பாடல்
போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே
பத்தாம் திருமுறை – திருமூலர் – திருமந்திரம்
கருத்து – இறையின் இயல்புகளை உணர்த்தும் பாடல்.
பதவுரை
போற்றப்படுவதாகிய உயிரை இடமாகக் கொண்டு நிலைபெற்று இருக்கும் புனிதத்துவம் மிக்கவனை, நான்கு திசைகளுக்கும், உமா தேவிக்கும் தலைவனாக் இருப்பவனை, மேலான திசை இரண்டிற்குள் ஒன்றான தெற்கு திசைக்குத் மன்னனாகிய கூற்றுவனை உதைத்தவனை அடியேன் புகழ்கின்றேன்.
விளக்க உரை
- இதயத் தாமரையில் உறைபவன்; உலகங்களுக்குத் தலைவன்; கால காலன்; உமையுடம் சேர்ந்து சிவசக்தி ரூபமாக இருப்பவன் எனும் இறை இயல்புகளை உணர்த்தும்
- போற்றுதல் – துதித்தல்
- புனிதன் – இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்
- நல்ல மாதுக்கு நாதன் – ஆன்மாக்களுக்கு அருள் ஞானம் ஊட்டும் தாய் போன்றவன்
- கூற்றுதைத்தான் – காலத்தை வென்றவன்
- என் மனதிள் உள்ள தியானப் பொருளாகிய பரம் பொருளை நான் போற்றுவது போல் நீங்களும் போற்றுங்கள் எனும் கருணைக் குறிப்பு.