
திருநாவுக்கரசர் தேவாரத்தில் பைரவப் பெருமான் குறித்த பாடல்கள்
பாடல்
ஓரோத மோதி யுலகம் பலிதிரிவா னென்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன் சடையானே யென்கின் றாளால்
பாரோத மேனிப் பவள மவனிறமே யென்கின் றாளால்
காரோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவ பெருமானின் அருட்செயல்களை உரைத்து திருமேனி அழகினை விவரித்து அவர் உறையும் தலம் திருக்கழிப்பாலை என உரைக்கும் பாடல்
பதவுரை
ஆராய்ந்து கொள்ளத்தக்க வேதங்களை திருவாயால் ஓதிக்கொண்டு, பிரம்மன் தலையினை கொய்து அதனை பாத்திரமாகக் கொண்டு உலகம் முழுதும் பிஷ்சை ஏற்றுத் திரிகின்றவனே ! கங்கை நீர்வெள்ளம் உயர உயர, அதற்கேற்ப உயர்ந்து தோன்றும் செந்நிறச் சடையினை உடையவனே, உலகைச் சூழ்ந்த கடலில் உள்ள செந்நிறப் பவளம் எம்பெருமானுடைய திருமேனியின் நிறமே என்று கூறுகின்ற பெண் , கரிய கடல்வெள்ளம் மிகுந்து விளங்கும் திருக்கழிப்பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ?
விளக்கஉரை
- ஓர் ஓதம் – ஆராய்ந்து அறிந்து கொள்ளத்தகும் மறைகள்
- ஓது – பாடு; ஓத்து – பாட்டு; ஓதம் – பாடம் .
- நீர் ஓதம் – கங்கை
- பார் ஓதம் – உலகு சூழ் கடல்
- ஓதப் பவளம் – கடலிலுள்ள பவளம்
- மேனிப் பவளம் அவன் நிறமே பவள மேனி
- கார் ஓதம் – கருங் கடல்
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் # திருக்கழிப்பாலை #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள் #பைரவர்
![]()