பாடல்
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.
விளக்க உரை
- நடலை – துன்பம்
- சுடலை – இடுகாடு
- ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்