வார்த்தை : முப்பாழ்
பொருள்
- வெட்டவெளி அல்லது ஆகாயம்
- மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ்
பாடல்
மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேய முப் பாழ் எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும் முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே
எட்டாம் தந்திரம், திருமூலர்
பதவுரை
மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.
- மாயைப் பாழ் – மாயை நீங்குதல் – மாயப்பாழைக் கடந்தபின் (கர்ம, ஞான இந்திரியங்கள், பூதங்கள், அவற்றின் தன்மைகள், மூன்று குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ், புருஷன் பிரகிருதி என்று உலகில் காணப்படுபவைகளின் ஒடுக்கம் ) கிடைப்பது வாத சித்தி – சாதாரண தேகத்தை ஒளி தேகமாக மாற்றுவது.
- போதப்பாழ் / சீவப்பாழ்/ ஒளிப்பாழ் (சிவன், சக்தி, இச்சா-நியதி, கிரியா-கலா, ஞான-வித்யா, ஆனந்த-ராகம் மற்றும் சித்-காலம் சக்திகள்) – ஆன்ம அறிவு நீங்குதல் – (போதப்பாழ் – இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்திகளைப் பற்றிய அறிவு) கடக்கும்போது ஒருவர் அறுபத்து நான்கு சித்திகளையும் பெறுதல்.
- உபசாந்தப் பாழ் – வியோமாப்பாழ்(காரிய காரணங்களைக் கடந்தது நிற்றல்) – உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்பது – பிராணண் /உயிர்ச்சக்தி பற்றிய அறிவு.
சிவ தத்துவத்தை விளக்கும் 96 வகைத் தத்துவங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் என்பதை மும்மலம் என்பதால் முப்பாழ் என்பதில் இருந்து விலக்கி பொருள் விளக்கப்பட்டுள்ளது.(சில இடங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் ஆகிய மூன்றும் முப்பாழ் என்றே விளக்கப்பட்டுள்ளது)
(இந்த சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)