மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் கோட்டையாக இருக்கின்றன என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. புத்தியும், சித்தமும் நல்லவற்றை சிந்திக்கும் திறனுனையது ஆனதாலும், அகங்காரம் நல் விஷயங்களை அகங்காரம் உறுதிப்படுத்துவதாலும், பகை என்று அடுத்து வரும் வரிகளால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் அந்தர்க்கரணங்கள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
இத்திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் கூறி அருளியது.
பைய நையும் – மெல்ல வருந்துகின்ற;
வெம்ப – நாம் வருந்தும்படி.
வருகிற்பது அன்று – வரவல்லது அன்று.
கூற்றம் – அஃறிணை சொல். அது பற்றி `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும்.
பைய நையும் – மெல்ல வருந்துகின்ற
செம்மை நிறம் பற்றி பவளம் போன்றவர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர் என்று கூறி இருப்பது அம்மை வடிவமாக அருள் கொண்டதைக் குறித்திருக்கலாம். உணர்ந்தோர் பொருள் உரைப்பின் மகிழ்ந்து உய்வேன்.
மூன்று முறைக்கூறக் காரணம் ஏதாகினும் உண்டா? // கவிதை அழகு + இறைவனின் திருவுருவையே எதிலும் காணுதல் – இரண்டும் தான். வேறென்ன காரணம் வேண்டும்? 🙂 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ – ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் : கம்பர் இப்படி ஒரே வரியில் இராமனின் சியாமள வர்ணத்திற்கு நான்கு உவமைகளைக் கூறவில்லையா, அதுபோலவே இதுவும்.
வேண்டும் நடை – அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும், மெல்லென்றும், தாவியும் நடத்தல். ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் என்பது உண்மைப் பொருள்.
காசி பைரவரருக்கும் பழமையானவரும், வடை மாலை சார்த்தப் படுபவரும், உள்பிரகாரத்தில் அமைந்துள்ளதும் ஆன ஆகாச காசிகா புராதன பைரவர் சந்நிதி
வியாதவேடன் என்ற திருடன் முக்தி பெற்றத் தலம். (பைரவர் சந்நிதி அருகில் வடிவம்)
திருவாசகத்தில் ஆனந்தமாலையில் “அரிய பொருளே அவிநாசியப்பாண்டி வெள்ளமே” என்றும், திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் ‘அவிநாசி கண்டாய்’ என்றும் பாடப்பெற்றத் தலம்.
மாணிக்கவாசகர் மதுரையில் இருந்தபடியே இத்தலத்தைப் பற்றி பாடல் பாடிய திருத்தலம்
‘புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ என்று இறைவனுக்கு சுந்தரர் உத்தவிட்டு முதலையுண்ட பாலகனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும். (கோயிலில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே பூக்கும் தல விருட்சமான பாதிரி மரம்
வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதி
வசிஷ்டர் தனது சனிதோஷம் நீங்க வழிபட்ட தலம்
பதஞ்சலி, சக முனிவருக்கு காசிக்கு நிகரான தலம் என்று காட்டுவதற்காக தன் தண்டத்தை அவிநாசி காசிக் கிணற்றில் போட்டு, காசியில் கங்கையின் அலைகளால் தண்டத்தைப் பெற்றுக் காண்பித்த கிணறு.
கேரள நாட்டு அந்தணன் ஒருவன், தான செய்த பாவங்களால் பேய் வடிவம் பெற்று, அது விலக இங்கே வந்து வணங்கி தேவ வடிவம் பெற்று சிவலோகம் செல்லச் செய்த தலம்.
குருநாத பண்டாரம், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபாடு செய்ய, அரசாங்க அதிகாரிகள் அவர் மகிமை அறியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்த பின், பெரிய மீன் ஒன்றினால் அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பிக்கப்பட்டத் தலம்.
கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்ட போது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்த போது, அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசி, மந்திரக் கட்டு நீக்கி, தேரை நகரச் செய்தத் தலம்.
தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோவில் தேர்களில் அவிநாசிக் கோவில் தேரும் ஒன்று.
இத்தலத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ளவை சேவூர், மொக்கணீஸ்வரம் ஆகிய தேவார வைப்புத்தலங்கள்
பிற நூல்கள் – கருணாம்பிகைசதகம், கரணாம்பிகை யமக அந்தாதி, கருணாம்பிகை பிள்ளைத்தமிழ்
தலம்
திருப்புக்கொளியூர்
பிற பெயர்கள்
திருப்புக்கொளியூர் அவிநாசி , திரு அவிநாசி, தட்சிணகாசி, தென்வாரணாசி, தென்பிரயாகை
சித்திரையில் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரத்தில் முதலைவாய்ப் பிள்ளை உற்சவம் 3 நாட்கள், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா, ஐந்தாம் நாள் உற்சவத்தின் போது ரிஷபாரூடராக திருக்காட்சி
புற்றில் வாழ்கின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, மேலான இடமாகிய கைலாயத்தில் உள்ளவனே, அழிவற்றதாகிய திருப்புக்கொளியூரில் உள்ள, ‘அவனாசி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே! ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 92
திருமுறை எண் 4
உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
விளக்க உரை
`காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
யாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
குறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல் ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே
நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.
விளக்கஉரை
நடலை – துன்பம்
சுடலை – இடுகாடு
ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்
படி – அளக்கப் பயன்படும் ஒரு அளவை, மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி, நூலைப்படிப்பது, படியெடுத்தல், நிலை, தன்மை, அங்கவடி, தராசின் படிக்கல், நூறு பலங் கொண்ட நிறையளவு, நாட்கட்டளை, நாழி, அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள், உபாயம், உதவி, நிலைமை, விதம், வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை, உடம்பு
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! புகழ்ச்சியை உடைய நாரணியே! உன்னை விட அடையத் தக்க பொருளும், உன்னிடத்தில் இருந்து பெறப்படும் அருளும் தாண்டி வேறு ஏதாகினும் உண்டோ? தான் வகுத்த பாதை பற்றி நின்று, பெற்ற குழந்தையைக்கு பால் கொடுத்து வளர்க்காது இருக்கும் அன்னை வேறு உண்டோ ? வெகு நாட்களாக உன்னிடத்தில் இருக்கும் உனது பழைய அடிமை என என் மீது பரிவுகாட்டி, அருள் அமுதத்தினை அளித்து, ஞான வெளியாகிய சிதாகாசப் பெருவெளியை காட்டி, மிகவும் மகிழ்வுடன் ஆனந்தம் கொண்டதால் கண்களில் நீர் சொரிய அளிக்கத் தக்கதான மெய்ஞ்ஞானச் சாரம் எல்லாம் தந்தோம் என்று உரைத்த தாயாகிய நீ, இதை மறந்து என்னை மறந்தால் எவர் பகைவர்களாக முடிய்ம்; நான் என்ன செய்ய இயலும்? நான் வினைபற்றி நின்று பொல்லாதவன் ஆக இருப்பினும் உன்பிள்ளை என்று எனக்கு அருள்புரிய வேண்டும்.
விளக்கஉரை
தேசி – பெரிய குதிரை, இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்.
‘பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு விரும்பர னே‘ எனும் திருவாசக வரிகளோடும், பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடு தொண்டாற்றும் திறம் உடையவர்கள் என்பது கண்டு ஒப்புநோக்கி அறிக.
முன்னர் கூறப்பட்டவாறு எந்திரங்களில் வாசனை திரவியங்களைப் பூசி, செவ்வரளி பூக்களை வாங்கி அதன் மேல் சாற்றி, வடை, தேன், பால், வாசி வழி மனம் அடங்க அன்னம், மாங்கனி, வறுகடலை மற்றும் பயிறு தானியங்கள் இவைகளை நைவேத்தியமாக வைத்து மனதில் உறுதிகொண்டு முழுமை அடந்தவளே, மிகவும் அழகு நிரம்பப் பெற்றவளே, சிங்கம் போன்றவளே, தாயானவளே என்று தினம் தோறும் மந்திரத்தை செபித்து, பேசித் திரியாமல் மௌனமாக பூசிக்க வேண்டும்.
விளக்கஉரை
தேசி – பெரிய குதிரை,ஓர் இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்
வாமம்வைத்துப் பேரான மாமிசமும் –
மாமிசம் – மா-ம்-இ- சம்
மா – பெருமை மிக்க
ம்-இம் எனும் ஊமை மூலம்
இ-அருட்பிரணவம்
சம்- சுகம்
இடது பக்கமாக வாசி செல்லும்படி செய்து பெருமை மிக்கதும் சுகம் தருவதும் ஆன ‘இம்’ எனும் ஊமை மூலம் கொண்டு பூசிக்கவேண்டும். அம்மை ஈசனின் இடப்பாகத்தவள் என்பதை ‘வாமபாகம் வவ்வியதே’ எனும் வரிகள் மூலம் நினைவு கூறலாம். அன்னை மகார வடிவமாக இருப்பதை ‘மகாரப் பிரியை’ எனும் திருநாமம் கொண்டு அறியலாம். மேலும் ‘ம்’ என்பது ஜீவாத்மாவை குறிப்பதாகும்; ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும். இவ்வாறு பூசிக்க வேண்டும் எனவும் கொள்ளலாம்.
மா சக்தி நிறைந்தவளான அன்னை பூசை பற்றியதாலும், முருகனே அகத்தியருக்கு உபதேசிப்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
உமை உலகில் உள்ள பொருள்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், திரவிய தானம் செய்யும் மனிதன் புண்ணியம் அடைவது எவ்வாறு?
சிவன்
பஞ்ச பூதத்தினால் ஆன பொருள்கள் அனைவருக்கும் பொதுவானது. கொடுப்பவன், வாங்குபவன், கொடுக்கப்படும் பொருள், கொடுக்கும் வகை, காலம், இடம் ஆகிய எல்லாம் சேர்ந்தே தானம் எனப்படுகிறது. மனம், வாக்கு, காயம் இவற்றால் பரிசுத்தனாக இருந்து சத்தியமே கொண்டிருப்பவனும், கோபம், லோபம், பொறாமை ஆகிய இவைகள் இல்லாதவனும், சிரத்தையும், நம்பிக்கை உடையவனும் சிறப்புக்கு உரியவன் ஆகிறான், அவன் தானம் செய்யத் தக்கவன். பரிசுத்தமானவனும், புலன்களையும், கோபத்தையும் அடக்கியவனும், ஏழையானவனும், கல்வி, ஒழுக்கம் உள்ளவனும், பெரியதான குடும்பம் உள்ளவனும், பஞ்ச மகா யக்யங்கள் ஆகியவற்றை தவறாமல் செய்பவனும், அங்கங்களில் குறைபாடு இல்லாதவனும் ஆக இருத்தல் தானம் பெறுபவனுக்கான தர்மமாகும்.
பித்ரு காரியத்திலும், தேவ காரியத்திலும் அக்னி பூசையிலும் தானம் செய்வதில் பலன் அதிகம். எவன் எவன் எதற்கு தகுதி உடையவன் ஆகிறானோ அதற்கு அவன் பாத்திரமாகிறான். ஆபத்தில் இருப்பவனை ஆபத்தில் இருந்து விடுவிப்பதால் அவன் பாத்திரன் ஆகிறான். பசித்தவனுக்கு அன்னமிடல், தாகம் கொண்டனுக்கு நீர் அளித்தல் என ஒவ்வொருவரும் பாத்திரர்களாக ஆகின்றனர்.
கொடிய வஞ்சகத் தன்மை கொண்டவனும், திருட்டும், விபச்சாரம் செய்பவனும், ஆண் தன்மை அற்றவனும், பிற உயிர்களைக் கொல்பவனும், ஆசாரத்தை கெடுப்பவனும், உலகிற்கு கெடுதல் செய்பவனும் தானம் அளிப்பதில் இருந்து முற்றிலும் விலக்கத் தக்கவர்கள். பிறர் பொருளை திருடியும், தயை இல்லாதவன் இடத்தில் இருந்து வாங்கியும், சூதாட்டத்தில் ஈடுபட்டும், தீய செயல்களை செய்தும், பொருள் ஆசையினால் பெரும்பாலானவர்களுக்கு தீங்கு இழைத்தும் மனிதர்கள் பெறும் தனம் மிகவும் இழிவானது. அப்படிப்பட்ட தனத்தில் செய்யப்படும் தர்மம் வீண் என்று அறிவாயாக. ஆகவே புண்ணியத்தை விருப்புகிறவன் நியாமாக ஈட்டிய பொருளை தானம் செய்ய வேண்டும். எது எக்காலத்திலும் தனக்கு பிரியமானதாக இருக்கிறதோ அதைத் தானம் செய்ய வேண்டும்.
இனி தானம் செய்யும் முறையைக் கூறுகிறேன் கேள்.
தகுதி உடையவனை நாடிச் சென்று அவனிடம் வேண்டி அவன் சந்தோஷம் கொள்ளுமாறு தானம் செய்ய வேண்டும். இதுவே சிறந்த முறை. கேட்டப்பின் அளிப்பது என்பது இரண்டாம் தரமுடைய தானம் ஆகும். தானம் அளிக்கும் போது அன்பு, அக்கறை, ஈடுபாடு கொண்டு செய்யவேண்டும். யாசிப்பவர்களை சரியான காலத்திலும், இடத்திலும் அன்புடனும், மரியாதையுடனும் அழைத்து தானம் செய்ய வேண்டும்.
தன் சக்திற்கு மேற்பட்ட தானம் மிகவும் உத்தமானது. தன் சக்திற்கு உட்பட்ட தானம் இரண்டாம் நிலை ஆகும். தன் சக்திற்கு மிக மிகக் குறைவாக செய்யப்படும் தானம் இழிவான தானம் ஆகும். வாக்கினால் எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறு தானம் செய்ய வேண்டும். புண்ணியத் தலங்களிலும், புண்ணிய காலங்களிலும் செய்யப்படும் தானம் மிகச்சிறந்ததானது.
உமை மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில் தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
பதவுரை
திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில் குட்டிக் கொண்டு, அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும் ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.