பாடல்
சோதர வழியால் வருவினையும்
தொக்கு வழியால் வருவினையும்
தொடருஞ்சட்சு வழியாலும்
சொல்நா வுடனே ஆக்ராணம்
பார்த்த வழியிற் கரணமதைப்
பற்றி உயிரைக் கலங்கடித்துப்
பண்ணும் வினையும் வெகுகோடி
பாழ்போனதுவும் வெகுகோடி
ஆற்றில் கரைத்த புளிஎனவே
ஆயிற்றொருவர்க் குதவியின்றி
அடியேன் முன்னாள் ஒருவருக்கும்
ஆகாதவனோ அதை இனித்தான்
மாற்றவகையும் அறியாயோ
வகுத்த எனையும் மறந்தாயே
மயிலாபுரியில் வளரீசன்
வாழ்வே அபயாம்பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் சேர்ந்து, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றுடன் கூடியதான அந்தக்கரணங்கள் பற்றியும் பிற உயிர்களை பற்றிக் கலங்கடிக்குமாறு செய்து செய்கின்ற வினைகள் எண்ணிக்கை அற்றவை. இவ்வாறான வினைகளை செய்து வீணாக்கிய வாழ்நாட்களும் எண்ணிக்கை அற்றவை. ஆற்றில் கரைத்த புளி போல் குறிக்கோள் இல்லாமல் கரைந்து போகாமல் யாருக்கும் உதவி இன்றி, எல்லோரிடத்திலும் பேதப்பட்டு இருந்த நிலையை மாற்றித் தரும் வகையை நீ அறிய மாட்டாதவளா? அவ்வாறு நீ வகுத்த அந்த வகையில் இருந்து வரும் என்னையும் மறந்து விட்டாயோ?
விளக்க உரை
- வினை பற்றி குறிக்கோள் இல்லாத வாழ்வினை மாற்ற வேண்டி அன்னையிடம் விண்ணப்பித்தல்