பாடல்
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
தாம் மனத்தால் விரும்பியவாறு நடக்கும் வெண்மை நிறக் காளையில் ஏறி, உலகியலுக்கு வேறுபட்ட பெருமானாக இருப்பவரும், தூண்டப்பட்ட விளக்கு போன்று ஒளி பொருந்திய பிரகாசம் உடைய திருமேனியில் திரு வெண்ணீறு அணிந்து, சூலத்தைக் கையில் ஏந்தி, நீண்டு சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு, பொறிகளில் ஒன்றான காதிலும் பாம்பினை அணிகலனாகப் பூண்டு, பொன் போன்ற சடைகள் நீண்டு தொங்குமாறு, பூணூல் அணிந்தவராய், நீண்டு நெடுஞ்சாண் கிடையாக விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி, வெண்காடு எனும் திருவெண்காட்டுத் தலத்தை விரும்பி அடைந்து, அதன் நீண்ட தெருக்களின் வழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
விளக்க உரை
- பொற்சடைகள் – பொன்போலும் சடைகள்
- வேண்டும் நடை – அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும், மெல்லென்றும், தாவியும் நடத்தல். ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் என்பது உண்மைப் பொருள்.
- விகிர்தன் – உலகியலுக்கு வேறுபட்டவன்.