பாடல்
படிக் குந்தண் டாயுத மென்பார்க்கு நோய்வினை பற்றறுப்பப்
பிடிக்கும்தண் டாயுத மெண்ணருங் கோடிப்ர மாண்டமெல்லாம்
முடிக்கும்தண் டாயுத மூதண்டந் தாண்டு முகுந்தன்சென்னி
தடிக்கும்தண்டாயுதனே காழி யாபதுத் தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
திருமாலின் உந்திக்கமலத்தில் இருந்து தோன்றிய பிரம்மனின் தலையை கொய்து தண்டித்த கைகளில் தண்டாயுத்தை உடைய ஆபதுத்தாரணனே! கைகளில் பிடித்திருக்கும் தண்டாயுதமானது எண்ண இயலாத கோடி கணக்காண செயல்களை முடிக்கும் தன்மை உடையது; உடம்பினையும் காக்கும் தண்டாயுதம் என்று கூறுபவர்களுக்கு நோயினையும், இருவினையாகிய நல்வினை மற்றும் தீவினை ஆகியவைகளையும் நீக்கி வினையற்று போக்கும்.
விளக்க உரை
- படி – அளக்கப் பயன்படும் ஒரு அளவை, மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி, நூலைப்படிப்பது, படியெடுத்தல், நிலை, தன்மை, அங்கவடி, தராசின் படிக்கல், நூறு பலங் கொண்ட நிறையளவு, நாட்கட்டளை, நாழி, அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள், உபாயம், உதவி, நிலைமை, விதம், வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை, உடம்பு
- மூதண்டம் – பிரமாண்டம், உந்திக்கமலம் விரிந்தால் விரியும், பிரமாண்டத்தின் முகடு, அறுகு