அமுதமொழி – சார்வரி – சித்திரை – 18 (2020)


பாடல்

பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப்
பாங்குடன் ரக்ஷிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று
வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்
பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன
கவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த
என் அன்னை ஏகாம்பரி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துதனது விருப்பங்களை அன்னை காமாட்சியிடம் விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

இந்த உலகத்தில் இருக்கும் காலத்தில் நல்வினை பற்றி நல்ல முறையில் பொருள் ஈட்டி செல்வம் பெற்றிடவும், அதை சிறந்த முறையில் பாதுகாத்திடவும், உன்னிடத்தில் மெய்யான பக்தி கொண்டு உன்னுடைய திருவடிகளை நித்தமும் காணும் பாக்கியன் உடைய பாலகனாகிய எனக்கு அருள் புரியவும், பெருமை பொருந்திய இந்த தேகத்தில் சிறு நோய்கள் வராமலும், செம்மை உடையவனாகிய கலிபுருஷன் வந்து அணுகா வண்ணமும், உன்னுடைய சேய் ஆகிய எனக்கு பாக்கியங்களைத் தந்து, விதிக்கப்பட்ட நெறி முறைகளில் வாழ்ந்து வெற்றி பெற்று வாழ்ந்து வரவும், உயிர்களிடத்தில் அன்பு,தயவு போன்றவை இல்லாமல் காலம் முடிந்த உடன் அதை நிறைவேற்ற வரும் காலன் என்னைத் தொடர்ந்து வர ஒட்டாமல் என்னை அன்புடன் காத்திடுவாய்; அதுமட்டுமின்றி உன்னிடத்தில் அன்பு மிக பூண்டு உன்னைப் பற்ரி சிறியவன் ஆகிய நான் சொன்ன கவியில் இருக்கும் பிழைகளைப் பொறுத்து காக்க வேண்டும்.

விளக்க உரை

  • பாக்கியம் – நல்வினை, நற்பேறு; அதிருஷ்டம்; திரு, விதி, பேறு, செல்வம், கஷாயம்
  • சீர் –  உறவினருக்கு விழாக்களில் செய்யப்படும் சீர், செல்வம், அழகு,  நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், கனம், ஓசை, செய்யுளின் ஓருறுப்பு
  • கலியன் – படைவீரன், திருமங்கையாழ்வார், இரட்டைப் பிள்ளைகளுள் ஆண், கலிபுருஷன், சனி, பசித்தவன்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *