எனும் அருமையான உணர்வு வெளிப்படும்; அவ்வாறு அறியா உயிர்களிடத்தில் உயர்ந்தநிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் இல்லாமல் அது குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்கம் பெறுதல் போன்றவை விலகாமல் இருக்கும் போது முதல்வன் திருவருள் கைகூடுதல் என்பது அரிதானது.

விளக்கஉரை

  • இடும்பு – அகந்தை, அவமதிப்பு, வெறுப்பு, கொடுஞ்செயல், தீங்கு, சேட்டை 
  • ஆங்காரம் –  செருக்கு, அகங்காரம், அபிமானம்
  • தூங்கல் – தொங்கல், தராசு, தாழ்கை, நெருங்குகை, உறக்கக்கலக்கம், சோம்பல், சோர்தல், ஓரிசை, வஞ்சிப்பா ஓசை, கூத்து

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 20 (2024)

பாடல் 10

மூலம்

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்

பதப்பிரிப்பு

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலே இதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றி இன்ப வெள்ளமாய் துன்னி என்னுள் சம்பந்தன்
வீற்றிருப்பது ஒன்றுமே மெய்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – குரு தன்னுள் வீற்றிருப்பது மட்டுமே மெய்யானது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

புறக்கண்களால் காணப்படும் காட்சிகள் எல்லாம் உண்மையானவை அல்ல; பஞ்ச இந்திரியங்களில் ஒன்றான காதுகளால் கேட்கப்படும் ஒலிகள் எல்லாம் உண்மையானவை அல்ல;  முடிவுறும் செயல்கள் இதமாக தோன்றுவதும் உண்மையானவை அல்ல; இவைகள் எவ்விடத்தில் ஒன்றுகூடினாலும் அது உண்மையானது அல்ல; சிறப்பும், பெருமையும், அழகும் உடையதாக தோன்றி இன்பவெள்ளமாக பாய்ந்து என் உள்ளே சம்பந்தன் எனும் ஞானசம்பந்தன் வீற்றிருப்பது ஒன்றே மெய்யானது.

விளக்கஉரை

  • பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
  • மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
  • புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 14 (2024)

பாடல் : 8

மூலம்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

பதப்பிரிப்பு

தேடும் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்று அருளி கூட்டினான் – நாடு அறிய
ஞானப்ரகாசன் உயர் நற்கமலைமானகர் வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினை சிந்தியாமல் நூல் பல கற்றுஅடைந்த அறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 13 (2024)

மூலம்

ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள்

பதப்பிரிப்பு

ஒழியாத பேரின்பத்து உள்ளாய் உலகில்
விழியாது இருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற்கு அருள்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆனந்தநிலையினைஅருளவேண்டும்என்பதைகூறும்பாடல்.

பதவுரை

அழியாத பூரணத்துவத்தை உடையவனும், செந்தாமறை போன்ற நிறம் உடைய பொற்பாதங்களை கொண்டு தென்கமலையில் வாழும் வேதம் போன்றவனும், அழியாமலும் குறைவுபடாமலும் என்றும் நிலைத்து இருக்கும் பேரின்பத்தில் இருப்பவனும் ஆகியவனே! உலகில் பிறவி எடுக்காது இருப்பதன் பொருட்டு நாய் போன்ற அடியவன் ஆகிய எனக்கு அருள் புரிவாயாக.

விளக்கஉரை

  • ஆரணம் – வேதம்
  • உலகில் விழியாது இருந்துவிடவே – ஞானஆசிரியன் வழிநிற்றலும், ஒருவேளை உலகியலில் இருந்து மீளவரும்படி நேருமாயின் அந்தமீட்சியும் ஆசிரியன் வழிநின்று உணர்தலால் நீங்கப்பெறும் அந்தநிலையை அடையும் பொருட்டு பிறப்பு எடுக்காது இருத்தல் என்பது பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆவணி – 15 (2024)

மூலம்

இருளுதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆசானமூர்த்தியாய் நின்று எய்தும் பயன்களில் பாசநீக்கமும், அருள்விளக்கமும் பற்றி அருளிய பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 30 (2024)

பாடல் 6.

மூலம்

உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள
நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

உள்ளிருந்தே என்றும் உணர்ந்துகினும் கண்டிலர் என்று
உள்ளும் புறம்பும் ஆவோம் என்று – மெள்ள
நரர் உருவாய் ஆரூரில் வந்தான் நமை ஆண்டு
அருள்புரி ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – உள்நின்று உணர்த்தும் தன்மையும், அவனே ஆசிரியனாகி வந்த தன்மையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

எல்லாவற்றையும் நிகழ்த்திக்காட்ட சாட்சிபாவமாக புறத்தில் நின்று உள்ளத்தில் இருந்து உணர்த்தி இயக்குபவனாக இருந்தாலும் தன்னை உணர்வில்லை என்று எண்ணம் கொண்டு அகத்திலும் புறத்திலும் வெளிநின்று உணர்த்தும் எண்ணம்கொண்டு அதைநிச்சயம் செய்துகொண்டு ஞானப்பிரகாசன் எனும் முனிவனாகி மானிடவடிவம் கொண்டு ஆருரில் வந்துநம்மை ஆண்டு அருள்புரிந்தான்.

விளக்கஉரை

  • நரன் – மாந்தன், அருச்சுனன், ஒருமுனிவன், ஓர்இயக்கன்
  • கண்டிலர்என்று – அநாதிகாலம் தொட்டு உயிர்களைக்காத்த போதும், மாயை பற்றி நிற்பதால் உயிர்கள் அதை உணரவில்லை என்பதை உணர்ந்து என்பது பற்றியது.
  • ஈசன் உயிர்களுக்கு விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலர் ஆகிய நிலைகளில் இருந்து அருள்செய்பவன் என்றாலும், அன்புநெறி கொண்டோருக்கே ஆசானமூர்த்தியாக அருளுவான் என்பது பெறப்படும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #குரு #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 29 (2024)

பாடல் 5.

மூலம்

கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ர காசனையே நான்

பதப்பிரிப்பு

கண்டேன் இப் பாசம் கழிந்தேன் அமுதை முகந்து
உண்டேன் சுகானந்தத்து உள்ளிருந்தேன் – வண்டுமிகாத்
தேனைப் பொழி கமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ரகாசனையே நான்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – அருட்குரவன் ஆகிய ஞான ஆசிரியரை அடைந்ததன் பயனை விளக்கிக் கூறும் பாடல்.

பதவுரை

வண்டுகள் தேனைப் பொழிகின்ற கமலையில் வாழும் ஞானப் பிரகாசனின்பொற்பாத திருவடிகளைப் பற்றி நான் மெய்யானதைக் கண்டேன், பற்றுதலை ஏற்படுத்துவதும், சைவ சித்தாந்தத்தால் விளக்கப்படுவதும் ஆகிய பாசம் நீங்கப் பெற்றேன்; அமுதத்தை உண்டேன்; அதனால் சுகானந்தத்தினுள் இருந்தேன்.

விளக்கஉரை

பாசம் – உலகமாய் தோன்றுதல்
வண்டுமிகாத்தேனைப்பொழிகமலை – தன்னைஅடைபவர்களை போற்றும் ஞானம்
பொற்பாதம் – அருமை, பெருமை மற்றும் தூய்மை பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 28 (2024)

பாடல் 4.

மூலம்

அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று

பதப்பிரிப்பு

அரி அயற்கு முன்னாள் அடிமுடியும் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாசனாகி
இருக்கின்றான் ஆரூரில் இன்று

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – உள் நின்று உணர்த்திய முதல்வனே குருவடிவமாக வந்து பிறந்து தன்னை ஆட்கொண்டு அருளுகின்றான் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவாரூர் திருத்தலத்தில் தன்மயமாய் நிற்கும் உயர் நிலையில் இருப்பவனும், முன்னொருமுறை திருமாலும், பிரம்மாவும் முறையே தேடி காண முடியாத திருவடியினையும், திருமுடியினையும் கொண்டவனாகிய பிறவாத் தன்னை உடையவனாகிய பெரியவனும் ஆனவன் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து ஆருர் தலத்தில் ஞானப் பிரகாசனாகி பிறந்து பரந்து விரிந்து இருந்து ஞானத்தினை அருளிக் கொண்டு இருக்கின்றான்.

விளக்கஉரை

துரியம் – நான்காவது, நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதி எருது, சுமத்தல்

பெருக்குதல் – முதிர்வித்தல்

#சைவம் #சிவபோகசாரம்  #குரு  #குருவின்_பெருமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 7 (2022)

பாடல்

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – குருவே ஈசனாய் நின்று பாச நீக்கம் செய்து அருளிய திறத்தினை கூறும் பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 18 (2020)

பாடல்

சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாச னுண்மை
தருநாத னங்குருநா தன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – அருளாசிரியனே இறைவன் என்று கூறும் பாடல்.

பதவுரை

நம்முடைய குரு நாதன் எப்படிப்பட்டவர் எனில் நினைவு எனும் எண்ணத்தை எண்ணியவாறு நிகழ்த்தித் தரவல்லவன்; தெற்கு பகுதியாகிய கமலை எனும் திருவாரூர் தலத்தில் வாழ்கின்ற நாதன்; பக்தியை தருகின்ற நாதன்; பரவிந்து எனும் `சிவம்` என்னும் தத்துவத்திற்கு மேலுள்ளதான வாக்கிற்கு நாதனாக இருக்கக் கூடியவன்; முக்தியினை அருளக்கூடிய பெரிய நாதனாகவு இருக்கக் கூடியவன்; ஞானத்தின் வடிவமாகி பிரகாசமாக இருப்பவன்; மெய் எனும் உண்மையினை தரக் கூடியவன்.

விளக்க உரை

  • கமலை – திருமகள், திருவாரூர், கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனம்
  • சித்தி – காமியப்பயன்களை அருளுவது, பக்தி – வினை முற்றுப்பெறா நல்ல தவம் உடைய உயிர்கள் எய்துவது; முக்தி – சரியை, கிரியை மற்றும் யோகங்களில் ஈடுபட்டப் பின் உயிர்கள் முக்தி அடைய இறைவன் அருளுவது; உண்மை – மெய் ஞானம்.
  • வினையுடைய உயிர்களுக்கு முக்தியே பெரிதானது என்பதால் அதனைத் தருபவன் பெரு நாதன்
  • பிரகாசம் கதிரவனுக்கானது; அஞ்ஞான இருளை நீக்குதல் பற்றி ஞானப் பிரகாசன்
  • நம் – தம் மாணக்கர்களையும் உலக உயிர்களையும் குறித்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 24 (2020)

பாடல்

தேகநாம் என்றென்றூ செப்புவீர் ஈதில்வரும்
போகநாம் என்று புலம்புவீர் – நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீர் எப்படிநீர் போய்

சிவபோகசாரம்

கருத்துஇன்ப துன்பங்களின் காரணம் முந்தைய வினைகள் என்பதை அறியாமல் மாயை கொண்டு மயங்கி இருத்தலை கூறி அதில் இருந்து விலகாமல் இருப்பதைப் பழித்துக் கூறும் பாடல்.

பதவுரை

தூலமும் சூட்சமும் ஆகிய இந்த உடலை முன்வைத்து தேகம் நாம் எனும் ஆணவம் கொண்டு உரைப்பீர்; இதனால் வரக்கூடியதும் மகிழ்வினைத் தருவதுமான இன்பமும் செல்வமும் என்னுடையது என்று அகங்காரம் கொண்டு புலம்புவீர்; இவ்வாறு முன்னர் செய்ய வினையின் காரணமாக வரும் தீவினையின் காரணமாக இவ்வாறான துன்பம் வாய்க்கப்பெற்றது என்று எண்ணாமல் இதை இன்பம் என்று எண்ணி அதில் பொருந்துவீர்; எப்படி நீர் (மாயை விலக்கி – மறை பொருள்) முக்தி அடையப்போகிறீர்?

விளக்க உரை

  • போகம் – இன்பம், செல்வம், விளைவு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 10 (2020)

பாடல்

அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ
விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் – செழும்பாகை
மீறித் தருமிரத வீட்டின்ப மாமலைமேல்
ஏறித் திரும்பலா மே

சிவபோகசாரம் – ஸ்ரீ ல ஸ்ரீ தருமை ஆதின குரு முதல்வர்

கருத்துபாசத்தில் அழுந்தி நிற்றல் இயல்பாகவே முக்தி அளிக்காது என்பதை உணர்ந்து அமுததாரை வரை யோகம் தொடர்வதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஒவ்வொரு தினமும் பாசத்தில் அழுந்தி நிற்காதே; இது முக்தி அளிக்கத் தக்கது அல்ல என்று அதன் துயரை உணர்ந்து எழுந்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் தலையில் மேற்பகுதியில் இருந்து வருவதும், இன்பத்தை தருவதுமான அமுததாரையினை விரும்பும் காலங்களில் பருக அவ்விடத்துக்கு சென்று திரும்பி வரலாம்.

விளக்க உரை

  • யோக மரபில் கண்டத்திற்கு மேல் பகுதிக்கு மேலே செல்லுதல்; கண்டம் வரை என்பது இயல்பாகவே பாசத்தில் அழித்திவிடும் என்று கூறுதல் மரபு
  • பாகை – தலைப்பாகை, ஊர், பாக்கம், பகுதி, வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி, ஒரு காலஅளவு, யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம்
  • இரதம் – தேர், புணர்ச்சி, பல், சாறு, அன்ன ரசம், சுவை, இனிமை, அரைஞாண், மாமரம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 27 (2020)

பாடல்

எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாம் ஒருவர் அல்லவோ – வவ்விப்
பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா
வருகுவதும் தானே வரும்

சிவபோகசாரம்

கருத்துஉலக உயிர்களில் ஈசன் நிறைந்து இருப்பதால், ஈசன் நம்மைக் காப்பான் என்ற உறுதியான எண்ணம் கொள்ள செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

உடல் பற்றியும் அதில் வரும் துன்பங்கள் பற்றியும் துயர் கொண்டு வாடும் நெஞ்சமே! எல்லா உயிர்களிடத்திலும் அவைகளின் வினைகளை நீக்கி அவைகளை காக்க ஈசன் இருக்கிறான் அல்லவா; அவ்வாறான உயிர் கூட்டத்தில் நாமும் ஒருவன் அல்லவா; ஈசன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதால் பிற உயிர்களை வெறுத்தல் முதலியன செய்தல் ஆகாது; எனவே வருகின்ற இன்ப துன்பங்கள் தானே வரும் என்று கொண்டு அவ்வாறு வாடுதலை விலக்க வேண்டும்.

விளக்க உரை

  • வவ்வுதல் – கவர்தல், பற்றிக்கொள்ளுதல், வாருதல்
  • புழுங்குதல் – ஆவியெழவேகுதல், சிறுக வேகுதல், வெப்பத்தாற் புழுக்கமாதல், கோபத்தால் வெம்புதல், வேர்த்தல், பொறாமைப்படுதல், வாடுதல்
  • வருகுவதும், புழுங்குவதும் – வருவதும், போவதும் ஈசன் செயலால் நிகழ்த்தப்படுதலை கூறுபவை
  • வருகுவதும் தானே வரும், எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ என்ற வாக்கியங்களை இணைத்து வினைபற்றி வரும் துயர்கள் வரும் என்பதும் அவைகள் வராமல் காக்க ஈசன் இருக்கிறான் என்பதும் பொருள் பெறப்படும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆனி – 2 (2020)

பாடல்

உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவமென் றிராதே – மருளைப்
பிறிந்தறிவிற் கண்டதனைப் பின்னமற எங்குஞ்
செறிந்தபொருள் தானே சிவம்

ஸ்ரீ ல ஸ்ரீ தருமை ஆதீன குரு முதல்வர்

கருத்து –  சகளம், நிகளத் திரிமேனிகளாக் சிவன் இருப்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

சகளத் திருமேனி எனப்படும் உருவமாகவும், நிட்களத் திருமேனி  எனப்படும் அருவமாகவும் ஒளியாகவும், ஆகாசமாகவும் இருள் எனும் மாயையாகவும் இருப்பது மட்டுமே சிவம் என்று இருக்காதே; மயக்கத்தினை விலக்கி மெய்யறிவில் கண்டால்  உயிர்ப் பொருள்கள், உயிர் இல்லா பொருள்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளே சிவம் என்பதை அறியலாம்.

விளக்க உரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி, வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-1 (2020)

பாடல்

இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை

சிவஞானபோதம்

கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.

விளக்க உரை

  • இந்தனம் – விறகு
  • அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
  • ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 17 (2020)

பாடல்

மூலம்

ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே

பதப்பிரிப்பு

ஒருமையுடன் ஈசன் அருள் ஒங்கி என்றும் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்பு
ஆங்காரம் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போது தானே

சிவபோகசாரம் – தருமை ஆதீன குரு முதல்வர்

கருத்து – புறச்செயல்கள் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று உணர்வதை குறிக்கும் பாடல்.

பதவுரை

உயர்ந்த நிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள்  நீங்காத போது மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று இருப்பது அருமையாகும்.

விளக்க உரை

  • இடும்பு – அகந்தை, அவமதிப்பு, வெறுப்பு, கொடுஞ்செயல், தீங்கு, சேட்டை
  • ஆங்காரம் – செருக்கு, அகங்காரம், அபிமானம்
  • தூங்கல் – தொங்கல், தராசு, தாழ்கை, நெருங்குகை, உறக்கக்கலக்கம், சோம்பல், சோர்தல், ஓரிசை, வஞ்சிப்பா ஓசை, கூத்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 27 (2020)

பாடல்

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்

சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்துகுரு தன்னுள் வீற்றிருப்பது மட்டுமே மெய்யானது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

கண்களால் காணப்படும் காட்சிகள் எல்லாம் உண்மையானவை அல்ல; காதுகளால் கேட்கப்படும் ஒலிகள் எல்லாம் உண்மையானவை அல்லமுடிவுறும் செயல்கள் இதமாக தோன்றுவதும் உண்மையானவை அல்ல; இவைகள் எவ்விடத்தில் ஒன்று கூடினாலும் அது உண்மையானது அல்ல; சிறப்பும், பெருமையும், அழகும் உடையதாக தோன்றி இன்ப வெள்ளமாக பாய்ந்து என் உள்ளே சம்பந்தன் வீற்றிருப்பது ஒன்றே மெய்யானது.

விளக்க உரை

  • நூல் இயற்றியவர் – தருமபுர ஆதின ஸ்தாபகர்
  • பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
  • மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
  • புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 21 (2020)

பாடல்

துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரத்தியினால் ஆங்கு அவற்றை விட்டுப் – பரத்தில் அன்பு
செய்யடா செய்யடா, சேரப்பா பஞ்சம் எல்லாம்
பொய்யடா பொய்யடா பொய்

சிவபோக சாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்து – உடலினை பொய் என்று உணர்ந்து ஆசையை அறுத்து, பரத்தில் அன்பு செய்ய வேண்டி உபதேசம் செய்து வலியுறுத்தும் பாடல்.

பதவுரை

பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகியவற்றால் ஆன இந்த உடல் பொய்யானது என்பதை உணர்ந்து, கையறு நிலையினை மனதில் கொண்டு, எக்காலத்திலும் துன்பத்தை தருவதாகிய ஆசை என்றும் தொடராமல், மேலுலகமானதும், மோட்சத்தின் இருப்பிடமானதும், நிறைவானதும் ஆன பரத்தில் அன்பு செய்.

விளக்க உரை

  • காலம் – 16 ஆம் நூற்றாண்டு
  • இந்த நூல் 139 வெண்பாக்களைக் கொண்டது
  • துரத்துதல் – வெருட்டி ஓட்டுதல், அப்புறப்படுத்துதல், திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல், வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல்
  • பரம் – மேலானது, திருமால்நிலை ஐந்தனுள் ஒன்றான முதல் நிலை, கடவுள், மேலுலகம், திவ்வியம், மோட்சம், பிறவி நீக்கம், முன், மேலிடம், அன்னியம், சார்பு, தகுதி, நிறைவு, நரகம், பாரம், உடல், கவசம், கேடகவகை, குதிரைக்கலனை
  • செய்யடா செய்யடா, பொய்யடா பொய்யடா – அடுக்குத் தொடர். முதலில் சொன்னைதை உறுதிபடுத்த இரண்டாவது முறை.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)

பாடல்

ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால்
வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சல னம்மாந் தினம்

சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்து – குருவழி நடக்க இயலா மாந்தர்கள் கரை ஏறுதல் கடினம் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

இந்து சமயத்தின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்ற ஒருகோடி ஆகமங்களால் உணர்த்தப்பட்ட எல்லாவற்றையும் உணர்ந்தும், பெருகக் கூடியதான தவம் செய்து சித்தி எல்லாம் பெற்றும் குருவருள் வாய்க்கபெற்றும் அவர் கூறியபடி நடக்க இயலாத மாந்தர்களுக்கு அவர்களுடைய சித்தம் தினம் தினம் சலனம் கொள்ளும்.

விளக்க உரை

  • தருமபுர ஆதின ஸ்தாபகர் அவர்களால் எழுதப்பெற்றது.

சமூக ஊடகங்கள்