பாடல்
நான்எனவும் நீஎனவும் இரு தன்மை
நாடாமல், நடுவே சும்மா
தான் அமரும் நிலை இதுவே சத்தியம் சத்-
தியம் என, நீ தமியனேற்கு
மோனகுரு ஆகியும், கை கட்டினையே,
திரும்பவும் நான் முளைத்துத் தோன்றி,
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே,
பரந்தேனே, வஞ்சனேனே.
தாயுமானவர்
பதவுரை
நான் என்னும் நிலையும், நீ என்னும் நிலையும் கொண்டு அதை நான் நாடாமல், மௌனத்தில் அந்த இருநிலைகளுக்கும் இல்லாமல் நடுநிலை கொண்டு ஏகத்துவம் ஆகியதும், இறை கூட்டுவிக்க தானே அமரும் நிலையானதும் ஆன இந்த நிலையே உண்மை இது சத்தியம், சத்தியம் என்று எனக்கு மௌன குருவாகி என்னை கட்டினாய்; ஆனால் நான் திரும்பவும் இங்கு பிறப்பு கொண்டு குற்றம் புரிவதானதும், மனம் போன மார்க்கமாகமான மானக்கேடாகவும் உள்ள மார்கமாக வஞ்சகம் உடையவனாகி, அலைந்து இங்கு வந்து பரந்து விரிகின்றேன்.
விளக்க உரை
- சத்தியம் உரைக்கும் கால் அதுவே இறுதி என்பதை உரைக்க இருமுறை உரைத்தல் மரபு