பாடல்
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
அழகிய பவளம் போன்ற நிறமுடையவரும், செம்மை நிற குன்று போன்றவரும், செவ்வானம் போன்ற நிறமுடையவரும், நெருப்பில் நின்று ஆடியவரும், நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் என்று உலக பஞ்ச பூதங்களாகி அதன் வடிவமாக இருப்பவரும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற உடல் பஞ்ச பூதங்களாகி அதன் வடிவமாகவும் இருப்பவரும், அதில் ஆடுதலை விரும்பிச் செய்பவரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தைக்கு உரியவர் ஆயினார்; ஆதலால் யாம் யாவர்க்கும் எளியோம் அல்லோம்; ஞாயிறு ஆகிய சூரியன் எங்கு எழுந்து எத்திசை உதித்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது யாது? வெம்மை கொடுத்து துன்பம் தரும் இறப்பாகிய மரணம் நம்மேல் நாம் வருந்தும்படி வராது; கொடியதும் துன்பம் தரக்தக்கதான வினையாகிய பகையும் மெல்ல விலகும் பரிவினால் வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; துன்பம் இல்லாதவர்களாக ஆனோம்.
விளக்க உரை
- இத்திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் கூறி அருளியது.
- பைய நையும் – மெல்ல வருந்துகின்ற;
- வெம்ப – நாம் வருந்தும்படி.
- வருகிற்பது அன்று – வரவல்லது அன்று.
- கூற்றம் – அஃறிணை சொல். அது பற்றி `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும்.
- பைய நையும் – மெல்ல வருந்துகின்ற
செம்மை நிறம் பற்றி பவளம் போன்றவர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர் என்று கூறி இருப்பது அம்மை வடிவமாக அருள் கொண்டதைக் குறித்திருக்கலாம். உணர்ந்தோர் பொருள் உரைப்பின் மகிழ்ந்து உய்வேன்.
மூன்று முறைக்கூறக் காரணம் ஏதாகினும் உண்டா? // கவிதை அழகு + இறைவனின் திருவுருவையே எதிலும் காணுதல் – இரண்டும் தான். வேறென்ன காரணம் வேண்டும்? 🙂 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ – ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் : கம்பர் இப்படி ஒரே வரியில் இராமனின் சியாமள வர்ணத்திற்கு நான்கு உவமைகளைக் கூறவில்லையா, அதுபோலவே இதுவும்.
Jataayu B’luru