அமுதமொழி – ஸ்ரீ  பராபவ‌ – ஐப்பசி – 8 (2026)


திருநாவுக்கரசர் தேவாரத்தில் பைரவப் பெருமான் குறித்த பாடல்கள்

பாடல்

பாடல்வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்
காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்து
ஆடு அரங்கத்து இடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – சிவ பெருமானின் அருட்செயல்களை உரைத்து அவர் உறையும் தலம் ஆரூர் என உரைக்கும் பாடல்

பதவுரை

முத்தி பெறுதலை ஞானானந்தக் கூத்து ஆடும் அரங்கமாக நிலை நிறுத்தியவனும், தன் திருமுடியைக் காண்பதற்கு வேதம் ஓதும் பிரமன் அன்ன வானத்தில் தொடர்ந்து உயரத் தேடி ஓடுகின்ற வெளியிடத்தைத் தான் ஆடும் அரங்கமாகக் கொள்பவனும், ஒவ்வொரு ஊழிக் காலங்களிலும் அழியாமல் இருப்பவனும், சுடுகாட்டை ஆடும் அரங்கமாக மகிழ்ந்து ஏற்பவனும், தன்னை வழிபாடு செய்யும் மகளிருடைய கண்களையும் மனத்தையும் தான் ஆடும் அரங்கமாகக் கொண்டு அவற்றிடை உறைபவனும் ஆரூர் அமர்ந்த அம்மானேயாவான்.

விளக்கஉரை

  • வீடு அரங்கு ஆ நிறுப்பான் – முத்தியை ஞானானந்தக் கூத்து ஆடும் அரங்கமாக நிறுத்துபவன்.
  • விசும்பு – விண், வானம்.
  • வேதி – வேதத்தினை ஓதும் நான்முகன்
  • தொடர – அன்னப் பறவையாகி திருமுடி தேட
  • ஓடு அரங்கு – தேடி ஓடுகின்ற வெளியிடம்
  • வேதி விசிம்பினைத் தொடராமை – கையிலுள்ள பிரமகபாலம் வெளிப்படுத்தும்
  • காரிகையார்கள் மனத்து ஆடு அரங்கத்து ‍ – இயல்பிலேயே நில்லாது புறத்தில் ஒட முற்படும் என்பதால் இந்த வரிகள் வந்திருக்கலாம். (மான் மழு கையில் ஏந்தி ‍ – மான் நிலை இல்லாமல் செல்வதன் ஒப்புமை நோக்குக; ஆன்றோர் பொருள் அறிந்து உய்க‌)

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #பைரவர் #திருமுறை #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் # திருவாரூர் #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!