பாடல்
வெகுநாட் பழைய அடிமையென
மிகவுங் கனிந்தே அருள்அளித்து
வெளியைக் காட்டிக் களிப்புடனே
விம்மி விழிநீர் சொரிந்தருளத்
தகுமெய்ஞ் ஞானச் சாரமெலாந்
தந்தோம் தந்தோம் என்றுரைத்த
தாய்தான் மறந்தால் உலகில் இனித்
தான்ஆர் பகைஆர்என்செய்கேன்
புகழ்நாரணியே உன்னைவிடப்
பொருளும் அருளும் வேறுண்டோ
பொல்லா தவனே யானாலும்
பிள்ளை இவனென் றருள்புரிவாய்
வகுத்த சேயைப் பால்கொடுத்து
வளர்க்கா திருக்கும் தாய்உண்டோ
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! புகழ்ச்சியை உடைய நாரணியே! உன்னை விட அடையத் தக்க பொருளும், உன்னிடத்தில் இருந்து பெறப்படும் அருளும் தாண்டி வேறு ஏதாகினும் உண்டோ? தான் வகுத்த பாதை பற்றி நின்று, பெற்ற குழந்தையைக்கு பால் கொடுத்து வளர்க்காது இருக்கும் அன்னை வேறு உண்டோ ? வெகு நாட்களாக உன்னிடத்தில் இருக்கும் உனது பழைய அடிமை என என் மீது பரிவுகாட்டி, அருள் அமுதத்தினை அளித்து, ஞான வெளியாகிய சிதாகாசப் பெருவெளியை காட்டி, மிகவும் மகிழ்வுடன் ஆனந்தம் கொண்டதால் கண்களில் நீர் சொரிய அளிக்கத் தக்கதான மெய்ஞ்ஞானச் சாரம் எல்லாம் தந்தோம் என்று உரைத்த தாயாகிய நீ, இதை மறந்து என்னை மறந்தால் எவர் பகைவர்களாக முடிய்ம்; நான் என்ன செய்ய இயலும்? நான் வினைபற்றி நின்று பொல்லாதவன் ஆக இருப்பினும் உன்பிள்ளை என்று எனக்கு அருள்புரிய வேண்டும்.
விளக்க உரை
- தேசி – பெரிய குதிரை, இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்.
- ‘பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு விரும்பர னே‘ எனும் திருவாசக வரிகளோடும், பழைய அடியார்களது உண்மைத் தொண்டோடு தொண்டாற்றும் திறம் உடையவர்கள் என்பது கண்டு ஒப்புநோக்கி அறிக.