பாடல்
பூசியே செவ்வரளிப் புஷ்பம்வாங்கிப்
பூரணியே யென்றுமன் துறுதியாகத்
தேசியே கேசரியே தாயேயென்று
தினந்தோறு மந்திரத்தை செபித்துமைந்தா
பேசியே திரியாமல் வாமம்வைத்துப்
பேரான மாமிசமும் வடைதேன்பாலு
வாசியே மனதடங்க அன்னம்வைத்து
மாங்கனியோ வற்கடலை பயிறும்வையே
யோகஞானம் – 500 (முருகப்பெருமான் அகத்தியருக்கு உபதேசம் செய்தது)
பதவுரை
முன்னர் கூறப்பட்டவாறு எந்திரங்களில் வாசனை திரவியங்களைப் பூசி, செவ்வரளி பூக்களை வாங்கி அதன் மேல் சாற்றி, வடை, தேன், பால், வாசி வழி மனம் அடங்க அன்னம், மாங்கனி, வறுகடலை மற்றும் பயிறு தானியங்கள் இவைகளை நைவேத்தியமாக வைத்து மனதில் உறுதிகொண்டு முழுமை அடந்தவளே, மிகவும் அழகு நிரம்பப் பெற்றவளே, சிங்கம் போன்றவளே, தாயானவளே என்று தினம் தோறும் மந்திரத்தை செபித்து, பேசித் திரியாமல் மௌனமாக பூசிக்க வேண்டும்.
விளக்க உரை
- தேசி – பெரிய குதிரை,ஓர் இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்
- வாமம்வைத்துப் பேரான மாமிசமும் –
- மாமிசம் – மா-ம்-இ- சம்
- மா – பெருமை மிக்க
- ம்-இம் எனும் ஊமை மூலம்
- இ-அருட்பிரணவம்
- சம்- சுகம்
- இடது பக்கமாக வாசி செல்லும்படி செய்து பெருமை மிக்கதும் சுகம் தருவதும் ஆன ‘இம்’ எனும் ஊமை மூலம் கொண்டு பூசிக்கவேண்டும். அம்மை ஈசனின் இடப்பாகத்தவள் என்பதை ‘வாமபாகம் வவ்வியதே’ எனும் வரிகள் மூலம் நினைவு கூறலாம். அன்னை மகார வடிவமாக இருப்பதை ‘மகாரப் பிரியை’ எனும் திருநாமம் கொண்டு அறியலாம். மேலும் ‘ம்’ என்பது ஜீவாத்மாவை குறிப்பதாகும்; ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும். இவ்வாறு பூசிக்க வேண்டும் எனவும் கொள்ளலாம்.
மா சக்தி நிறைந்தவளான அன்னை பூசை பற்றியதாலும், முருகனே அகத்தியருக்கு உபதேசிப்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.