தல வரலாறு (சுருக்கம்) / சிறப்புகள் – திருப்புக்கொளியூர்
- பழைய ஊரான புக்கொளியூர் நத்தம் அழிந்து வெட்ட வெளியான பின் உருவானதே தற்போது உள்ள அவிநாசி
- விநாசம் இல்லாததால் அவிநாசி
- வாராணஸிக் கொழுந்து – காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி
- ஊர்த்துத் தாண்டவம் நடைபெற்றத் தலம்
- 32 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
- சிம்மவாகனத்துடன் கூடிய நர்த்தனகணபதி
- தட்சிணாமூர்த்தி நடனக்கோலத்தில் (ராஜகோபுரத்தின் தென்திசையில்). கோஷ்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி
- அம்பாள் சந்நிதி கருவறை சுவற்றில் தேளின் வடிவம்
- காசி பைரவரருக்கும் பழமையானவரும், வடை மாலை சார்த்தப் படுபவரும், உள்பிரகாரத்தில் அமைந்துள்ளதும் ஆன ஆகாச காசிகா புராதன பைரவர் சந்நிதி
- வியாதவேடன் என்ற திருடன் முக்தி பெற்றத் தலம். (பைரவர் சந்நிதி அருகில் வடிவம்)
- திருவாசகத்தில் ஆனந்தமாலையில் “அரிய பொருளே அவிநாசியப்பாண்டி வெள்ளமே” என்றும், திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் ‘அவிநாசி கண்டாய்’ என்றும் பாடப்பெற்றத் தலம்.
- மாணிக்கவாசகர் மதுரையில் இருந்தபடியே இத்தலத்தைப் பற்றி பாடல் பாடிய திருத்தலம்
- ‘புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ என்று இறைவனுக்கு சுந்தரர் உத்தவிட்டு முதலையுண்ட பாலகனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும். (கோயிலில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
- பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே பூக்கும் தல விருட்சமான பாதிரி மரம்
- வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதி
- வசிஷ்டர் தனது சனிதோஷம் நீங்க வழிபட்ட தலம்
- பதஞ்சலி, சக முனிவருக்கு காசிக்கு நிகரான தலம் என்று காட்டுவதற்காக தன் தண்டத்தை அவிநாசி காசிக் கிணற்றில் போட்டு, காசியில் கங்கையின் அலைகளால் தண்டத்தைப் பெற்றுக் காண்பித்த கிணறு.
- கேரள நாட்டு அந்தணன் ஒருவன், தான செய்த பாவங்களால் பேய் வடிவம் பெற்று, அது விலக இங்கே வந்து வணங்கி தேவ வடிவம் பெற்று சிவலோகம் செல்லச் செய்த தலம்.
- குருநாத பண்டாரம், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபாடு செய்ய, அரசாங்க அதிகாரிகள் அவர் மகிமை அறியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்த பின், பெரிய மீன் ஒன்றினால் அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பிக்கப்பட்டத் தலம்.
- கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்ட போது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்த போது, அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசி, மந்திரக் கட்டு நீக்கி, தேரை நகரச் செய்தத் தலம்.
- தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோவில் தேர்களில் அவிநாசிக் கோவில் தேரும் ஒன்று.
- இத்தலத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ளவை சேவூர், மொக்கணீஸ்வரம் ஆகிய தேவார வைப்புத்தலங்கள்
- பிற நூல்கள் – கருணாம்பிகைசதகம், கரணாம்பிகை யமக அந்தாதி, கருணாம்பிகை பிள்ளைத்தமிழ்
தலம் | திருப்புக்கொளியூர் |
பிற பெயர்கள் | திருப்புக்கொளியூர் அவிநாசி , திரு அவிநாசி, தட்சிணகாசி, தென்வாரணாசி, தென்பிரயாகை |
இறைவன் | அவிநாசிலிங்கேஸ்வரர்,அவிநாசி ஈஸ்வரர் , அவிநாசிநாதர் , பெருங்கேடிலியப்பர், வாராணஸிக் கொழுந்து |
இறைவி | கருணாம்பிகை, பெருங்கருணைநாயகி |
தல விருட்சம் | பாதிரி மரம் |
தீர்த்தம் | நாககன்னி தீர்த்தம் , காசிக்கிணறு , ஐராவதத் தீர்த்தம் |
விழாக்கள் | சித்திரையில் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரத்தில் முதலைவாய்ப் பிள்ளை உற்சவம் 3 நாட்கள், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா, ஐந்தாம் நாள் உற்சவத்தின் போது ரிஷபாரூடராக திருக்காட்சி |
மாவட்டம் | திருப்பூர் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி |
காலை ௦6:௦௦ முதல் 12:0௦ வரை மாலை ௦4:௦௦ முதல் ௦8:௦௦ வரை அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் அவிநாசி அஞ்சல், அவிநாசி வட்டம் திருப்பூர் மாவட்டம் – 641654 04296-273113, 94431-39503 |
வழிபட்டவர்கள் | வசிஷ்டர், பதஞ்சலி, பிரம்மா 100 ஆண்டுள், இந்திரனுடைய ஐராவதம் 12 ஆண்டுகள், தாடகை 3 ஆண்டுகள், நாகக் கன்னி 21 மாதங்கள் |
பாடியவர்கள் | சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ்1 பதிகம், ஹரிஹரதாரத்ம்யம் என்ற வடமொழி நூல் – ஹரதத்தாசாரிய ஸ்வாமிகள், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு, திருமுருகன்பூண்டியில் இருந்து 5 கிமீ தொலைவு |
இதர குறிப்புகள் |
அருள்மிகு கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர்
புகைப்படம் : இணையம்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 92
திருமுறை எண் 1
பாடல்
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே
பொருள்
புற்றில் வாழ்கின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, மேலான இடமாகிய கைலாயத்தில் உள்ளவனே, அழிவற்றதாகிய திருப்புக்கொளியூரில் உள்ள, ‘அவனாசி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே! ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 92
திருமுறை எண் 4
பாடல்
உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே
பொருள்
உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
விளக்க உரை
- `காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
- உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
- ‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)