
பாடல்
நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்
திருநெறி – சிவஞானசித்தியார்
கருத்து – உமையம்மை சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் ஏற்பட்டவைகளே போக, வேக, யோக வடிவங்கள் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
புவனங்களுக்கு நாயகனின் திருக்கண்களை நாயகி மூடியபோது சகலம், கேவலம், சுத்தம் ஆகிய தத்துவங்கள் ஒன்றான தன்மையான சங்காரம் ஒத்து எங்கும் இருள் சூழ்ந்த போது, தனது நெற்றிக் கண்ணை திறந்தார். அந்த முதல்வன் கொண்ட திருமேனிகள் போகம் கொள்வதன் பொருட்டு சில திருமேனி போகவடிவமும், வினையினை விடுதலை முன்வைத்து சில திருமேனி கோரவடிவமும், யோகமுத்தி தருவதன் பொருட்டு யோக வடிவமும் வெளிப்பட்டன; இவைகள் ஆன்மாக்கள் உய்வுறுவதன் பொருட்டு அருள்புரிக்கூடிவை என்பதால் இந்த அருளுதல் தொழில் செய்வதற்காக திருக்கண் புதைத்த திருவிளையாட்டின் வழி நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதற்கு இது சான்று.
விளக்க உரை
- நயப்பு – அன்பு. விருப்பம், இன்பம், தலைவி எழிலைப் புகழ்கை, மலிவு, இலாபம், மேம்பாடு, நன்மை, மகிழ்ச்சி
- பாய்தல் – பரத்தல்
- தேயம் – உலகம்