அமுதமொழி – சோபகிருது – புரட்டாசி – 4 (2023)


பாடல்

மூலமண்ட லத்திலே முச்சதுர மாதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுவுதித்த மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த திட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்துஅனைத்துமாகி நிற்கும் சிவத்தை காணுதலை கூறும் பாடல்.

பதவுரை

மூலாதாரத்தின் அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமும்  அதனை சுற்றி நான்கு தாமரை இதழ் கொண்ட அமைப்பும் உடையது. அந்த இதழ்கள் ஒவ்வொன்றும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் எனும் அந்தக்கரணத்தால்  குறிப்பிடப்படுகின்றன. இவைகளுக்கான அக்ஷரங்கள் ‘வ, ச, ஷ, ஸ.’ இதற்கு தலைவனாக விளங்கக்கூடியது ஓங்காரம். இவ்வாறு இருக்கும் ஓங்காரத்துடன் ‘ரீம் உம்’ ஆகிய அட்சரங்களை (குரு உபதேசம் செய்தபடி) கூட்டி தனது மனதினை சாட்சியாக வைத்து எட்டு இதழ்களிலும் வெவ்வேறு விதமாய் ஜபம் செய்ய குளிர்ச்சி உடையதும், நிலையானதுமான சோதிவடிவமாக சிவம் இருக்கின்றது என்பதை அறியலாம். இதை விடுத்து வேறு ஒன்றையும் காணவில்லை.

விளக்க உரை

  • எட்டு இதழ்கள் – எண் சாண் உடல் எனவும், நாலுவாசல் என்பதை அண்டஜம் (முட்டையில் இருந்து பிறப்பவை), ஜராயுதம் (கருப்பையில் பிறப்பவை), உத்பிஜம் (வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை), சுவேதஜம் (வேர்வையில் இருந்து கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை) எனக் கொண்டு அனைத்து பிறப்புகளுக்கும் தலைவனாக இருக்கிறான் என்றும் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
  • கணபதியும் சிவமும் வேறு வேறு அல்ல எனவும் கொள்ளலாம்.

சித்தர் பாடலுக்கு உண்டான விளக்கத்தினை மானிட சரீரம் கொண்டு எழுதப்பட்டதால் விளக்கங்களில் பிழை இருக்கலாம். பிழை எனில் சரீரம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள் #சிவவாக்கியர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மாசி – 26 (2023)


பாடல்

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – அகம், புறம் அனைத்தும் மாயைக்கு உட்பட்டது எனவும், இதை கடந்து நிற்பது ராம எனும் நாமம் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

செல்வத்தின் மீது பற்று வைத்து இருக்கும் குலாமரே! மும்மலங்களுக்கு உட்பட்டு பேதப்பட்டு நான் என்றும் நீ என்றும் நாம் பேசும் பொருட்கள் எல்லாம் எவை? புறப் பொருளுக்கும், அகப் பொருளுக்கும் நடுவில் நாம் இருவரும் அல்லாமல் இருப்பது எது? நான், நீ மற்றும் புறப்பொருள் ஆகியவற்றுக்கு கோனாகிய தலைவன் யார்? இவற்றை காக்கும் குரு யார்? எல்லாப் பொருள்களையும் தன்னில் கொண்டு அண்டத் தோற்றம், ஒடுக்கம் ஆகியவற்றுக்கு காரணமாக இருந்து இவற்றில் இருந்து விலகி இருப்பது யார்? எல்லாவற்றையும் கடந்து கடைசியில் நிற்பது எது எனில் அது இராம இராம என்னும் நாமமே என்பதை அறிவீர்களாக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – பங்குனி – 24 (2022)


பாடல்

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – செல்வம் போன்ற இகலோக விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் தனக்கு மெய்வீட்டினை காட்டி அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவம் அழியச் செய்வதற்காக அவர்கள் செய்த யாகத்தில் இருந்து தோன்றிய யானையை   கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து பிட்சாண்டவர் வடிவம் கொண்டவனே! வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பதற்காக ஆட்டை கட்டி வைத்து பிடிப்பது போல இகலோக வாழ்வில் உழலச் செய்வதற்காக உறவுகள், செல்வம் போன்றவற்றைக் கொண்டு என்னுடைய மதியினை மயக்குதல் முறையோ? மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே நிலைபெறுமாறு செய்து உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.

விளக்க உரை

  • பதி, பசு, பாசம் என்ற சைவத்தின் மூன்று பெரும் பகுப்புகளில் மாடு எனும் பசுவானது அளவுக்கு உட்பட்டதாகிய ஜீவனைக் குறிக்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 18 (2021)


பாடல்

ஆலவித்தி லாலொடுங்கி யாலமான வாறுபோல்
வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர்
ஆறுவித்தை யோர்கிலீ ரறிவிலாத மாந்தரே
பாருமித்தை யும்முளே பரப்பிரம மானதே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – யோக முறையில் ஆறு ஆதாரங்களைக் கடந்து செல்கையில் பிரம்மத்தினை உணரலாம் என உரைக்கும் பாடல்.

பதவுரை

மிகச்சிறியதான ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளானது ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இந்த உலக வடிவம் கொள்கிறது; இவ்வாறு ஒரேழுத்து கொண்டு பிரமமாகி நமக்குள் இருக்கும்  மெய்ப்பொருளை அறிந்து கொண்டு,   யோக முறையில், வாசியை ஏற்றி இறக்கி  அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பிரம்மத்தினை காணுமாறு செய்தால்  நீங்களே அந்த பரப்பிரம்மம் ஆவீர்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 28 (2021)


பாடல்

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தவல்லி யோனியும்

நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்றதொன்றும் கண்டிலேன்

குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்

நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படான் நம்ஈசனே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

நெட்டெழுத்துக்கள் யாவும் முதலும் முடிவும் இல்லா வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு தோன்றி வருகின்றது; குற்றெழுத்துக்களாகிய ‘க முதல் ‘ன வரையில் அகார ஒலியில் ஒன்றி இருக்கும்; அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் அந்த வட்ட எழுத்துக்களின் ஒலி மாறும்.. இவ்வாறு எழுத்துக்கள் யாவும் வட்ட வடிவ ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து அவனை துதியுங்கள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 07-Feb-2021


பாடல்

தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறைதிறந்து தித்திஒன்று ஒத்ததே
வானிருந்து மதியமூன்று தண்டலம் புகுந்தபின்
ஊனிருந்து அளவுகொண்ட யோகிநல்ல யோகியே!

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

தானாக தன்னில் மூழ்கி, மூழ்கி  மூலாதாரத்தில் இருந்து யோக மார்கத்தில் இருந்து கனல் எழுப்பி தித்திப்பினை தருவதான தேன் ஒத்தது போன்ற அறைக்கதவினை திறந்து(குரு மூலமாக அறிக), சூரிய கலை, சந்திர கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று மண்டலங்களின் வழியே வாசியினை செலுத்தி, துவாத சாந்தத்தினை அடைந்தவர்கள் நல்ல யோகிகளாக இருப்பார்கள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 7-Jan-2021


பாடல்

சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநாரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சும் தாம்இறந்து போனதே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

கூட்டில் அடைக்கப்பட்டதான நான்கு சேவல்களும், ஐந்து கோழிக் குஞ்சுகளும் ஒன்றுக் கொன்று சண்டையிட்டு அவைகள் மடிந்து விடும். அந்தக்கூட்டத்தில் ஒரு கிழ நரியானது புகுந்துவிட்டால் சண்டை செய்யாமல் அவைகள் இறந்துவிடும். அதுபோல் இந்த உடலில் எமன் புகுந்துவிட்டால் அந்தக்கரணங்கள் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய நான்கும், அது பற்றி அதோடு இருப்பதான மெய், வாய்,கண், மூக்கு, செவி எனும் பஞ்ச இந்திரியங்கள் அனைத்தும் இறப்பினை எய்தி அனைத்தும் ஆன்மாவில் அடங்கிவிடும்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Dec-2020


பாடல்

முற்றுமே அவனொழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றில்லாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது
கற்றதாலே ஈசர் பாதங் காணலா யிருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

அனைத்திலும் அவனே வியாபித்து இருப்பதால் அனைத்திலும்  அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன்; எதையும் பற்றி நில்லாமலும் அநாதியாகவும் இருக்கக்கூடிய பரம்பொருளாகி நம்மை பற்றி நிற்கும் வல்லமை உடையவனாகிய அவனை அடைவது பற்றி கற்ற பின்னும் அவனுடைய திருவடிகளைக் காணாமல் இருக்கலாமோ? அவனையே முழுமையாக நினைந்து அவனுடைய திருவடிகளை அடைந்த குருவிற்கு அன்பும் பக்தியும் கொண்டு அவரிடத்தில் கேட்டால் குரு அதுபற்றி உணர்த்துவார்கள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 17-Dec-2020


பாடல்

அன்னம் இட்ட பேரெலாம் அநேக கோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வார் வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற திண்ணமே!

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

பசித்து வந்தவர்களுக்கு அன்னதானம் செய்தவர்கள் காலம் கடந்து வாழ்வதை அறியாமல், அன்னதானம் செய்வதற்கு பொன், பொருள் ஈந்தவர்கள் பொருள் ஈதல்பற்றி கர்வம் கொண்டு அதிகாரம் செய்யலாம்; ஐம்புலக் கள்வர்களை விலக்காமல் அவைகளைக் கடந்து நின்ற பரம்பொருளை அறியாதவர்கள் இறைவன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதை அறியாமல் அன்னதானம் செய்வதை குறித்து எதிர்மறை கருத்துக்கள் பேசி, குற்றம் என்று கூறி துன்பம் தரத்தக்க பாழும் நரகக் குழியில் வீழ்ந்து துயறுருவார்கள்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 02-Dec-2020


பாடல்

பருத்திநூல் முறுக்கியிட்டுப் பஞ்சியோது மாந்தரே
துருத்திநூல் முறுக்கியிட்டு துன்பநீங்க வல்லீரேல்
கருத்திநூல் கலைப்படுங் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயவஞ் செழுத்துமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

மாந்தர்களே! பருத்தியை முறுக்கி திரிக்க பஞ்சு நூல் மாறி நூல்திரியாக வரும்; அதன் பின் பஞ்சு இருக்காது; அதுபோல,காற்று தங்கும் இடமான இந்த தோல்பை போன்ற உடலில் சூரிய கலை, சந்திரகலை ஆகியவற்றை கருத்தில் வைத்து முருக்கி மேலேற்றி அக்கினி கலையுடன் கலக்கச் செய்து சிவாய எனும் ஐந்தெழுத்தினை ஓதும் போது தொந்த வினைகளை நீக்கி  காலத்தினை கடந்துவிடலாம்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 29-Nov-2020


பாடல்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

மாலை, சந்தியா காலம் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தி, மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியான மாலை, உச்சிக்காலம் ஆகிய காலங்களில் காலம் தவறாமல் தீர்த்தங்களில் நீராடியும், மாலையில் செய்யப்படுவதான தர்பணங்களும், புறத்தால் செய்யப்படுவதாகிய ஜெபம், ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளாகிய தவமும், சிறந்த சிந்தனை உடையவர்களும், ஞானமும் கொண்டவர்களால் நித்தமு ஜெபிக்கப்படும் மந்திரம் எம் தலைவன் ஆகிய ராமனின் நாமமாகிய ராம ராம ராம எனும் நாமமே.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 14 (2019)


பாடல்

சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே

சிவவாக்கியர்

கருத்துசுழுமுனை வழியே வாசி பற்றி நிற்பவர்கள் ஈசனும் ஒன்றாக கூடி வாழும் தன்மை உடையவர்கள் ஆவார் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு இருப்பதான இடகலை, பிங்கலை எனப்படும் சங்குகள் இரண்டு கொண்டும் சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டும் இருப்பதை அறியாமல் உலகில் எத்தனையோ மானிடர்கள் நெருப்பால் சுடப்பட்டு அழிகின்றனர். அவ்வாறு இல்லாமல் இடகலை, பிங்கலை இரண்டையும் தவிர்த்து சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டு வாசி பற்றி அதை ஊத வல்லவர்கள் உலகிற்கு அமுது அளிக்கும் அன்னையுடன் கூடியவரான பாகம் உடையவராகிய ஈசனும் ஒன்றாக கூடி வாழ இயலும்.

விளக்க உரை

  • அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
  • மாளுதல் – சாதல், அழிதல், கழிதல், இயலுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 2 (2019)


பாடல்

ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே

சிவவாக்கியர்

கருத்து –  அகத்திலும் புறத்திலும் நிறைந்திருக்கும் ஈசனை வழிபடும் முறையை கூறும் பாடல்

பதவுரை

யோக சாதனை செய்து தவ வாழ்வு மேற்கொள்பவர்களால் கண்டம் எனப்படுவதாகிய கழுத்தில் இருந்து சங்கின் ஒலியை எழுப்ப இயலும். அது அகத்தில் இருந்து பெறப்பட்டு புறத்தில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அகம் புறம் அனைத்திலும் நிறைந்திருக்கும் ஈசனையும் அவன் திருவருளையும் உணராமல் புற உடல் சார்ந்து அதற்கு மட்டும் மதிப்பு அளித்தல் எவ்வாறு பொருந்தும்?

விளக்க உரை

  • ‘ஒரு கல்லை இரண்டாய் உடைத்து ஒன்றை வாசலில் பதித்தும் இன்னொன்றைக் கடவுள் எனச் சிலை செய்து வணங்குகிறீர்கள்;. இவற்றில் ஈசனுக்குகந்த கல் எதுவென்று கொள்ள முடியும் என்று வினவுகிறார்’ என்று பல இடங்களில் விளக்கம் காணப்படுகிறது. சிவனுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் சித்தர் என்பதாலும், உருவ வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதாலும் பொதுவான இக்கருத்து விலக்கப்படுகிறது.  ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சித்தர் பாடல் என்பதாலும் ஈசனிடம் இருந்து பெறப்பட்ட அனுபங்களை விவரித்து எழுதியதாலும் பதவுரையில் பொருள் குற்றம் இருக்கலாம். குறை எனில் மானிடப் பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 17 (2019)

பாடல்

ஆடுநாடு தேடினு மானைசேனை தேடினும்
கோடிவாசி தேடினுங் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையு முகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம்வந்து நிற்குமே

சிவவாக்கியர்

பதவுரை

தனவானகளாக காட்ட கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆடுகளையும், கணக்கற்ற எல்லைப்பகுதியாகிய நாடு என்பதை விரிவாக்கம் செய்தும், கணக்கற்றதான காட்டுப்பரப்பில் மான்களையும், சேனைப் படைகளையும் மிகுந்த முயற்சியுடன் செய்யப்படும் கணக்கற்றதான வாசி தேடினும் உடலை விட்டு உயிர் பிரிந்து போகும்போது உறுதுணையாக வந்து உதவுமோ? நிச்சயமாக உதவாது. தானே விரும்பிச் சென்று ஐந்து அறிவும் அதற்கு கீழான நிலையில் காணப்படும் உயிர்களுக்கு தரப்படுவதானான பிச்சையும், மனம் விரும்பி பிறர் உந்துதல் இல்லாமல் ஆறாம் அறிவுடைய உயிர்களுக்கு செய்யப்படுவதாகிய தர்மமும் மட்டுமே சவுக்குக்கு கட்டுப்படும் குதிரை போல் உறுதுணையாக வந்து நிற்கும்.

விளக்க உரை

  • ‘பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே’ எனும் பட்டினத்தார் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 13 (2018)

பாடல்

அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே

சிவவாக்கியர்

பதவுரை

பார்த்தல், கேட்டல், சுவைத்தல் , நுகா்தல் மற்றும் தொடுதல் ஆகிய ஐம்புலன்களும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் ஐம்பூதங்களும் நமசிவய எனும் ஐந்தெழுத்தான சதாசிவமேயன்றி வேறல்ல. ஐம்பூதங்களுடன் ஐம்புலன்கள் இணைந்த கலவையான உயிர்பிறப்புகளும் அனைவற்றுக்கும் எல்லையான ஐந்தெழுத்தான ஆதிமூலமேயன்றி வேறல்ல. எவ்வாறு வளர்ச்சியுறும் கனியை பிஞ்சென்று உரைப்பார்களோ அது போன்ற அளவிலா நிறைந்தவோர் அருட்பெரும் சோதியினின்று பிரிந்து வந்த (பிய்ந்து வந்த) ஒரு துகளே வளரும் நிலைகொண்ட கனலாகும். இக்கனலே அகத்துள் உறைந்து ஐம்பூத மற்றும் ஐம்புலக் கலவையான உயிரினங்களை இயக்குகிறது. இதனை உணராதவர்கள் அவரவர் வாய்ப் போக்கில் உரை செய்வார்கள்; ஈஸ்வர வடிவமான இந்த ஐந்தெழுத்தை உள்ளத்தில் நிலை நிறுத்தி வைக்கக் கூடிய வல்லமை பெற்றோர், எண்ணிக்கையால் குறிப்பிடப்படும் நிலைகளைக் கடந்து (அதாவது ஐம்புலன்கள் மற்றும் ஆறுநிலைகளான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா) மேலும் கடக்க எந்த நிலையுமல்லாத மிக உன்னதமான இறுதி எனும் பரமானந்த நிலை எய்துவர்.

விளக்க உரை

  • தொக்குதல் – ஒருமிக்கச் சேர்தல்; ஒன்றுபடல்
  • *

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமூலர் திருமந்திரப் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது

இந்தப் பாடலின் விளக்கம் முழுவதும் குரு நாதரால் அருளி உரை செய்யப்பட்டது.

மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 8 (2018)

பாடல்

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

சிவவாக்கியர்

பதவுரை

அருளைத் தரும் நாதர் மற்றும் அம்மையின் உண்மையான திருவடிகளைக் கொண்டு இயம்புவது என்னவெனில் வினையது கொண்டு உருவம் கொண்ட உடலில் இருக்கும் நாடியில் தசவாயுக்களில் ஒன்றானதும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் ஆகிய வாயுக்களுடன் இணைந்து அவற்றை இயக்கி தானும் இயங்குவதான தனஞ்செயனை எண்ணத்தினால் குவித்து துரியத்தின் இடமான கபாலத்தில் ஏற்றும் முறையை தெரிந்து கொண்டால், முதுமை உடையவர்களும் இளமைத் தோற்றம் உடையவராக ஆகிவிடுவார்கள்; அவர்களது மேனி சிவப்பு நிறம் கொண்டிடும்.

விளக்க உரை

  • கபாலம் ஏற்றுதல் – குரு மூலமாக அறிக.

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

சிவவாக்கியர்

தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில்  உருவாகின்றன.

சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.

பாடல்

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!

விளக்கம்

அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை    வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில்  விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.

இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.

அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.

விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்

இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.

எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.

சமூக ஊடகங்கள்