அமுதமொழி – சார்வரி – ஆனி – 25 (2020)


பாடல்

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
     உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
     விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
     பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
     கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே

அகஸ்தியர் ஞானம்

கருத்து – யோக நெறியில் துரியம் தாண்டி துரியாதீதத்தில் நிலை பெற மூலாதார மூர்த்தியாக கணபதியைக் காணுதலே முதன்மையானது என்பதையும் அதுவே ஞானத்தினை தரும் என்பதையும் விளக்கும் பாடல் பாடல்.

பதவுரை

அண்ணாக்கு எனப்படுவதும், கூடத்தக்கதான இடமும் ஆன உச்சிவெளி ஆகிய துரியம் தாண்டி துரியாதீதத்தில் நின்று(அஃதாவது பர ஆகாசத்தில்), உமையவளுக்கும், கணபதிக்கும் முற்பட்ட காலமான காலத்தில் ஒளி பொருந்தி நிற்கக் கூடியதான அம்பரம் எனப்படும் சிற்றம்பலத்தில் அகாரமும், உகாரமும் சேர்ந்ததானதும் எல்லாவற்றிற்கும் மேலானதுமான பரம் எனும் நிலை சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு எட்டாது;  வேதவடிவமாக இருக்கக்கூடியதான உன்னுடைய உயிர்தான் சிவ வடிவம் என்று  உணர்ந்தும், பாற்கடலில் பள்ளி கொண்டவன் வடிவம் மேக வடிவமாக உணர்ந்தும், போற்றத் தக்கதான கணபதியினை அகக்கண்ணில் கண்டுவிட்டால் இந்த உடலில் உயிருடன் கலந்து மேலே குறிப்பிட்ட ஞானம் கிட்டும்.

விளக்க உரை

 • அகத்தியர் புலத்தியருக்கு உரைத்தது.
 • உமையும், கணபதியும் சக்தியின் வடிவங்கள், ஆதார சக்கரங்களில் மூலாதாரத்தில் கணபதியும், மணிபூரகத்தில் திருமாலும், ஆஞ்ஞையில் சதாசிவமும் வீற்றிருப்பது அறியத் தக்கது.
 • ஒண்ணுதல் – இயலுதல், தக்கதாதல், கூடுதல், ஒளியுடைய நெற்றி

சித்தர் பாடல் என்பதாலும் மனித பிறப்பு சிறுமை உடையது என்பதாலும் பிழை ஏற்பட்டு இருக்கலாம். பிழை எனில் பிறப்பு சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 16 (2019)


பாடல்

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிரும் உருக்கொண்ட தென்னே – அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்

பதினொன்றாம் திருமுறை – நம்பியாண்டார் நம்பிகள் – விநாயகர் இரட்டை மணிமாலை

கருத்துசிவனின் மகனான விநாயகர்  திருமேனி தன் சிறப்புக் கூறல்.

பதவுரை

சேற்றினை உடைய வயல்களை சார்ந்ததும், நிலை பெற்றதான நீர் நிலைகளில்  ஆரல் எனும் மீன் வகைகளை கொண்டதுமான திருநாரையூர் எனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் திருநாரையூர்ச் சிவபெருமான் மகன் களிறு முகம் உடையவன் ஆனவனாகவும், அவனது காயம் ஆகிய திருமேனி செந்தீயைப்போல ஒளிவிடுகின்ற நிறத்தைக் கொண்டிருப்பது என்னே வியப்பு

விளக்க உரை

 • அளறு – சேறு
 • ஊர் ஆரலை – நாரை உண்கின்ற நீர் நிலை
 • ஆரல் – மீன் வகை
 • படுகர் – நீர் நிலை
 • மன் – நிலை பெற்ற

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 11 (2019)

பாடல்

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்

பதினொன்றாம் திருமுறை –  மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்

கருத்துவாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது  ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி  உரைக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து  ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.

விளக்க உரை

 • அமர்தல் – விரும்புதல்
 • இடி – மா.
 • கன்னல் – கரும்பு

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – 4. வீர கணபதி

 

வடிவம் சிறிது சினந்த திருமுகம்
மேனி வண்ணம் சிவந்த மேனி
திருக்கைகள் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி கொண்ட பதினாறு திருக்கரங்கள்
பலன் வழிபடும் பக்தர்களுக்கு தைரியம், வீரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை தருபவர்.
மற்றவை சில வட இந்திய வடிவங்களில் நான்கு திருக்கரங்களுடன் வில், சூலம், பாசம் மற்றும் அங்குசம் கொண்டு காணப்படுகின்றன.

 

மந்திரம்

வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க
கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்|
ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்
வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி||

விளக்கம்

வேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – 3. சக்தி கணபதி

புகைப்படம் : திருவாடுதுறை ஆதினம்

 

சக்தி கணபதி

வடிவம் பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலம். தேவியும் அவ்வாறே பரஸ்பரம் தழுவிக் கொண்டிருப்பார்.
மேனி வண்ணம் மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவர்
திருக்கைகள் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கி அஞ்சேல் எனும் அபயகரமும் உடையவர்
பலன் வழிபடும் பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவர்

 

மந்திரம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய:|
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே: ||

விளக்கம்

மாலை நேர செவ்வந்தி வானம் போன்ற நிறம் உடையவராகவும், பச்சை நிறமான தேவியை தழுவிக் கொண்டவராகவும், அவ்வாறே தேவியாலும் பரஸ்பரம் தழவிக் கொள்ளப்பட்டவராகவும், பாசம், பூமாலை இவற்றை தாங்கிய திருக்கரத்துடன் அபய முத்திரை கொண்டிருப்பவருமான கணபதியை வணங்குகிறேன்.

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – 2. தருண கணபதி

தருண கணபதி

 

ஒவியம் : இணையம்

 

வடிவம் யானை முகம், எட்டுத் திருக்கரங்கள்
மேனி வண்ணம் நண்பகல் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனி
திருக்கைகள் எட்டுத் திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன் வைத்து ஒவியங்கள் / சிற்பங்கள்

பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு

பலன் தியானம் கைகூடுதல்

மந்திரம்

பாசாங்குசா பூபகபித்த ஜம்பூ
ஸ்வதநதசாலீஷூமபி ஸ்வஹஸ்தை:|
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுக்ஷ்மாந் தருணோகணேச : ||

விளக்கம்

கைகளில் பாசம், அங்குசம், அபூபம்(அப்பவகை), விளாம்பழம், நாவல்பழம், தனது ஒரு தந்தம், நெற்கதிர் மற்றும் கரும்பு ஆகிய இந்த எட்டு பதார்த்தங்களையும் வைத்துக் கொண்டிருப்பவரும், நண்பகலில் விளங்குகின்ற கதிரவனின் ஒளியைக் கொண்டவருமான தருண கணபதி எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றுவாராக.

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – 1. பால கணபதி

பால கணபதி

 

வடிவம்

1.    விநாயகரின் தாயான பார்வதியும், தந்தையாகிய சிவனும்  பால கணபதியை திருமஞ்சனம் செய்வது போலவும் கொண்ட வடிவம்

2.    பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போன்ற வடிவம்

3.    தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் கொண்ட வடிவம்

4.    யானைமுகம், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் பூமாலை, தும்பிக்கையில் மோதகம் அல்லது விளாம்பழம்

மேனி வண்ணம் உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் / பொன்னிற மேனி
திருக்கைகள் நான்கு திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன்னிருத்தி ஒவியங்கள் / சிற்பங்கள்

வகை 1 – மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம்

வகை 2 – வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்(சில இடங்களில் பூங்கொத்து), கரும்பு

பலன் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், குழந்தையைப் போன்ற மகிழ்வு, நல்ல உடல்நலம்
மற்றவை கணபதியைச் சிறு பிராயத்தினராகக்கொண்டு வழிபடுவதற்கான வடிவம். பால = இளம், சிறு பிராயம்.
சில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்சி

 

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்ரா ஓவியத்தில் பால கணபதி

 

பால கணபதி2

புகைப்படங்கள் : விக்கிப்பீடியா

மந்திரம்

கரஸ்தகதளீசூத பனஸே க்ஷூக மோதகம்/
பால ஸூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணாபதிம்//

விளக்கம்

வாழைப்பழம், மாப்பழம், பலாப்பழம், கரும்பு, மோதகம் இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பால சூரியனைப் போன்ற சரீர காந்தியை உடையவருமான பால கணபதியை வணங்குகின்றேன்.

 

(மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதால் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குரு அருள்)

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – கணபதி – முன்னுரை

கணபதி_intro

ஒவியம் : இணையம்

உலகின் ஆதி முதல்வனும், ஓங்கார நாயகனும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமானவராகவும், மூலாதார மூர்த்தியாகவும், கருணையே வடிவானவராகவும், எல்லை அற்ற பரம் பொருளும், நினைத்தை நினைத்தவாறு நிகழ்த்த அதை கூட்டிவைப்பவரும், சகல உயிர்களிடத்தும் தயை, அன்பு, கருணை ஆகியவற்றை சமமாக வழங்குபவரும், தானே மெய்பொருளாகவும் பிரபஞ்சப் பொருளாகவும் இருந்து சகல உயிர்களிடத்திலும் வழங்குபவராகவும், பற்றாப் பொருளையும் பற்ற உறுதுணை செய்பவராகவும், தானே அப்பொருளாகவும், அகப்பொருளாகவும் இருப்பவரும் கால நேரம் கடந்தவராகவும், அனைத்திலும் கருப்பொருளாகவும், மகாபாரதத்தை எழுதிய நாயகனும் ஆக இருக்கும் கணபதியை குறித்து இத் தொடர் எழுத விழைகின்றேன்.

குரு அருள் கணபதியோடு தொடர்பு உடையது ஆனதால், குருவருள் தாள் பற்றித் தொடங்குகிறேன்.

அவரவர் ஞான நிலைக்கு ஏற்றவாறும் குரு உபதேசம் மூலமாகவும், ஷோடசம் முன்வைத்து 16 வடிவங்கள் என்றும், அழியாமை குறித்து 32 வடிவங்கள் என்றும், அட்ஷரங்கள் குறித்து 51 வடிவங்கள் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொதுத் தன்மைப் பற்றி இங்கு 32 வடிவங்கள் விளக்கப்படுகின்றன.

 • பலன்
 • மேனி வண்ணம்
 • வடிவம்
 • கைகள்
 • தொடர்புடைய கோவில்கள்
 • மற்றவை

1. பால கணபதி
2. பக்த கணபதி
3. ஸக்தி கணபதி
4. ஸித்தி கணபதி
5. உச்சிஷ்ட கணபதி
6. க்ஷிப்ர கணபதி
7. விக்ந ராஜ (விஜய) கணபதி
8. ஸ்ருஷ்டி கணபதி
9. ருணமோசந கணபதி
10. டுண்டி கணபதி
11. த்விமுக கணபதி
12 .யோக கணபதி
13. ஏகதந்த கணபதி
14. ஹேரம்ப கணபதி
15. ந்ருத்த கணபதி
16. ஹரித்ரா கணபதி
17. தருண கணபதி
18. வீர கணபதி
19. த்வஜ கணபதி
20. விக்ந (புவநேச) கணபதி
21. ஊர்த்வ கணபதி
22. லக்ஷ்மீ கணபதி
23. மஹா கணபதி
24. ஏகாக்ஷர கணபதி
25. வர கணபதி
26. த்ரயாக்ஷர கணபதி
27. க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி
28. உத்தண்ட கணபதி
29. த்ரிமுக கணபதி
30. ஸிம்ஹ கணபதி
31. துர்கா கணபதி
32. ஸங்கடஹர கணபதி

(மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதால் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குரு அருள்)

சமூக ஊடகங்கள்