பாடல்
உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை – வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை
கடுவெளிச் சித்தர்
பதவுரை
இந்த உடலானது நல்லதொரு நாடு போன்றது. ஞான நிலை அடையவொட்டாமல் தடுப்பதாகியதும், மனதால் மட்டும் வசப்படுத்தப்படுவதும் ஆன காமம், குரோதம், மத மாற்சரியம் என்னும் நால்வகை தீமையும், பகைக் குணங்களையும் கொண்டு யாரு அசைக்க முடியாதபடி கோட்டையாக நாட்டைனைச் சுற்றி அமைத்துள்ளது. இந்த நால்வகைப் பகைகளையும் ஓடாதவாறு செய்து விட்டால் உடல் என்னும் நாட்டினை நம் வசப்படுத்தி ஆளலாம். வஞ்சனையை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கும் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய புலன்களைம் ஞானத்தீயினால் எரித்து விட்டால் மெய்வீடானதும், பிறவாமை ஆகியதும் ஆன முக்தி / வீடு பேறு கிடைக்கும்.
விளக்க உரை
- மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் கோட்டையாக இருக்கின்றன என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. புத்தியும், சித்தமும் நல்லவற்றை சிந்திக்கும் திறனுனையது ஆனதாலும், அகங்காரம் நல் விஷயங்களை அகங்காரம் உறுதிப்படுத்துவதாலும், பகை என்று அடுத்து வரும் வரிகளால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் அந்தர்க்கரணங்கள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.